மருமகள்

மருமகள்
"என்ன அண்ணா ஆச்சு திடீர்னு?" என்று கேட்ட கவிதாவிடம் "தெரியலம்மா.. நல்லா தான் இருந்தாங்க. திங்கட்கிழமை காலைல ஏதோ சத்தம் கேட்டு ரூமுக்கு போய் பார்த்தா, கீழே விழுந்து மயக்கமா இருந்தாங்க. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணப்போ டாக்டர் பக்கவாதம்னு சொல்லிட்டார்" வருத்தத்தோடு சொன்னான் அண்ணன் சங்கர்.
ஒரு பக்கம் கை, ஒரு கால் வராமல், வாயும் பேச முடியாமல், படுத்த படுக்கையாய் இருந்த அம்மா'வை பார்த்து கண் கலங்கினாள் கவிதா.
"இப்ப எப்படிம்மா இருக்கு? எனக்கு விஷயமே நேத்துதாம்மா தெரியும். மனசே கேக்கல. அதான் ஓடியாந்தேன். கவலைப்படாதம்மா எல்லாம் சரியாகிடும்." என்று சொல்லிவிட்டு "அண்ணா.. அம்மாவை பத்திரமா பார்த்துக்க. இவருக்கு லீவ் இல்லை அண்ணா, உடனே கிளம்ப வேண்டி இருக்கு. கூட இருந்து பார்த்துக்க முடியலன்னு தான் கஷ்டமா இருக்கு. பார்த்துக்கோ..." என்றாள்.
"சரிம்மா... நீ கவலப் படாத. நாங்க பார்த்துக்கறோம்." என்று சொல்லிவிட்டு கைபேசியை எடுத்து கொண்டு நகர்ந்தான் சங்கர்.
"கவி அப்செட் ஆகாத. வேணும்'னா அம்மா'வ நம்ம கூட கூட்டிட்டு போயிடலாம். அவங்களுக்கும் ஆறுதலா இருக்கும், உனக்கும் பக்கத்துல இருந்து பார்த்துகிட்ட மாதிரி இருக்கும்... என்ன சொல்ற??" என்றான் கவிதாவின் கணவன்.
"அட சும்மா இருங்க. உங்களுக்கும், பிள்ளைகளுக்கும் வேலை செய்தே மூச்சு முட்டுது, இதுல இவங்கள கூட்டிட்டு போய் என்ன செய்ய? கிளம்பற வழிய பாருங்க." என்று கவிதா முணுமுணுத்தது ராஜம்மா காதில் விழுந்தது.
மகளின் பேச்சை கேட்டு அதிர்ந்து போயிருந்த ராஜம்மாவின் அருகே வந்த வாணி, அவர் சிறுநீர் போன துணியை மாற்றிவிட்டாள். உணவு ஊட்ட ஆரம்பித்தாள். அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராஜம்மா.
"என்னடி 8 மணி வரைக்கும் கீழே வரல? என் பொண்ணு ஊருல இருந்து வருவா.. இன்னைக்கு சமையல் வேலை தலைக்கு மேல கெடக்குன்னு நேத்தே சொன்னேன்ல... அம்மா வீட்டுல இருந்து வந்து இன்னும் ஒண்ணும் வணங்கலயா உனக்கு?"
"இல்லேம்மா.. குழந்தை ராத்திரி முழுக்க தூங்காம அழுதுகிட்டு இருந்தா. அவளை தூங்க வைக்க விடிஞ்சுடுச்சு. அதான் நானும் கண்ணசந்துட்டேன். இப்போ முடிச்சுடறேம்மா வேலையை." என்ற வாணியை, "அம்மா'னு கூப்பிடாதன்னு எத்தன முறை சொல்லிருக்கேன் உனக்கு... அத்தைனு பயமும் மரியாதையும் இருக்கட்டும் மனசுல. உன் வீட்டுல தூங்குற மாதிரி 8 மணி வரை தூங்குறதுலாம் புகுந்த வீட்டுல வெச்சுக்காத. இங்க கோழி கூவுறதுக்கு முன்னாடி எழுந்து வேலைய பாக்கணும். இன்னைக்கு தான் கடைசி..." என்று 3 மாத குழந்தையோடு வந்திருந்த வாணியிடம் தான் கத்தியது இன்றும் நினைவிருக்கிறது ராஜம்மாவுக்கு. அன்றிலிருந்து வாணி அத்தை என்றே அழைக்கிறாள்.
"வாணி... அம்மா'வ பார்த்துக்க வேலைக்கு ஆள் சொல்லி இருக்கேன். நாளைக்கு வருவாங்க" என்ற சங்கரின் குரல் கேட்டு திரும்பினாள் வாணி.
"எதுக்குங்க? நான்தான் இருக்கேன்ல.. அத்தையை நான் பார்த்துக்குறதை விடவா அவங்க நல்லா பார்த்துக்குவாங்க? வேணாம்'னு சொல்லிடுங்க. நானே கவனிச்சுக்கறேன்." என்று சொல்லிவிட்டு உணவு கொடுத்து முடித்து விட்டு எழுந்தாள்.
போகின்ற வாணியை பார்த்து, "அம்மா வாணி.. நீ என் மருமக இல்ல, மக. உன் அன்பை புரிஞ்சுக்காம எவ்வளவு காயபடுத்திருக்கேன் உன்னை. மன்னிச்சுடும்மா என்னை. இனி வாய் நிறைய என்ன அம்மா'னு கூப்பிடும்மா... தயவு செய்து அம்மா'னு கூப்பிடும்மா..." என்ற ராஜம்மாவின் கண்கள் பனித்தது, உதடுகள் துடித்தது. வார்த்தைகள் வரவில்லை!

எழுதியவர் : பிதொஸ் கான் (18-Sep-15, 7:13 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
Tanglish : marumagal
பார்வை : 237

மேலே