அருள் வேண்டும் பேரிறைவா
பெண்ணெனக்குப் பெருமையில்லை
பேர்சொல்லப் பிள்ளையில்லை
பித்துப்பிடித்து அலைகிறேன் பேதைநான் இவ்வுலகில்
தத்தித்தாவும் மகவொன்றை தரவில்லையே ஏனிறைவா?
கதறுகின்றேன் பதறுகின்றேன்
காலமெலாம் இந்நிலையா?
சிதறுகிறேன் என்னோடு
சேர்ந்திருக்க சிசுவிலையே
பொன்மகனே பூமூகமே
உழுகின்ற நிலமாயென்
உடலினிலே நீமுழைத்தால்
அழுமுன்னை அரவணைப்பேன்
ஆசைதீர உனை வளர்ப்பேன்
பேரருளைத் தா இறைவா
பொழுதெல்லாம் இருள்தானா?
ஒளியில்லா நிலைதானா?
ஒழிவில்லா சுமைதானா?
கொதிக்கிறதே எந்நெஞ்சம்
குளிராதா பேரிறைவா?
அஷ்றப் அலி

