காதலுக்காகக் காதலையே கொடு

வெகு நாளைகுப் பிறகு மிக நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து ஃபோன் . நாளைக்குத் திருச்சிவரைப் போகவேண்டும் கூட வர முடியுமா ? எனக் கேட்டார் . கேட்ட அவர் குரலில் ஒருவித அயற்சியும் சங்கடமும் கலந்து இருந்தது.எனக்குச் சமீபத்தில் இருக்கும் பொறுப்பு பற்றி அவருக்கும் தெரியும் இருந்தாலும் அவர் அப்படிக் கேட்பதில் அவருடன் நான் இருக்க வேண்டிய ஏதோ ஒரு அவசியம் இருக்கிறது .பதிலுக்கு அவரிடம் ஏதோ கேட்க நினைத்தேன் .ஆனால் உடனே சரி என்று சொல்லிவிட்டு என் வேலைக்குள் மூழ்கிப் போனாலும் வேறு ஏதாவது ஃபோன் வரும்போதெல்லாம் நண்பரிடம் எதற்கும் என்று கேட்டு இருக்கலாம் என்று பல முறை நினைவுகள் கரை மோதும் அலைகள் போல வந்து, வந்து போனது .

என் நண்பர்கள் இப்படித்தான் .சந்தோசமாய் இருக்கும் போது விடவும் சங்கடமாக அல்லது முடிவெடுக்கும் தயக்கம் இருக்கும் போது என்னுடன் தங்கள் நேரத்தைச் செலவிட விரும்புவார்கள் .அது ஏன் என்பதை எனக்குள் கேட்டுக்கொள்வேன் .ஒரே பதில் அதைத்தான் நானும் விரும்பி இருக்கிறேன் என்பதாக எனக்கு என் மனது சொல்லி விடும் .இது இன்று நேற்று அல்ல 30 வருடமாகத் தொடரும் நட்பு ஊர்வலத்தின் தொடர்ப் பயணம் ...

திரைபடத்தில் ’எண்ட் கார்டு’ போட்டது சில நட்புக்கள் வேறு வித சூழ்நிலையால் கரை ஒதுங்கிவிடும் .பல வருடங்களுக்குப் பிறகும் ஏதாவது ஒரு சந்திப்பில் அதே நட்பு ஒரு வித பெருமூச்சுடன் மீண்டும் தத்தித் தத்தியாவது தொடரும்.இப்படித்தான் பல வருட இடைவெளிக்குப் பிறகு கூட என்னை விடச் சில வயது இளைய நண்பன் ஒருவன் ஊர் விட்டு வீடு தேடி வந்தான் .வந்த சில அரைமணிக்குள் வா மேலே போய்ப் பேச வேண்டும் என்றான்.மொட்டை மாடியில் காற்று வாங்க போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டுப் போனால் இரவு ஒன்பதுக்குத் தொடங்கிய பேச்சு ஒரு மணிக்கும் மேலும் நீண்டது .


விசயம் இதுதான் .நண்பணுக்கு நல்ல சம்பாத்யம் .அற்புதமான மனைவி குழந்தைகள் ,நிறைவான வாழ்க்கை .இதெல்லாம் விட ஊரில் உள்ள எல்லாச் சிவாலயங்களுக்கும் தேடித் தேடிப் பண உதவி செய்பவன். இது அவன் இங்கு என்னைத்தேடி வரும் சில வாரங்களுக்கும் முன்வரை .இப்போது அவனுக்கு ஒரு சிக்கல் யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது இதற்குத் தான் காரணமில்லை என்பதான ஒரு புளுகு மூட்டை என் தோளில் ஏற்றி வைத்தாலும்,இதுத் தவறு என்று அவன் மனதில் உள்ளுணர்வுக் சதா கூக்குரலிட்டு இருக்கிறது.அதனால் அவனுக்குச் சாதகமாக ஏதாவது சொல்வார்கள் எனத் தெரிந்து கொள்ள ஜாதகர்கள் ஒருவரிடமல்ல மூவரிடம் போயிருக்கிறான் எல்லோரும் ஒரே மாதிரி அவனுக்கு நடக்கும் தசா மற்றும் புத்திக்குப் பெண்களால் அவமானம் என்ற ஒரே ஒரு வாக்கியம்தான் சொல்லியிருக்கிறார்கள் .அந்தப் புயலில் சிக்கிய கப்பல்தான் என் வீட்டு வாசலுக்குக் கரையேற்றி என்னைத் மீண்டும் தேடி வரவைத்து இருக்கிறது .அதனால் நான் அப்படி ஆள்களுக்குக் குறிச் சொல்லுபவனோ குடுக் குடுப்பை ஆட்டும் ஆள் அல்ல .எல்லாச் செயலுக்கும் விளைவுகள் காத்து இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லாதவன்.அது மட்டுமல்ல .எண்ணங்கள் எனபது விதை.யாரோ நினைத்தால் மட்டும் வளர்வதில்லை.செயல்படுத்த முடியாத அதற்குத் திராணியில்லாத பலரின் எண்ணங்களின் கொத்து எவன் கழுத்திலாவது மாலையாக விழுந்து யாரோ ஒருவனை மேடையேற்றி வேடிக்கப் பார்க்கும்!


