பரந்தாமனின் சிக்கனமும் சேமிப்பும் பின்னே,சகிப்பு தன்மையும்
பருப்பு வாங்கப்போன கணவர் பரந்தாமன்,
ஒரு நாற்பது பக்க புத்தகத்தை விசிறியாக்கி
விசிறிக்கொண்டே ,வெறும் கையோடு
[அதாவது,பருப்பு வாங்காமல் ]திரும்பியது,மனைவி பார்வதிக்கு
கடுப்பை உண்டாக்கியது.
கேட்டை திறந்துக்கொண்டு,சிரித்துக்கொண்டே உள்ளே
நுழைந்தவரிடம்,
''ஏங்க..பருப்பு எங்கே ?'' என்றாள்.
திண்ணையில் சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்ட பரந்தாமன்,
''அடி அசடே..இந்த புத்தகம் பத்து ரூபா தான்..
வாசித்து பார்..இனி,வாழ்வு முழுவதும் வசந்தம் தான்..
'பருப்பு இல்லாமல்,ருசியாக சாம்பார் செய்வது எப்படி..?'
பாத்தியா..எப்படி நம்ம செலக்சன் ?'' என்ற பரந்தாமனின் முகத்தை பார்க்க விரும்பாமல்,
விருட்டென திரும்பி,சமயல்கட்டு பக்கம் நடந்த பார்வதி,போகிற போக்கில் சொன்னாள்;
''இன்னிக்கு,உங்களுக்கு பிடிக்காத புளிகுழம்பு தான் ''
என்று.
கொஞ்சமும் அசட்டை செய்யாத பரந்தாமன் ,
''பக்கத்து வீட்டுக்கு,யாரோ புதுசா குடி வந்திருக்காங்களாமே..விடக்கூடாது..போய் ,பிஸ்னஸ் பேசிட்டு வந்திடுறேன் '' என்று கிளம்பி போனார்.
பார்வதி தலையில் அடித்துக்கொண்டாள்.
'போச்சு..அங்கேயும் போய் மானத்த வாங்கப்போறார்..
சரியான கஞ்ச பிசினாரி 'என்று.
சிறிது நேரத்துக்கு பிறகு திரும்பி வந்த பரந்தாமன் ,
காரியம் கைகூடியதில் குஷியாக இருந்தார்.
பார்வதியின் பழிவாங்கும் புளிக்குழம்பு விசியம் ,அவரை முகம் சுழிக்க வைக்க வில்லை.
சகிப்பு தன்மைக்கு அவர் பழகி கொஞ்ச நாட்களாகி விட்டது.
பணம் சேமிப்பு தான் பாதுகாப்பு என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
சமையல் கட்டில் வந்து அசடு வழிந்த அவரிடம்,
''பக்கத்து வீட்டுக்கு போனீங்களே ..என்னாச்சு..?''என்றாள்.
புளிநீர் சொட்டுகளை கைகளால் அள்ளி வாயில் விட்டுக்கொண்டு ,தன் சகிப்பு தன்மையை பார்வதிக்கு காட்டிய பரந்தாமன்,
''பிஸ்னஸ் சக்சஸ் ஆயிடுச்சு டி..நாம வாங்குற நியுஸ் பேப்பர் தான் அவங்களும் வாங்குறாங்களாம்..
அத வச்சி அவங்ககிட்டே ஒரு பிஸ்னஸ் பேசிட்டேன்..
அதாவது,'ரெண்டு வீட்டுக்கும் ஒரு பேப்பர் போதும்..
நீங்க படிச்சிட்டு ,சாயந்திரமா ,என் வீட்டு பக்கம் வீசுனா போதும்..நான் ஆற அமர படிச்சிக்கிறேன்..பேப்பர் செலவை ஷேர் பண்ணிக்குவோம் ன்னேன்..மனுஷன் ,அப்படியே ஓடிவந்து என்னை கட்டி பிடிச்சுகிட்டார்..
சூப்பர் ஸார் ன்னு..''என்று பெருமை பட்டுக்கொண்ட பரந்தாமனை,பரிதாபமாக பார்த்த பார்வதி,
''பேப்பர் செலவை ஷேர் பண்ணிக்கிட்டு,அவங்க தூக்கி வீசுன கசங்கிப்போன பேப்பரை படிக்கணும் ன்னு உங்களுக்கு தலையெழுத்தா ?'' என்றாள்.
இப்போது,புளிக்குழம்பு தயார் ஆகியிருந்தது.
அதையும் ஒரு துளி சுவை பார்த்த பரந்தாமன்,
''சகிப்புத்தன்மை வேணும் டி..,மூளை ரொம்ப முக்கியம்..ம்ம்..நமக்கு தான் லாபம் ..வருஷ கடைசில ,
இந்த பேப்பரையெல்லாம் எடைக்கு போட்டு ,எவ்ளோ
சம்பாதிக்கிறேன்னு பாரு..''என்றவர் ,
பார்வதியின் கன்னத்தில்,செல்லமாய் கிள்ளிவிட்டு,வெளியேறினார்.