ஏழாவது மனிதன் 6 - மை பெற்றான் - கட்டாரி

பிரபஞ்ச வெளிகளை
நனைத்துவிடப் போதுமாயிருக்கிறது
இவனின்
ஒற்றைத் துளி.... மை...!
குடுவைகளின் நிறப்
பிரிகைகளை
காட்சிப் பிழைகள்
தீர்மானித்து விட...மைகிடங்குகள்
நிறமற்றதாகவே
ஊறிக் கொண்டிருகிறது...
அகன்ற சிதிலக் குழிகளை
நிரப்பியே மையூற்று
தீர்ந்துபோய் விட்டதான
பிம்பங்களை... எங்கிருந்தோ வந்த
ஒரு பீனிக்ஸ்
கலைத்துப்போட்டுவிட...
இவனுக்கான குடுவைகள்
மீண்டும்
நிரம்பத் துவங்கியிருக்கும்..
ஓலங்கள் கோர்த்துக்கொண்ட
குருதி நிறத்திலொன்றும்....
மழலை பிசைந்துவிட்டிருந்த
எச்சில் நிறத்திலொன்றும்...
விட்டில் பூச்சிக்காக மஞ்சள்
நிரப்பிக் கழிந்து பின்....
பச்சை பரப்புவதற்காக வேறு
நிறத்திலொன்றும்....
மைக்குடுவைகள் நிரப்பித்
தீர்க்கையில்...
இவனுக்கான...உயிர்த்துளி
தேடி அறைமூலை
பயணிக்க... இருட்டாய்ச் சிரித்த
வெற்றுக் குடங்களுக்கு
பழக்கமாகவே புன்னகைத்து
மீண்டும் மைதேடிப்
பயணித்திருக்கும்
இவன்...!! மை பெற்றான்...!!