வேடந்தாங்கல் சென்றோம்

வேடந்தாங்கல் சென்றோம்

வேடந்தாங்கலுக்கு ஒரு நாள் - கட்டுரை....
---------------------------------------------------------------

அன்று வியாழக்கிழமை - விடுமுறை நாள் அல்ல. நாங்கள்தான் எங்கள் ஒரே மகனுடன் ஒரு நாள் வெளியில் செல்ல விடுப்பு எடுத்துக்கொண்டோம்...

காலை மணி 8.00... சிற்றுண்டி முடித்துக்கொண்டு வேடந்தாங்கல் செல்வோம் என முடிவெடுத்தோம். போகும் வழியில் திருமலை வையாவூர் செல்லலாம் என நினைத்து 10.00 மணிக்கு கிளம்பினோம்...

வெயில் கொஞ்சம் அதிகம்தான்.. சாதாரணமாக, வெளியில் செல்ல வேண்டுமெனில் நான் மதிய உணவு கட்டாயம் வீட்டில் தயாரிதுக்கொள்வேன். அன்று, என் உடல்நிலை சற்று சரி இல்லாததால், "வெளியில் சாப்பிட்டுக்கொள்ளலாம்" என்று என் கணவர் கூறினார்.

என் மகன் விஷால் தான் காரை ஓட்டினான்.. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.. நேரம் இன்மை காரணமாக கோயில் மூடுவதற்குள் போக முடியவில்லை... எனவே, நேராக வேடந்தாங்கல் சென்றடைந்தோம்.

அப்பாடா!! என்று கூறலாம் என நினைக்கையில், எங்களுக்கு பெரும் ஏமாற்றம்... நுழைவாயிலில் பெரிய பலகை....
"இது சீசன் இல்லாததால் சரணாலயம் மூடப்பட்டுள்ளது .." என எழுதி இருந்தது....எங்களை போன்றே இன்னும் நான்கு , ஐந்து குடும்பத்தினர் வந்திருந்தனர்... அனைவர் முகத்திலும் ஈயாடவில்லை....

சுற்றும், முற்றும் பார்த்தால் ஒரு சிறிய தேநீர் கடை தவிர வேறு எந்த உணவு விடுதியோ கண்ணிற்கு எட்டும் தூரம்வரை தென்படவில்லை.. பசி அதிகமாகிக் கொண்டிருந்தது..சரி!! தேநீர் மட்டும் வாங்கி குடித்து விட்டு பத்து நிமிடங்கள் ஒய்வு எடுத்துக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தோம்...

நேராக கோயில் செல்ல முடிவெடுத்து மலைக்கு மேலே கட்டாயம் சாப்பாடு விடுதி இருக்கும் என நம்பி சென்றோம். அங்கு சென்றால், ஒரு ஹோடேலோ, மெஸ் அல்லது விடுதி எதுவும் இல்லை.. கோயிலும் இனி மாலை 4.00 மணிக்குதான் திறப்பார்கள்... அதுவரை தங்கி பெருமாளை சேவித்துவிட்டு கிளம்ப கட்டாயம் 5.00 மணி ஆகும்.. அதுவரை வயிறு பசி தாங்காது .. இருபது நிமிடங்கள் உண்கார்ந்தோம் ... இனி தாங்காது என உறுதி கொண்டு கிளம்பினோம்..

அங்கிருந்து மலை கீழே வந்தவுடன் அங்கும், இங்கும் தேடினோம் சைவ உணவகம் கிடைக்கவில்லை... மலையப்பனை சேவிக்க முடியவில்லை, சிங்கபெருமாள் கோயில் சென்று நரசிம்ஹரை சேவிப்போம் என்று கோயில் பக்கத்தில் எங்காவது நல்ல சைவ உணவு விடுதி இருக்கிறதா என்றால் கிடைக்கவில்லை... வெறுத்து அங்கிருந்தும் கிளம்பி வழியில் மறைமலை நகர் தாண்டி பெருங்கலதூரில் ஒரு நல்ல ஹோட்டல் கண்ணுக்கு தென்பட்டது...

அங்கு சாப்பிட்டு விட்டு வீடு திரும்ப ஆரம்பித்தோம்.." இன்று யார் முகத்தில் விழித்தோம் " என்று நினைத்து நொந்தேன்.

இனி வெளியில் சென்றால் சாப்பாடு எடுத்துக் கொள்ளாமல் கிளம்பகூடாது என முடிவெடுத்தேன்......

திருமதி.. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : திருமதி. மைதிலி ராம்ஜி (28-Oct-15, 12:48 pm)
பார்வை : 308

மேலே