மியாவ் இன்றி தவிக்குது இல்லம் -சந்தோஷ்

வாங்கி வைத்த
கருவாடுகள் எல்லாம்
மண்பானைக்குள்
சமாதியாகிக்கொண்டிருக்கின்றன.

வீட்டில் கொதிக்கும்
மீன் குழம்பின் நறுமணமும்
வாசல் வரைச் சென்று
ஏமாந்துத் திரும்புகிறது.

வரவேற்பரை
சோபா விரிப்புக்களெல்லாம்
தன்னை கலைத்துவிளையாடும்
நண்பனைத் தேடித்தேடி
ஏங்குகின்றன.

சப்தமாய் விசிலடித்து
இரண்டு லிட்டர் ஆவின் பாலை
காய்ச்சிய பால் குக்கர்
இன்று
அரைலிட்டருக்கு கூட
விசில் விட திணறுகிறது.

பயந்து ஒளிந்துக்கொண்டிருந்த
எலிகள்
அதன் மீசைகளை தடவிக்கொண்டே
அரிசி சாக்குப்பையினைக்
கிழித்து நாறாக்கி நூலாக்கி
பஞ்சாக்கி ரணகளம் செய்கிறது.

தலைமறைவாகியிருக்கும்
எனதருமை கருப்புவெள்ளை
’பூஜாக்குட்டி’ பூனையே...
எங்கே.. நீ எங்கே...?
பத்து நாட்களுக்கு முன்
பக்கத்து தெரு கிழட்டுச்
சாம்பல் பூனையுடன்
சண்டையிட்டு வெற்றிக்கொண்டாயே..
உன் வீரத்திற்கு
கோழிக்கால் பரிசளித்தேனே...!
நினைவிருக்கிறதா... ?

இப்போது எங்கே சென்றாய்.. ?
எவர் உனை சிறைப்பிடித்தார்..?
எந்தக் கோணியில் கைதியாகினாய்?
உன் ஜோடிப் பூனையுடன்
ஹனிமூன் சென்றாயோ ?
எதிரி நாய்கள் துரத்தி..
வழித்தவறி பாதைவிலகி
எங்களை மறந்துப்போனாயோ...?

நீயில்லாத தைரியத்தில்
கரப்பான் பூச்சிகள் கூட
ராஜாங்கம் நடத்துகிறது
நீ உறங்கிகொண்டிருந்த
அடுப்பங்கரைச் சாம்பலில்..!

எங்கே.. நீ எங்கே... ?
பூஜா பூனையே...
எங்கே நீ எங்கே.. ?
உன் மியாவ்
சங்கீத மெட்டுக்காக
காத்திருக்கிறது
நீயில்லாத நம் வீடு...!



-- எங்கள் இல்லத்தில் செல்லமாக வளர்ந்துக்கொண்டிருந்த பூஜா என நாங்கள் அழைக்கும் பூனை காணாமல் போனப்போது ஒரு தாளில் எழுதிய பதிவு. . --

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (13-Sep-15, 6:15 pm)
பார்வை : 118

மேலே