நாம் இப்படி இருக்கப் பல பேரின் நல்ல எண்ணமும் அதற்கு எதிரான எண்ணமுமே காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. என்பதால் அவன் பேசியதைக் கேட்டு விட்டு நான் சொன்னச் சில ஆலோசனைகளை அவன் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை .என் நோக்கமும் அதுதான். எது அவனுக்குச் சரி என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்.சொல்லிவிட்டேன்.கேட்பது அவன் சொந்த விசயமே ! இதில் ஒரு ப்ளஸ் என்னவென்றால் அவன் வாரம் ஒருமுறை போனில் பேசுகிறான் .தொடர்பு மீண்டுள்ளது.

நண்பர் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்த பெரியவரைப் பார்த்து வணக்கம் சொன்னார்.பெரியவர் ஏற்கனவே பேசிக்கொண்டு இருந்தவருக்கு விடைக் கொடுத்து விட்டு,எங்களைப் பார்த்துத் திரும்பி, நண்பரை உற்றுப் பார்த்து நீங்க...என்று லேசாய் இழுத்தார்.நண்பர்த் தன் அண்ணன் பெயரைச் சொன்னார்.உடனே பெரியவர் முகம் பிரகாசம் ஆகி .அடடே நீங்களா என்று கைகளைப் பிடித்தார்.அடுத்த சில நொடிகளில் அவர் முகம் சோகம் தொற்றிக்கொண்டதைக் கவனித்தேன்.உள்ளே போய் அவளைப் பார்த்து விட்டு வாங்க என்றார்.நண்பர் என்னைப்பார்த்து .இவர் சாந்தி அப்பா என்றார் நண்பர் .நான் யார் சாந்தி என்று யோசித்துக் கொண்டே அவருக்கு வணக்கம் சொன்னேன்.எனக்கும் வணக்கம் சொன்னவர் நண்பரைப் பார்த்துக் கூட்டிடு .உள்ளே போங்க என்றார் மீண்டும்.

வாசலைக் கடந்தவுடன் பெரிய ஹால் வரவேற்றது .அங்கும் பல பெண்கள் உட்கார்ந்து இருந்தார்கள் .ஆச்சர்யமாய் மெல்லப்பேசிக்கொண்டு இருந்தார்கள்.அப்போதுதான் அந்த ஹாலின் மையப்பகுதியைக் கவனித்தேன். ஒரு டீபாய் போன்ற மேசையில் துணி விரித்து அதன் மேல் ஒரு ஆணின் போட்டோ வைத்துப் பெரிய மாலைப் போட்டு ,அதற்கு முன் இரண்டு விளக்கும் ,ஒரு விபூதித் தட்டும் இருந்தது.போட்டோவில் அந்த நபர் அல்லது உருவம் சிரித்துக்கொண்டு இருந்தது.

எங்கள் இருவரையும் அங்கு இருந்த சில பெண்கள் யார் என்பது போலப் பார்த்தார்கள்.நண்பர்ப் போட்டோவையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தார்.நான் மெல்லச் சுவற்றின் மற்றொரு பெரிய குடும்பப் போட்டோவைப் பார்த்தேன் .அதில் இங்குச் சிரித்துக் கொண்டு இருக்கும் மனிதரும் அவரோடு அந்த ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் நின்று கொண்டு இருந்தனர். அந்தப் பெண்ணை எங்கோ பார்த்து இருக்கிறேன்.எங்கே ?எனது ந்யுரான்கள் சாந்தி என்ற பெயரோடு பல முகம் தெரியாதவர்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொண்டு இருந்தது.


