நாட்குறிப்பின் ஒரு பக்கத்தில் இருந்து

நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் எல்லாரும் சாதனையாளர்களாகவோ அல்லது மிகபெரிய மனிதர்களாகவோ இல்லாமல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடத்தும் ஏதோ ஒன்று நம்மை அவர்களோடு பிணைத்து விடுகிறது அதுதான் அன்பு.

கல்லூரி வாழ்வின் மோசமான மற்றும் இனிமையான பகுதி ஹோஸ்டேல். பலருக்கு இங்கேதான் வாழ்வின் முரண்கள் புரியும். என் கல்லூரி ஹோஸ்டேளின் இந்த இரண்டாண்டு வாழ்க்கை மொழி இனம் நாடு அப்பாற்பட்டு பல மனிதர்களை எனக்கு அறிமுகபடுத்தியது.

மெஸ், வீட்டை நமக்கு அடிக்கடி நினைவு படுத்தும். மெஸ்ஸின் ஓரம் தட்டை ஏந்தி நிற்கும் போதுதான் நம்மில் பலருக்கு தாயின் நியாபகம் வரும். இங்கே அன்பை எதிர்பார்ப்பது முற்றிலும் கடினம். இன்று சாப்பிடவில்லை என்றால் மெஸ்க்கு 20 ரூபாய் வரவே தவிர வேறொன்றும் இல்லை.

பாய் பாட்டி, எங்கள் சீனியர்களுக்கு மற்றுமொரு பாட்டி. நாங்கள் முதலாம் ஆண்டு வந்தது முதல் எங்களிடம் நன்றாக பழக ஆரம்பித்தார்கள். பல உடல் கோளாறுகளில் நாங்கள் அவதியுறும் போதும், நாங்கள் சாப்பிடும் வேளையில் "சாப்பிடு" என்று குட்டு வைப்பதிலும் குறை வைத்ததில்லை அவள். தமிழ் தெரியாத என் சகாக்கள் உடன் அவள் பேசுகின்ற தமிழ் அவர்களின் ஆங்கிலத்தை அன்பால் வீழ்த்தி அவர்களை தமிழில் பேச வைக்கும்.

இயந்திரத்தனமான மனிதர்கள் நடுவே அன்போடு இருந்த ஒரே ஜீவன் அவள் மட்டுமே. அந்த இயந்திரங்களின் முன் இவள் பாசம் தோற்று போனது. இயந்திர மனிதர்களின் பேச்சுக்கு இவள் ஆளானாள்.

மூன்றாம் ஆண்டு முதல் வாரம் மெஸ்ஸில் அந்த பாட்டியை காணவில்லை. அவர்கள் வேறோரு வேலைக்கு சென்று விட்டார்கள் என்று அறிந்தோம். இங்கு அவர்கள் பலரின் இழி மொழிகளை தினமும் கேட்பதை விட எங்கேயாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று சந்தோசம் பட்டோம்.

கடந்த வாரம், விடுமுறைக்காக ஹோஸ்டேளில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டேன். வழியில் அந்த பாட்டியை மீண்டும் சந்தித்தேன். என்னை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. பாட்டி என்னை நினைவிருக்கிறதா, மெஸ்ஸில் உங்களை பார்த்து இருக்கிறேன். என்று சொன்னதும் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது. நல்ல இருக்கீங்களா பாட்டி? என என் பேச்சை தொடர்ந்தேன். ஏதோ இருக்யேன்யா. மெஸ்ஸில் இருந்து என்னை மாத்திட்டாங்க. இப்போ லேடீஸ் ஹோஸ்டேல்ல கூட்டி பெருகுற வேலை செஞ்சிட்டு இருக்கேன். உடம்புக்குதான் இந்த வேலை ஒத்துக்களை என்று கையை காண்பித்தாள். என் கண் கலங்கியது எங்களில் பலருக்கு அன்னம் புகட்டிய கைகளின் நிலையினை கண்டு.
எங்கே போற அய்ய என்றாள். வீட்டுக்கு பாட்டி என்றேன். பாத்து பத்திரமா போய்ட்டு வாய. நேரம் ஆகுது. எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான், என் பிள்ளை என்னை கூடிய சீக்கிரம் வேலையில் இருந்து நிப்பாடிடுவான் என்றாள்.

கனத்த மனதோடு மெல்ல நகர்ந்தேன். பல கேள்விகள் மனதோடு,
யாரை குறை கொள்வது, அந்த பாட்டி பெற்றெடுத்த பிள்ளையையா? மௌனமாய் இருந்த என் மனதையா?
இயந்திர மனதிர்களிடம் தோற்றுபோன அவளின் பாசத்தையா ?

இந்த உலகில் ஒவ்வொரு உயிர்களிடத்தும் அன்பு என்ற ஒன்று நம்மை வாழவைத்து கொண்டு இருக்கிறது. எங்கே அன்பு வீழ்கிறதோ, அங்கே மானுடம் சாகிறது .

நாட்குறிப்பின் ஒரு பக்கத்தில் இருந்து.................
ச. டோமேசன்

எழுதியவர் : ச. டோமேசன் (24-Sep-15, 5:43 pm)
சேர்த்தது : டோமேசன்
பார்வை : 127

மேலே