ஐரோப்பா இனி எப்படி இருக்கும்

ஐரோப்பா இன்னும் எத்தனைக் காலம்தான் சுதந்திர மனப்பான்மை உள்ள நிலப்பரப்பாக இருக்கும்? படுபயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த உடனே சிந்திப்பதற்கு இது சரியான தருணம் அல்லதான். இத்தாக்குதலின் கொடூரம் காரணமாக, அரசை நிர்வகிப்போரும் மக்களும், மிகக் கடுமையாக இதை ஒடுக்க வேண்டும் என்றே ஆத்திரப்படுவார்கள். பாரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலுக்கு முன்னால்வரை, பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல்தான் நாடுகள் சோம்பிக் கிடந்தன.

பயங்கரவாதச் செயல்கள் எப்படியெல்லாம் முற்றக்கூடும் என்று சில வட்டாரங்கள் எச்சரித்தபோதும்கூட பாதுகாப்பைப் பலப்படுத்துவது, ஒற்று வேலைகளைத் தீவிரப்படுத்துவது, மக்களைக் கண்காணிப்பது போன்றவற்றில் ஐரோப்பிய அரசுகள் முனைப்புக் காட்டவில்லை. ஒரு சில சம்பவங்கள் நடந்தபோதும் எதிர்வினையாக அரசுத் தரப்பிலிருந்தோ மக்களிடமிருந்தோ பதில் தாக்குதல்கள் ஏதும் நடத்தப்படவில்லை. பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்படும் மக்களுக்குத்தான் நன்கு தெரியும், இத்தகைய சூழலை எதிர்கொள்வதில் நம்முடைய அரசு எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்று. பயங்கரவாதிகளுக்குப் பயந்த மக்கள் ஐரோப்பாவிலிருந்து ஓடவில்லை, ஐரோப்பாவை நோக்கி ஓடிவருகிறார்கள் என்பதே இப்போதைய நிலை.

ஐரோப்பாவின் மவுனம்

பயங்கரவாதிகளின் செயல்களும் மிதமாக இருந்ததால் அரசுகள் அதிகத் தீவிரம் காட்டவில்லை. 2001-ல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீதும் பென்டகனில் உள்ள ராணுவத் தலைமையகம் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் காவலையும் கண்காணிப்பையும் பலப்படுத்தி, தொடர் தாக்குதல்கள் நிகழும் முன்னதாகவே சந்தேக நபர்களைக் கைது செய்தன. நம்முடைய அரசுகள் இஸ்லாத்தின் பெயரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரானவையே தவிர, இஸ்லாம் என்ற மதத்துக்கு எதிரானவை அல்ல என்று நீங்கள் கூறலாம். காரணம், எதுவாக இருந்தாலும் இம்மாதிரியான தாக்குதல்களில் ஈடுபடுவோரைச் சாதாரண குற்றவியல் சட்டப்படி தண்டித்தாலே போதும். ராணுவ சட்டத்தைப் பயன்படுத்துவது அவசியம் இல்லை என்றே ஐரோப்பிய அரசுகள் கருதுகின்றன.

மாட்ரிட், லண்டன் ஆகிய நகரங்களில் நடந்த தாக்குதல்களை ஐரோப்பிய அரசுகள் தாங்கிக்கொண்டன. யூதர்கள், அங்கதச் சுவை எழுத்தாளர்கள் மீது பாரீஸ், பிரஸ்ஸல்ஸ், கோபன்ஹேகன், மார்செய்ல்ஸ் நகரங்களில் தாக்குதல் முயற்சிகளும் சில சமயங்களில் தாக்குதல் சம்பவங்களும்கூட நிகழ்ந்தன. அவற்றுக்கு அப்பால் சில தனிப்பட்ட ‘ஓநாய்களின்’ (பயங்கரவாதிகள்) தாக்குதல்களும் இடம்பெற்றன.

ஐரோப்பா எப்போதும்போல்தான் இருக்கிறது என்று போலியாகக் கூற மாட்டேன். இறைத் தூதரைக் கேலிச்சித்திரமாக வரைந்ததால் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடந்த பிறகு கலைத் துறையிலும் பத்திரிகைகளிலும் தொடை நடுக்கம் காரணமாக ‘சுய தணிக்கை முறை’ அமலுக்கு வந்தது. அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளக்கூட மறுக்கும் கோழைத்தனமும் உடன் வெளிப்பட்டது. மதத் தீவிரவாதம் காரணமாக சமூகமும் பழைய நிலையிலிருந்து தன்னுடைய தொடர்புகளை அறுத்துக்கொண்டுவிடவில்லை.

கவனம் தேவை

பிற கண்டங்களில் நடந்த பயங்கரவாதிகளின் செயல்களை ஒப்பிட்டால் ஐரோப்பாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எவ்வளவோ பரவாயில்லை. இப்படிச் சொல்வதால் ஐரோப்பாவில் நடந்தவை பயங்கரவாதச் செயல்களே அல்ல என்று நான் குறைத்துக் கூறவில்லை. நைஜீரியாவிலிருந்து ஆப்கானிஸ்தானம் வரை மத அடிப்படையிலான பாசிசக் கொள்கை காரணமாக, கூட்டம் கூட்டமாகவும் தனித்தனியாகவும் ‘அந்நியர்கள்’ கொல்லப்படுவது தொடர்கிறது. இதனால் அப்பகுதிகள் அனைத்தும் உள்நாட்டுப் போரில் சிக்கிச் சீரழிகின்றன. இவ்வளவு இருந்தும் ஐரோப்பாவில் இந்தப் புனிதப் போர்த் தீ இன்னமும் பற்றாமல் இருக்கிறது.

