தந்திக்கு வந்த தந்தி
தந்திக்கு வந்த தந்தி
தவிக்குதடி எம்மனசு
தந்தியில உள்ள சேதி
தந்திடுமா நல்ல சேதி .
அந்திமால நேரத்துல
அன்பு மகன காணல
அம்மா நெஞ்சு தாங்கல
ஆருகிட்ட சொல்லுவேன் .
கடலுக்குப் போனபுள்ள
கரை சேர வில்லையடி
கலங்கித்தான் நிக்கிறேன்
கண்ணாத்தா பதில்சொல்லடி .
ஆசமகன் எங்கிருக்கான்
அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க
அறிஞ்சா சேதி சொல்லுங்க
ஆத்தா மனசு தாங்கல .
எங்கதறல் கேக்கலையா
எம்மனசு புரியலையா
கலங்குதடி தாயுள்ளம்
கடலம்மா பதில் சொல்லடி .
படிக்கவுமே தெரியல
பாவிமக என்ன ஆனான்
துடிக்குதடி உசுருக்குள்ள
துக்கத்தைப் போக்கிடுமா ?
ஆருகிட்ட போயிநானு
என்கதைய சொல்லுவேன்
ஆசைமகன் வந்திடவே
வாசலில நின்னுடுவேன் .
புயக்காத்து வீசுதுபார்
புள்ளமேனி தாங்கிடுமா ?
திந்தினமும் இதுதானா ?
தீர்க்க வழி சொல்லுங்களேன் .
கரையில நானிருக்க
கடலுக்குள்ள ஏ...ஒத்தப்புள்ள
தவிச்சிருக்க தந்திக்கு வந்த தந்தி
தரவேணும் நல்லசேதி முந்தி .
முந்திக் கிட்டு போனாயே
மூச்சடக்கிப் போனாயோ
மீன் புடிக்கப் போனாயே
மீண்டு வாடா எம்மவனே .
மீனவர் குடும்பத்தில் பிறந்த தனது ஒற்றை மகனை மீன் பிடிக்கக் கடலுக்கு அனுப்பி வைத்து மீண்டு வரும் மகனுக்காக காத்திருக்கும் உண்மையான தாயினுள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவது தான் இந்த நாட்டுப்புற பாடல் . இப்பாடலை எழுதும் போதே எனது கண்களில் கண்ணீர் துளிகள் பட்டுத் தெறித்தன என்பதே கலங்கும் தாயுள்ளத்தை அப்படியே எனது தாயுள்ளம் உணர்ந்துள்ளது என்பதே உண்மை . இப்பாடல் அனைவரும் ரசிக்க மட்டும் நான் எழுதவில்லை . சிந்தித்து தீர்வு காணுதல் வேண்டும் என்பதற்காகவும் தான் எழுதினேன் .