காதல் சுயநலம்

நாளுக்கு 10 முறை காதலியையோ/ காதலனையோ சாப்பிட்டியா? என்று கேட்பவர்கள் ஒரு முறை கூட கேட்பதில்லை சமையல் அறையில் இருக்கும் அம்மாவிடம்.

காதலுக்காக ஆயிரம் பொய்களை வீட்டில் அடுக்கடுக்காய் சொல்பவர்கள், ஒரு முறை கூட காதலரிடம் சொல்வதில்லை பெற்றவர்களுக்காக.

காதலிக்கு/ காதலனுக்கு பரிசு வாங்க வீட்டில் யாரிடம் இருந்து பணத்தை எப்படி பெறலாம் என்று என்னவெல்லாமோ யோசிப்பவர்கள், ஒருமுறை கூட வீட்டில் இருப்போரின் தேவை பற்றி யோசிப்பதே இல்லை.

எல்லாரையும் ஏமாற்றிவிட்டு நன்றாக ஊர் சுற்றுகிறோம் என்று நினைக்கிறார்கள், தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு இருப்பது தெரியாமல்.

பெற்றவர்கள் தான் பாசத்தில் பாரபட்சம் பார்க்கிறார்கள் என்பவர்கள், அம்மா அழுதுகொண்டே சொன்ன போதும் கேட்காததை, காதலி காலர் பட்டனை தடவிக் கொண்டே சொன்னதும் கேட்டு விடுகிறார்கள்.

காதலன் கடற்கரைக்கு கூட்டிச் செல்லும் முன் அவன் பெற்றோரிடம் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்துவது முக்கியம் என்பதை மறக்கிறார்கள்.

ஊரிலிருக்கும் யாரோ ஒருவர் வந்து உன் பெண்ணை இவருடன் பார்த்தேன், உன் பையனை இவருடன் பார்த்தேன் என்று பெற்றோரிடம் சொல்லும் படி நடந்து கொள்கிறார்கள். பின், வீட்டில் திருமணம் ஏற்பாடு நடந்ததால் ஓடிவந்தோம் என்கிறார்கள்.

காதலின் பலமே காத்திருத்தல் தான் என்பதை புரிந்துக்கொள்வதில்லை. ஒரு நொடி ஒன்றாக வாழ்ந்தாலும் ஒருவருக்கும் தங்களால் துன்பம் வரக் கூடாது என்பதை எவருமே கொள்கையாக கொள்வதில்லை.

* யாரையும் குற்றம் சொல்லும் நோக்கமில்லை. எவரையும் துன்புறுத்தி வாழாதீர்கள். நாம் வாழ எதை வேண்டுமானாலும் இழக்கலாம் என்ற சுயநலத்தை உங்கள் காதல் உங்களுக்கு தரவில்லை என்பதை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு - நல்ல (1-Nov-15, 9:09 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kaadhal suyanalam
பார்வை : 292

மேலே