செங்கல் கோயில்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சற்று தூரம் பயணித்தால் "வேப்பத்தூர்" என்ற கிராமம் நம்மை வரவேற்கிறது, இங்க செங்கல் கோயில் ஒண்ணு இருக்காமே?

என்று கேட்டதும், இன்னும் கொஞ்சம் தூரம் போய் அந்த காட்டுக்குள்ள நடங்க தம்பி என்ற பதில் வருகின்றது, சற்று தூரம் பயணித்து, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு முட்புதருக்கு நடுவே செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்று கொண்டே இருந்தால் 100 மீட்டர் தொலைவில் நம்மை வரவேற்கிறது ஒரு பிரம்மாண்டமான செங்கல் கட்டிடம். அங்கோர் வாட் கோயிலுக்கு வந்துவிட்டோமா? அல்லது இது ஏதேனும் வேற்று கிரகமா? என்ற குழப்பத்தில் பின்னால் திரும்பிப் பார்த்து, என்னுடன் பயணித்த என் நண்பர்களின் பேச்சு சத்தம் கேட்டு சமாதானம் ஆகிறேன்.

OMG!! அந்த கட்டிடத்தை நெருங்க நெருங்க உரக்க கத்த வேண்டும் போல் தோன்றியது, செங்கலில் இத்தனை உயர கட்டிடமா? இதென்னப்பா அநியாயம் எத்தனை லட்சம் செங்கல் இந்த ஒரு கோயிலுக்காக மட்டும் அறுத்திருப்பார்கள்! எப்படி இத்தனை கற்கள் மேலேறி இருக்கும்! அதுவும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவுகளில் வடிவங்களில் செங்கல்கள் உள்ளது! எப்படி இந்த இடத்தில் இது போன்ற வடிவில் செங்கல் வேண்டும் என்று முன்னரே திட்டம் தீட்ட முடிந்தது! அதற்கேற்றாற் போல் தயாரிக்க முடிந்து! அடக் கடவுளே, தஞ்சை பெரிய கோயில் செங்கல்லில் கட்டி இருந்தால் இப்படித் தானே இருந்திருக்கும்? படத்தில் பாருங்கள் என்ன உயரம்! எத்தனை கம்பீரம்! இந்த கோயிலின் வயது தெரியுமா? ஏறக்குறைய 1200 வருடங்கள்! பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்டது. அதாவது தஞ்சை பெரிய கோயிலை விட 200 ஆண்டுகள் பழமையானது!. நேற்று கட்டிய அப்பர்ட்மெண்ட் இன்றைய மழைக்கு விழுந்துவிடும் இதே மண்ணில் ஒரு செங்கல் கட்டுமானம் 1200 வருடங்கள் கடந்து இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டுள்ளது!.

ஆச்சர்யம் கலையாத அதே பார்வையில் கோயிலை நெருங்கி மெல்ல சுற்றி வருகிறோம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களில் இருக்கும் செங்கற்க்களைப் போல் மிக வழவழப்பாக இருந்தது அந்த கற்கள்! இது என்ன வகை தொழில் நுட்பம்! உடன் பயணித்த கட்டிடத் துறையில் பணியாற்றும் நண்பர் தேவநாதன், இன்றைக்கும் இருக்கும் தொழில்நுட்பத்தையும் அதைக் காட்டிலும் 1000 வருடங்களுக்கு முன்பு கட்டிடங்கள் எழுப்ப அவர்கள் பயன்படுத்தி இருக்கும் முறைகளையும் அந்த கோயிலை காட்டி விளக்கிக்கொண்டிருன்ததுஆச்சர்யத்தை மேலும் அதிகரித்தது.

சுற்றி பார்த்துவிட்டு கோயில் கருவறைக்குள் சென்றோம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்ததால் ஒரு கட்டையின் துணை கொண்டு மறுபுறம் சென்று உள்ளிருக்கும் கருவறை சுவரில் சில ஓவியங்கள் அழிந்த நிலையில் காணக்கிடைகின்றது. இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் தமிழ்நாட்டிலேயே பல்லவர்,சோழர்,விஜயநகர பேரரச மன்னர்களின் ஓவியங்கள் அனைத்தும் ஒரே இடத்தில இங்கு மட்டுமே காண முடியும், ஆனால் நம்முடைய அலட்சியத்தால் கவனிப்பாரின்றி போய் இன்றைக்கு அதன் சுவடுகள் மட்டும் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றது.

இருட்டிக்கொண்டே இருந்தது கோயிலை விட்டு பிரிய மனமில்லை, மீண்டும் பல முறை இங்கு வரவேண்டும் என்று உள்மனம் சொன்னது, அந்த பிரம்மாண்டமான கோயிலை திரும்பி பார்த்துக்கொண்டே மீண்டும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கத் துவங்கினோம். அடுத்து வருபவர்கள் காப்பாற்றுவார்கள் என்று பல்லவன் கோயிலை எழுப்பினான், அதை சோழன் காப்பாற்றி மேம்படுத்தினான், அதை விஜய நகரப் பேரரசும் வலுவூட்டி கஷ்டப்பட்டு காப்பாற்றி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது, பாவம் அவர்களுக்கு தெரியாது எல்லாவற்றிற்கும் ஒரு நாள் முடிவு உண்டு என்று, அதை இந்த தலைமுறை செய்யும் என்று!.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சசி தரன் (1-Oct-15, 10:51 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : senkal koyil
பார்வை : 120

சிறந்த கட்டுரைகள்

மேலே