நாங்கள் உன்னை காதலிக்கிறோம்

ஐ லவ் யூ...என்பது எதார்த்தம்.
வீ லவ் யூ என்பது விதண்டாவாதம்.

சிலர் சத்தம் போட்டு
பேசுகிறார்கள்
அவர்களின் குரல்,
எனக்கு
எரிச்சலாக இருக்கிறது,

நான் யார்
என்ற கேள்விக்கே
எனக்கு
பதில் தெரியாது,
இதில் இவர்கள் வேறு...

குறிப்பாக
அதிலொருவன்
அடி முட்டாள்...
அவனை மட்டுமல்ல,
அவர்களில் யாரையும்
எனக்குப் பிடிக்காது.

எந்த வேலையும்
சரியாக செய்யத்
தெரியாதெனக்கு...
தொடக்கத்திலேயே முடிவை பார்ப்பவன்.
அந்த நேரத்தில்
அந்த முட்டாள்,
அட்வைஸ் என்ற பெயரில்
அறுத்து தள்ளுவான்.

பொழுதெல்லாம்
என்னைக் குற்றம் காண்பதே
அவன் வேலை...

ஏதாவது,
தோல்விக்குப்
பொறுப்பேற்க
யாரேனும் ஒருவர்
வேண்டுமல்லவா...?
என்னை பயன்படுத்திக் கொள்வான்,
அதிலொரு சந்தோஷம்
அவனுக்கு...

வெற்றிக்கு மட்டும்
எனக்கு எந்த
சம்பந்தமும்
இல்லையாம்.

நான் நடந்தால்
அவன் எனக்கு
நடக்கச் சொல்லித்தர
முயற்சிப்பான்.
நான் ஒன்றும்
குழந்தை இல்லையென
கோபப்பட்டாலும்
கற்பித்தல் தொடரும்.

அந்த முட்டாள்
நாள்தோறும் பேசுவான்,
கேட்டால்
என்னை முட்டாள் என்பான்.

கடைசியில்…
அவன் சொல்வதை
கேட்டுத் தொலைக்க
வேண்டியிருக்கிறது.
என்னை முட்டாளாக்கிச்
சிரிக்க
வேண்டியிருக்கிறது.

ஏனெனில்,
அந்த அத்தனை பேரும்
நானே...
அவர்களில் புத்திசாலியும் நானே..
முட்டாளும் நானே...

நான் சொல்வதை
நானே ஏற்க மாட்டேன்
நான் விரும்பியதை
நானே விரும்ப மாட்டேன்.
எல்லாவற்றிலும்
எனக்கும் எனக்கும்
எப்போதும்
ஏதாவது தகராறு தான்.
ஆனால்,
நானும்
நானும்
ஏற்றுக்கொண்ட
ஒன்றே ஒன்று,

எங்களுக்கு உன்னைப்
பிடித்திருக்கிறது.
நாங்கள் உன்னை நேசிக்கிறோம்.
எனவே விதண்டாவாதமில்லை.

வீ லவ் யூ...**



✍️கவிதைக்காரன்



https://www.youtube.com/watch?v=v3AoBNQe5Uk

இந்த கவிதையை என் குரலில் கேட்க 👇
https://youtu.be/v3AoBNQe5Uk

எழுதியவர் : கவிதைக்காரன் (1-Aug-25, 9:54 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 65

மேலே