அப்போது, எங்களுக்குப் பின்னால் இருந்து வாங்க என்று நண்பர் பெயரைச் சொல்லி அழைத்த பெண் குரலைப் பார்க்கத் திரும்பினேன்.
இந்தப் பெண் ,இந்த முகம், சாந்தி .
எஸ்.
நண்பரின் காதலி.
அந்தக் குடும்பப் போட்டோவில் இருக்கும் பெண் இவள்தான் .அப்படியானால் அவள் கணவர் இறந்து விட்டார்.

எனக்கு உள்ளே சொரேர் என்று ஒரு கத்தி இறங்கியது போல இருந்தது !

சுமார் 15 வருடம் இருக்கும் .சாந்தியை நண்பரின் அண்ணன் வீட்டு விசேசத்தில் அண்ணிக்கு நட்பான இந்தச் சாந்தியைப் பார்த்த நண்பரின் அம்மா உடனே பிடித்துப்போக இந்தச் சாந்தியைப் வீட்டுக்கு அழைத்து விருப்பம் நண்பருக்குத் திருமணம் செய்யும் தன் ஆசையைச் சொன்னார்கள்.அவர்கள் வீட்டில் நண்பரின் அண்ணி இதை நேரில் தெரிவித்தபோது அப்பா உடனே சம்மதித்தார்,அம்மா மெல்லத் தயங்கினார்.அம்மாத் தயங்கியதன் காரணம் எதுவெனெ அப்போது புரிந்து இருந்தால் சாந்திக்கும் நண்பருக்குமிடையே காதல் என்ற ஒரு மாயவலைப் பின்னப்படாமலேயே போயிருக்கும்.
வீட்டின் சம்மதத்தோடு இருவருமே காதல் காதல் யாத்திரைத் துவங்கி விட்டார்கள் .எங்கள் நண்பர்கள் சிலர் அப்போது காதலித்து இருந்தாலும் திருமணம் வரை போகும் நிச்சயக்காதல் என்று நண்பரின் காதலை நாங்கள் பெருமையாகக் கொண்டாடுவோம்.


ஆனால் நண்பருக்கு வெளியூரில் வேலை மாற்றம் ஆனப் பிறகும் அந்தக் காதல் சில ஆண்டுகள்தான் வெகு ஆரோக்கியமாகப் பூவும் பிஞ்சுமாக நீடித்தது.ஆனால் சாந்தியின் தாய் மாமன் என்ற புயல் ஒன்று குறுக்கே வந்து கலைத்துப்போடும் வரைதான் அது நீடித்தது.
சாந்தியின் அம்மாவின் உடன் பிறந்த சகோதரன்தான் இப்போது நடுவீட்டில் சிரித்த போட்டோவாகிப் போன தாய்மாமன் ராஜா.பெயருக்கேற்றார் போல ராஜாவாகச் சுற்றினார்ப் பத்தாததற்கு நல்ல சம்பாத்யம் .ரியல் எஸ்டேட்,ஹோட்டல் எனப் பணம் குவிந்துகொண்டு இருந்தது .ஆனால் சாந்தி வீடு விவசாயம் .பெரிய வசதியில்லை .அதனால் தனது தம்பியைக் கட்டிவைத்தால் தனது மூத்த பெண் நல்லா வாழ்வாள் என்ற எல்லாத் தாய்மாரின் கனவுச் சாந்தியின் அம்மாவுக்கு இருந்தது.சாந்தியின் அப்பாவுக்கு இதில் கொஞ்சமும்.விருப்பமில்லை.அவர் அந்தக் குடும்பத்தை விட்டு விலகியே இருந்தார்.காரணம் ராஜாச் சின்ன வயதிலேயே சம்பாதிக்கும் சூத்திரம் தெரிந்ததால் அவனை வெற்றி மிதப்புக் குடிப்பழக்கத்தில் தள்ளியிருந்தது.அதுவும் பந்தயம் கட்டி ஒரு ஃபுல் பாட்டிலை எவ்வளவு சீக்கிரம் ’ராவா’ (எதுவும் கலக்காமல்) குடிக்கிறேன் என்று போட்டிப் போட்டு ஜெயிப்பவன் ராஜா.இளம் வயதில் காசு சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் நிறையப் பேரின் நிலை இப்படித்தனோ?

