சினிமா - சில பயங்கர டேட்டா
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக(!) ஓடிக் கொண்டிருக்கும் ‘கண்ணா, லட்டு தின்ன ஆசையா?’ என்ற படத்தின் கதை பழைய ‘இன்று போய் நாளை வா’ என்கிற பாக்யராஜ் படத்தின் கதை என்பதால் ஒரு சர்ச்சை எழுந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பழைய திரைப்படங்களை எடுத்து அதை தூசு தட்டி, மாடர்ன் டிரெண்டுக்கு ஏற்றபடி பட்டி, டிங்கரிங் செய்து புதிய சரக்காகத் தரும் பழக்கம் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது.
ஆனால் இது பழைய சரக்கு என்பதை அறியாமலேயே தமிழக மக்கள் நீண்ட காலமாக திரைப்படங்களைக் கண்டு களித்து வந்திருக்கிறார்கள் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்காது,. தெரிஞ்சுக்கணுமா... மச்சி, கேளேன்.... மச்சி... நீ கேளேன்... கேக்க மாட்டியா... சரி, நானே சொல்றேன்.
‘விஜயா வாஹினி’ நிறுவனம் வெளியிட்ட ‘எங்க வீட்டுப் பிள்ளை’ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த மகத்தான வெற்றி்ப் படம். அதை ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்ற பெயரில் ஹிந்தியிலும், ‘ராமுடு பீமுடு’ என்று தெலுங்கிலும் எடுத்து வெற்றி கண்டது அந்த நிறுவனம். சில ஆண்டுகள் கழித்து அதே கதையை எம்.ஜி.ஆர். கேரக்டர்களைப் பெண்ணாக்கி வாணிஸ்ரீயை நடிக்க வைத்து தமிழில் ‘வாணி ராணி’ என்ற பெயரிலும், ஹேமமாலினியை வைத்து ‘சீதா அவுர் கீதா’ என்று ஹிந்தியிலும் படமாக்கி அவையும் வெற்றி பெற்றன. ஒரு தலைமுறை கழித்து ஸ்ரீதேவி நடிக்க ‘சால்பாஸ்’ என்ற பெயரில் அதே கதை மீண்டும் ஹிந்தியில் வெற்றிக் கொடி நாட்டியது. ஒரே தோற்றமுள்ள இருவர் இடம் மாறுவது என்ற அந்த சப்ஜெக்ட் வேறு வேறு விதங்களில் கையாளப்பட்ட படங்கள் தமிழிலும் நிறைய உண்டு.
சிவாஜியும் பத்மினியும் நடித்த ‘தேனும் பாலும்’ என்ற படத்தின் டிவிடி கிடைத்தால் வாங்கிப் பாருங்கள். அதேபோல சிவகுமாரும் அம்பிகாவும் நடித்த ‘கற்பூர தீபம்’ என்ற படத்தை ஏதாவது டி.வி.யில் போட்டால் அவசியம் பாருங்கள். இரண்டு திரைப்படங்களும் காட்சிக்கு் காட்சி... ஏன், ரெண்டு பெண்டாட்டிக்கார காமெடி கூட இரண்டு படங்களிலும் ஒன்றாயிருக்கும் அதிசயத்தைக் கண்டு ரசியுங்கள்.
சிவகுமார், ஜெயசித்ரா இணைந்து நடித்த ‘எங்கம்மா சபதம்’ என்ற திரைப்படம் பின்னாட்களில் நெப்போலியன், குஷ்பு நடிக்க ‘வனஜா கிரிஜா’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. ‘உறவுக்குக் கை கொடுப்போம்’ என்ற பெயரில் விசு எழுதிய நாடகம் ஒன்று படமாகி (திரையரங்குகளை விட்டு) நன்றாக ஓடியது. பின்னாளில் விசு நடிகராகவும் ஆனதும் அந்தக் கதையை எடுத்து சீர்திருத்தி புதிய திரைக்கதையில் படமாக்கினார். தேசிய விருதும் வென்றார். அது ‘சம்சாரம் அது மின்சாரம்’
இவையெல்லாமே ஜனங்களின் மறதி என்கிற ஒரு சமாச்சாரத்தினை நம்பி, செய்யப்படும் விஷயங்கள். அன்றாட அவஸ்தைகள் ஏராளமாக உள்ள ஒவ்வொருவரும் பார்க்கும் படங்களின் கதைகளை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டு, அதை மற்றொன்றுடன் ஒப்பிடும் அளவுக்கு வேலையற்றவர்களா என்ன...? ஆகவே மறுமுறை எடுத்தாலும் வெற்றிபெறும் என்கிற விஷயத்தை மற்ற எவரையும் விட நன்கு அறிந்தவர் இராம நாராயணன் அவர்கள். நடிகர் மோகன் இரட்டை வேடங்களில் நடிக்க, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று ஒரு திரைப்படம் எடுத்தார். செமயாக ஓடி கலெக்ஷன் அள்ளியது அந்தப் படம். அடுத்த மூன்றே ஆண்டுகளில் மோகன் கேரக்டர்களில் நளினியை நடிக்க வைத்து ‘நன்றி’ என்று அதே கதையை மீண்டும் எடுத்தார்- காட்சிக்கு காட்சி மாற்றாமல். சில காலம் கழித்து அதே கேரக்டர்களை பேபி ஷாம்லிக்கு ஷிப்ட் செய்து ‘துர்கா’ என்ற பெயரில் மீண்டும் படமாக்கினார். இளகிய மனம் கொண்ட தமிழக மக்கள் மூன்று படங்களையும் ஓட வைத்தார்கள். ‘பிலிமோத்சவ்’ என்று திரைப்பட விழா நடக்கிற மாதிரி ‘ராமநாராணனோத்ஸவ்’ என்று ஒன்று நடத்தி அவர் இயக்கிய நூற்று சொச்சம் திரைப்படங்களைத் திரையிட்டால், அவற்றை முழுமையாக எவரேனும் பார்த்தால்... சுமார் பத்து கதைகளை நூறு படங்களாக அவர் எடுத்திருக்கும் அசாத்தியத்தைக் கண்டு இதயத் தாக்குதலே ஏற்பட்டு விடவும் வாய்ப்புண்டு.
ஆகவே... திரைப்பட இயக்குனர்களே, பின்னாட்களில் திரைப்படம் இயக்கவிருக்கும் இன்றைய பதிவர்களே... வெற்றிபெற்ற இன்ன படத்தை மீண்டும் நாங்கள் எடுக்கிறோம் என்று அபத்தமாக தகவல் வெளியிட்டு பிரச்சனைகளில் சிக்காமல், வேறு நடிகர்கள், வேறு ட்ரீட்மெண்ட் என்பதால் காபி ரைட், டீ ரைட் என்பதைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாக எடுத்து வெளியிடலாம் உங்கள் படங்களை. என்ன... அதற்கு சில கண்டிஷன்கள் உண்டு. ஒன்று ட்ரெய்லரில் அந்தப் பழைய படத்தை நினைவுபடுத்தும் காட்சிகள் இருக்கக் கூடாது. இரண்டாவது இந்த அரிய(?) யோசனையை உங்களுக்குச் சொல்லித் தந்த எனக்கு வசூலில் ஒரு பர்சன்டேஜ் தந்துவிட வேண்டும். ஹலோ... உங்களத்தானுங்க.... எங்க ஓடறீங்க....?