விஞ்ஞானம் - தகவல் பரிமாற்றம் ~ சகா

புறா விடு தூதும்
தூதுவர் மடலும்
நாட்கடந்து வந்தாலும்
நாட்டு நடப்பு சொன்னது...
பறை அறிவித்தலும்
செவி வழிச்செய்தியும்
ஊர் நிலவரம் சொன்னது...!!!

மாண்டார் செய்தியும்
மண வாழ்த்தும்
போர் முனைச் செய்தியும்
ட்டிடிக்...ட்டிடிக்...என்று
தந்தி எனும் பெயரில்
தகவலை சுருங்கச் சொல்லி
விளங்க வைத்தது...!!!

முன்பதிவு செய்து
முறை வரும் வரை காத்திருந்து
முக்கியச் செய்தியை
அளவாய் பேசினாலும்
அர்த்தம் இருந்தது...
கொஞ்சம் பேசினாலும்
நெஞ்சம் நிறைந்தது...!!!

அன்பை அழுந்தப்பதித்து
பக்கம் பக்கமாய் எழுதி
காலம் கடந்து
கையில் தவழ்ந்தாலும்
காகிதம் காதல் சொன்னது

வீட்டுக்கு ஒன்னுன்னு
உடனடி தகவல் பரிமாற
ட்ரிங்...ட்ரிங்...என்று
உறவுகள் வளர்த்தது...
அளவற்ற அளவலாவலும்
முரண்பாட்டின் முதல் ஆரம்பமும்
இங்கு தொடங்கியது...!!!

அலைந்து கொண்டே
பேசுவதால் தான்
அலை பேசியோ?
ஆளுக்கொன்று வைத்துக்கொண்டு
இருமுனையும்
முறையிலாமல் பேசிக்கொள்ள
முரண்பாடு முத்திப்போனது...!!!

அலைபேசி இணையத்துடன்
உறவு கொண்டது...
அளவிலா பேச்சு,
அர்த்தமற்ற அரட்டை,
முறையற்ற வணிகம்,
தேவையற்ற தேடல்கள்,
முறையிலா உறவுகள்
அதிகம் ஆனது...!!!

நிமிட நிலவரம்
கலவரம் ஆனது,
அந்தரங்கம் இங்கே
அர்த்தமற்றதாகிப் போனது,
தேவையற்ற உறவுகளுக்கு
திறவுகோல் கிடைத்தது...!!!

இன்று,
இருட்டுக்குள்
முகம் புதைக்கிறது
இளைய சமுதாயம்...!!!
மர்மத்துக்குள்
தடம் பதிக்கிறது
மாணவ சமுதாயம்...!!!

மெய்ஞானம் இல்லா விஞ்ஞானம்
வீணர்களின் விளைச்சல்
நிலமாகிவிட்டது...!!!

விஞ்ஞான விடியல்
-- வரமா? சாபமா?
-- வேகமா? விவேகமா?
-- அழிவுப்பாதையா? அர்த்தப்பாதையா?

எழுதியவர் : சகா (சலீம் கான்) (13-Nov-15, 3:00 pm)
பார்வை : 490

மேலே