நான் யாருக்கும் சொந்தமில்லை
முகிலினங்கள் முத்தமிட்டபோது
முத்துமுத்தாய் வியர்த்து
மழையெனத் திரிந்து
மண்ணிற்கு வந்து சேர்ந்தேன்
- நான் வானுக்கும் சொந்தமில்லை
-
மண்ணோடு மணம்புரிந்து
என்னோட நிறம் மாறி
எட்டியிருந்த குட்டையிலே
எப்படியோ போய்ச் சேர்ந்தேன்
- நான் மண்ணுக்கும் சொந்தமில்லை
-
குட்டையிலே கொஞ்சநேரம்
குழம்பியபடி கூடியிருந்தேன்
குட்டையும் நிரம்பிவிட
ஓடையிலே வழிந்துவிட்டேன்
- நான் குட்டைக்கும் சொந்தமில்லை
-
ஓடையிலே ஓடிச்சென்று
ஓடிக்கொண்டிருந்த
ஆற்றினிலே அமிழ்ந்துவிட்டேன்
- நான் ஓடைக்கும் சொந்தமில்லை
-
ஆற்றினிலே அலைந்து சென்று
ஆதரவாய் கிடைத்த
அணைக்கட்டை
அடைந்துவிட்டேன்
- நான் ஆற்றுக்கும் சொந்தமில்லை
-
அணைந்து வைத்திருந்த
அணைக்கட்டும்
அடிமடை திறந்தவுடன்
நதியினிலே விழுந்துவிட்டேன்
- நான் அணைக்கும் சொந்தமில்லை
விதியின் வழியென்று
நதியினிலே நகர்ந்து சென்று
நடுக்கடலை அடைந்துவிட்டேன்
- நான் நதிக்கும் சொந்தமில்லை
-
சுட்டெரிக்கும் சூரியனின்
சூட்சுமத்தால் என் ஆவி போக
மேகமாய்ச் சென்று
மீண்டும் சேர்ந்தேன் வானத்திலே
- நான் கடலுக்கும் சொந்தமில்லை
நீரும் நானும் யாருக்கும் சொந்தமில்லை