மழலைக் கவிதை

மூவாண்டு கடந்த பின்னும்
முத்து பற்கள் கண்டபோதும்
முதன் முதல் பார்த்த அந்த
முகம் மட்டும் நினைவிலடி!

தத்தி நடை பயின்று
எட்டி வைத்த பாதமன்றோ
சுத்தி சுழன்று வரும்
சுட்டி செய்யும் காலுமன்றோ!

கிள்ளை மொழியில் பேசிடுவாய்
செல்ல குறும்பும் செய்திடுவாய்
மெலிதாய் சினந்திட சிறு பொழுதும்
எளிதாய் சிரிப்பினில் வென்றிடுவாய்!

நுண்ணிய கேள்விகள் விளித்திடுவாய்
எண்ணிய யாவும் புரிந்திடுவாய்
விண்ணில் மீனாய் மிதந்திடுவாய்
வண்ண சிறகை விரித்திடுவாய்!

வஞ்சம் வெகுளி ஏதுமில்லை
நெஞ்சம் மொத்தம் அன்பின் அலை
பொய்மை கயமை அறிந்ததில்லை
வாய்மை மட்டும் உந்தன் நிலை!

தாயாய் நீயே சில நேரம்
என்னை மடியில் கிடத்திடுவாய்
சேயாய் மீண்டும் என் தோளில்
மெல்ல விழிகள் மூடிடுவாய்!!

பூங்கழல்கள் சந்தம் சொல்ல
வெள்ளி மணிகள் கோர்த்திடுவேன்
பொற்கரங்கள் தாளம் தட்ட
தங்க வளவி அடுக்கிடுவேன்!

வாழ்வின் சிகரம் தொட்டுவிட
நாளும் மறைகள் நானுரைப்பேன்
வீழ்ச்சி கண்டு துவளாமல்
மீட்சி கொள்ள வாழ்த்திடுவேன்!!!

எழுதியவர் : ராஜராஜேஸ்வரி (9-Oct-15, 9:27 pm)
Tanglish : mazhalai kavithai
பார்வை : 232

மேலே