சாந்தியின் அம்மாவுக்கு அந்தக் காதல் வலுவான அடித்தளம் போட்டு வருவதை லேசாய்க் கண்டித்து வந்தார் .சாந்தி உறுதியாய் இருந்தாள்
நண்பர் வெளியூரில் இருந்ததும்,சில விசேசங்களில் ஒன்று கூடிப் பேசிச் சில திட்டங்கள் தீட்டித் தம்பியை அடிக்கடி வீட்டுக்கு அழைப்பதுவும் ,பழக வைத்தார் சாந்தி அம்மா .ராஜா நிறையச் செலவுச் செய்தான் .அதுவும் குறிப்பாய்ச் சாந்திக்கு . ஆரம்பத்தில் வேண்டாம் என மறுத்த சாந்தி அம்மாவின் சொந்தம் என்பதுவும் ,சாதாரண வீட்டுச் சூழலில் வளர்ந்துவிட்டு நிறையச் செலவு செய்து, தாய் மாமன் ,புடவை ,நகை என அடுக்கியதில் அதை அன்பாகப் புரிந்துக் கொண்டாள் .மெல்ல அவள் மனதில் அவள் அம்மா நினைத்த நீரூற்றுப் பெருகத் தொடங்கியது..ஒருப் பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது அப்போது எங்களுக்குப் புரியவைத்தது சாந்தி அம்மாதான்


இதைச் சாந்தியே நண்பருக்குக் கடிதமாக எழுத ,நண்பர் மனதளவில் விலகத் துவங்கினார் .நாங்கள் பேசிப் பார்ப்போம் என்றோம் .அதற்கு அவர் சொன்னப் பதில் ,எதுவேண்டுமானாலும் பேசிப் புரிய வைத்து விடலாம் நாழுச் சுவருக்குள் ஒன்றாய் வாழும் ஆண் பெண்ணுக்கிடையே உள்ளக் காதல் பேசிப் புரியும் விசயமல்ல.அவளுக்கு அதுதான் பிடிக்கும் என்று தெரிந்தப் பிறகு நாம் பேசித் திசை மாற்றினால் அந்த வாழ்க்கைப் பயணமாக இருக்காது சுமையாகத்தான் இருக்கும் விட்டு விடுங்கள் அவளை விரும்பிய எனக்கு அவள் விரும்புவதையும் மதித்துதான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

அதற்கு பிறகு சில மாதங்களில் அவசர அவசரமாக அதே ஜோரில் திருமணமும் முடித்து விட்டார்ச் சாந்தி அம்மா.அவர் கணவர் வேண்டாம் உன் தம்பி குடும்பதிற்கு ஆகாதவர்கள் என்று எவ்வளவோ தடுத்தார் .காசுதான் முழு வாழ்வின் அர்த்தம் என்று நம்பிய சாந்தியும் ,அவர் அம்மாவும் அவரைத் தோற்கடித்தார்கள் .பெரிய வீடு, நகை,கார், பைக் எனச் செல்வம் கூரையைப் பொத்துக்கொண்டும் கதவை,ஜன்னலைத் திறந்துகொண்டும் பீரோவை நிரப்பியது.சொந்தமெல்லாம் ஒவ்வொரு விசேசத்திலும் செய்முறையில் அசந்துப் போனது. .

செல்வம் எப்படி வந்தது என்பதை யாருக் கேட்கவில்லை.ஆனால் எப்போதும் போலக் கட்டுசோறுக்குள் பெரிச்சாளி போல ராஜாவின் குடியின் அளவுக் கொஞ்சமும் குறையாததால் மெல்ல எமன் யாருக்கும் சொல்லாமல் பாட்டில் வழியாக நுழைந்து ராஜாவின் கிட்டினியில் போய்த் தஞ்சம் புகுந்தார்.ஒரு சமயத்தில் ஒரு சேர இரண்டு கிட்டினியும் செயல் இழந்தது.இதில் பெரிய வெடிக்கை என்னவென்றால் சொந்தமெல்லாம் கிட்னித் தர மறுத்த போது சாந்தி நண்பரிடமும் கேட்டு இருக்கிறாள் .எங்களுக்குத் தெரியாமல் அவரும் தரச் சம்மதித்து விட்டார் ஆனால் வீட்டாரின் சம்மதம் கேட்டப் போது அவர்கள் மறுத்து விட்டார்கள்.இதை அண்ணியிடம் சொல்லி சாந்தி ஒருமுறை வருத்தப்பட்டாளாம் !

இதனால் வேறு வலியில்லாத சாந்தித் இதே மாதிரி பிரச்சனையில் உள்ள ஒருவருக்கு தன் கிட்னியை வேறொருவருக்குக் கொடுத்து அவர் குடும்பத்தில் ஒருவர் கிட்னியை ராஜாவுக்குப் பெற்றுக்கொண்டாள்.ஆனால் அதுவும் ராஜாவின் உடல் தன்மைக்குப் பொருந்தவில்லை அதுவும் செயல் இழக்க, வீட்டிலேயே டயாலிசிஸ் அமைத்துக்கொண்டார்கள் ஆனால் அப்போது யாரும் அறியாமல் கிட்னியில் தங்கியிருந்த எமன் மெல்ல இன்ஃபெக்சன் என்ற தொற்று மூலம் மூளைக்குபோய் யாருக்கும் தெரியாமல் தஞ்சம் புகுந்து ராஜாவின் மரணத்திற்கு நாள் குறித்து விட்டார்.

