சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு

எந்த உலக நாட்டு இளைஞர்களுக்கும் இந்திய இளைஞர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் துரதிருஷ்டம் நம்மவர்களிடம் தன்னம்பிக்கை, தன்னார்வம் குறைவு.

யாரைப் பிடித்தாவது, யார் காலில் விழுந்தாவது வேலை வாங்கி விட வேண்டும். அது அரசுத் துறையாகவும் இருக்காலம். அல்லது தனியார் துறையாகவும் இருக்கலாம். ஆனால் வேலை பார்த்து மாதச் சம்பளம் பெறுவது ஒன்றே இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோரின் லட்சியமாக உள்ளது.
சுயமாக தொழில் தொடங்கி நாமும் முன்னேறி மற்றவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுப்போம் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் மிகக் குறைவு.

சுய தொழில் தொடங்க, இளைஞர்களை ஊக்குவிக்க அரசும் தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
சுய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கும், ஏற்கெனவே சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும், இலவச ஆலோசனைகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) அளித்து வருகிறது.

மத்திய அரசின் விதிகளின்படி 8-ம் வகுப்பு தேறியவர்கள் முதல், இந்த பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் பெற முடியும்.
இந்தப் பணியில் மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.எம்.இ. முக்கிய பங்காற்றி வருகிறது. சுய தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை கிண்டியில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதுதவிர கோவை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட சில நகரங்களில் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

என்னென்ன பயிற்சிகள்?
டர்னர், மில்லர், பிட்டர், சிஎன்சி ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல், தயாரித்தல், உணவுப் பண்டங்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், நவ ரத்தினக் கற்கள் பட்டை தீட்டுதல், நகைகள் தயாரித்தல், இயந்திரவியல், பொறியியல், மின்சாரம், மின்னணுத் துறை, தோல், பீங்கான் மற்றும் கண்ணாடி, ரசாயணம் உள்ளிட்ட துறைகளில் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பொருத்தமான சுய தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழிலை பதிவு செய்வது எப்படி, உரிமம் எங்கு பெறவேண்டும், கடன் பெற என்னென்ன வழிகள் உள்ளன, தொழிலுக்கு சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது, தொழில் கூடங்களை நவீனமயமாக்குவது எப்படி என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் இலவசமாக இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.

பெட்டிக்கடை ஆரம்பிக்க விரும்புபவர்களிலிருந்து உற்பத்தித் தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் வரை இந்த நிறுவனத்தை அனுகலாம்.

நூலகம்
எம்.எஸ்.எம்.இ. மையங்கள் அனைத்திலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில், பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குவதற்கு உதவியாக 800-க்கும் மேற்பட்ட மாதிரி திட்ட அறிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளை, தொழில் தொடங்க முனைவோர் பார்த்து பயன்பெறலாம். ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு ஒரு முறை தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, மாவட்ட வாரியாக தயாரித்து வைக்கப்படுகிறது.

வங்கிகளுடன் கூட்டு
சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறும் வகையில், எம்.எஸ்.எம்.இ. நிறுவனம், இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது. வங்கிகள், கடன் கோரும் நபரின் தொழில் திட்டத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப கடன்களை வழங்குகின்றன.

புதிய திட்டங்கள்
சுய தொழில் தொடங்க முன்வருவோருக்கு, மூலதனத்தில் மானியம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் பிரதமரின் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி ரூ. 25 லட்சம் வரையிலான திட்ட மதிப்புடைய உற்பத்தித் தொழிலைத் தொடங்குபவர்களுக்கு மூலதனத்தில் 15 முதல் 35 சதவீதம் வரை அந்தந்த தொழிலுக்கு ஏற்றபடி மானியம் வழங்கப்படும்.

இதுபோல் ரூ. 10 லட்சம் வரை திட்ட மதிப்புடைய சேவை நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கும் மூலதனத் தொகையில் 15 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.

எனவே, வேலை கிடைக்கவில்லை என்று ஏங்காமல், சுயதொழில் துவங்கி மற்றவர்களுக்கு வேலை தரும் ஆதாரமாக மாறுங்கள் இளைஞர்களே...

ஆதாரம் : தினமணி

எழுதியவர் : செல்வமணி - இணையம் (21-Oct-15, 1:15 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 563

மேலே