இன்று ராஜாவுக்குப் பதினாறாம் நாள் . சாந்தியை இந்தக். கோளத்தில் சந்திக்கும் மன தைரியம் இல்லாத நண்பர் இங்கு வருவதற்கு மிகப்பெரிய தயக்கம் இருந்ததால் என்னை அழைத்து வந்து இருக்கிறார்
.
நாங்கள் இரண்டு பேரும் போட்டோவைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு விபூதிப் பூசிக்கொண்டோம்.மெல்ல அங்கு அருகிலிருந்த சேரில் உட்கார்ந்தோம்.

சாந்தி எதிரில் போட்டோவுக்கு அருகில் உட்கார்ந்தாள் .அவள் முகத்தில் நண்பரின் பல கேள்விக்குப் பதில் இல்லை.ஆனால் நண்பருக்குத் தெரியாத பல விசயங்கள் சாந்தி முகத்தில் இருந்ததாக நான் நினைத்தேன் .

வெகு நேரம் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை . நண்பர் அடிக்கடி அவர்கள் குடும்பப் போட்டோவை அண்ணாந்து வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார், அங்கு அந்த வழியாக வந்த ஒரு பெண்ணை நிறுத்திய சாந்தி, இவள்தான் மூத்தவள் பி.ஈ பண்ணுகிறாள் என்றாள் .

அந்தப் பெண் வணக்கம் அங்கிள் என்றது நண்பரைப்பார்த்து .நண்பர் முகம் வெகுவாக மாறியது.

ஒரு அரை மணி நேரம் கழித்து கம்பெனியிலிருந்து ஒரு போன் ’வைபிரேசன்’ மூடில் அதிர்ந்தது . அவர்கள் வீட்டுக்கு பின் பக்கம் போய் பேசலாம் என்று போனேன் .அங்கு வீட்டுக்கு மேலே மாடி செல்ல பின் வழிப்படி இருந்தது .ஆனால் யாரும் பெரிதாய் உபயோகிப்பது மாதிரி தெரியவில்லை .அந்த படிக்கு அருகில் கீழே நின்று பேசலாம் என்று போனை ஆன் செய்யும்போது அந்த படிகளில் ஓரத்தில் சாந்தியின் மகள் உட்கார்ந்து இருப்பதுவும் போனில் சுவாரசியமாக, முகம் பிரகாசிக்க சாட் செய்து கொண்டு இருந்தது தெரிந்தது . வெளியிலிருந்து பார்த்தால் சுலபமாக தெரியாத இடம் அது. என்னைப் பார்த்ததும் மெல்ல ஒரு புன்னகை செய்து விட்டு .மீண்டும் அவசரமாக செல்லுக்குள் விட்ட இடத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டது அந்தப்பெண்.

மீண்டும் போன் பேசிவிட்டு உள்ளே வந்தேன்.

தாழ்ந்த குரலில் சாந்தி யாரோ ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
என்னிடம் பல பேர் வந்து செய்முறைகள் செய்யவும் , பணம் வைத்துக் கொடுக்கவும் துணியெடுத்துக் கொடுக்கவும் கேட்டார்கள் என் வீட்டில் அவரே இல்லை நீங்கள் துணி எடுத்துக் கொடுப்பதும் ,விருந்துப் போடுவதும் செய்தால் ஒரு நாள் உங்கள் வீட்டிலும் நான் திருப்பி செய்ய வேண்டி வரும் அது என்னால் முடியாது எனவே வேண்டாம் கோவித்துக்கொள்ளாதீர்கள் என்று பக்குவமாய் சொல்லி அனுப்பி விட்டேன் என்றாள்.

சாந்தி சொன்னதை நண்பர் கேட்டாரோ இல்லையோ தெரியவில்லை.

காலம் எனும் சதுரங்கம் நமக்கு எவ்வளவுதான் பாடம் நடத்தினாலும்,நாம் அதை புரிந்து கொள்ளாமல் சதா காலத்தையே ஏமாற்றக் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறோம் !

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (29-Sep-15, 5:59 pm)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 513

மேலே