குற்றங்கள் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் வரையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுவோரை அப்பாவிகளாகத்தான் கருதியாக வேண்டும். மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மரபு இப்போதும் தொடர்கிறது. பயங்கரவாதச் செயல்கள் நடந்தால் அவற்றை ராணுவச் சட்டப்படி தண்டிக்கக் கூடாது, சாதாரணச் சட்டங்களின்படிதான் தண்டிக்க முடியும். எவ்வளவு சீண்டல்கள் விடுக்கப்பட்டாலும் சட்டத்தை மதிப்பதில் நாம், நாமாகவே இருக்கிறோம்.

பயங்கரவாதிகளின் திட்டம்

பாரீஸ் நகரில் நடந்துள்ள ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் ஐரோப்பாவையே மாற்றிவிடும், சுதந்திரமான நடமாட்டத்தைத் தடுக்கும் அளவுக்கு மோசமாக்கிவிடும். நண்பர்களுடனும் குடும்பத்துடனும் உணவருந்தச் சென்றோர், இசையை ரசிக்கச் சென்றோர், கால்பந்து பார்க்கக் கூடியிருந்தோர், சுற்றுலாத் தலங்களைப் பார்க்க முற்பட்டோர் என்று அரசுடன் நேரடித் தொடர்பில்லாத அப்பாவிகள்தான் கொல்லப்பட்டுள்ளனர். எல்லோரையும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்த வேண்டும் என்றுதான் இப்படித் தாக்கியுள்ளனர். தாக்கியவர்கள் தனிப்பட்ட ‘ஓநாய்கள்’அல்ல ‘சிப்பாய்கள்!’ அவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல, மனிதகுலத்துக்கு எதிராகக் கொடூரமான குற்றங்களைச் செய்யும் அவர்கள் தங்களை யாரென்று நினைத்துக் கொள்கிறார்கள் என்று சுட்டிக்காட்டவே அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

பிரெஞ்சு அதிபர் ஹொலாண்டே, ‘அவர்கள்’ எதிர்பார்த்தபடியே நிதானத்தை இழந்துவிட்டார்; இத்தாக்குதல்களை நாட்டுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பினர் நடத்தியுள்ள ‘போர்’ என்று கண்டித்துள்ளார்; இதை வெறும் குற்றச்செயலாகப் பார்க்கவில்லை. நாட்டில் நெருக்கடி நிலை நிலவுவதாகப் பிரகடனம் செய்திருக்கிறார். பிரெஞ்சு நாட்டின் எல்லைகள் மூடப்படும் என்று எச்சரித்திருக்கிறார். இதன் மூலம் பயங்கரவாதிகள் விரும்பிய திசையில் பயணப்படத் தொடங்கிவிட்டனர்.

இப்போது ஐரோப்பா முழுவதிலும் நாடுகள் தங்களுடைய எல்லைகளை மூடிவிட்டன. பிரான்ஸையும் பிரிட்டனையும் ஒரு வாய்க்கால்தான் பிரிக்கிறது. ஸ்லோவேனியா, ஹங்கேரி இடையிலும், சுவீடனிலும் எல்லைகளில் வேலிகள் எழுவது எவ்வளவு வலியை ஏற்படுத்தும் என்று பிரிட்டனுக்குத் தெரியாது. ஐரோப்பிய ஒன்றியம் என்பது தடைகள் இல்லாத ஒரே நிலப்பரப்பாகத்தான் இருக்க வேண்டும். இத்தாக்குதலுக்கு முன்னதாகக்கூட அகதிகளின் வருகையைத் தாங்க முடியாமல் ஐரோப்பா திணறியது உண்மை.

அகதிகளின் அவதி

அகதிகளைத் தங்கள் நாட்டுக்குள் வரவிடக் கூடாது என்று வலதுசாரிக் கட்சிகள் அலறியபோது ஐரோப்பிய கனவான்கள் அவர்களைப் புறக்கணித்தனர். அகதிகளுடன் பயங்கரவாதிகளும் சேர்ந்து வருவர் என்று அவர்கள் கூறியதை பிதற்றல் என்றே கூறினர். அவர்களுடைய அந்த மறுப்பு மற்றவர்களுக்குக் கோபத்தையே ஊட்டியது. மக்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு மட்டுமல்ல உயிர்ப் பாதுகாப்பும் முக்கியம். அகதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போரை ‘நவ பாசிஸ்ட்டுகள்’ என்றும் ‘நிறவெறியர்கள்’ என்றும் கண்டிக்கும் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்குக்கூட இப்போதைய சூழல் சிக்கலானதுதான்.

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் சர்வாதிகார அரசுகள் பதவிக்கு வராமல் இருக்கவும், பாதுகாப்புக்கான சில ஆபத்துகள் உண்மையானவை என்பதை ஒப்புக்கொண்டே தீர வேண்டும். மக்களிடம் மனோரீதியாக அச்சத்தை ஏற்படுத்த சிலர் செய்யும் சதி என்று அவற்றை நிராகரித்துவிடக் கூடாது. மக்கள் லட்சக்கணக்கில் குடியேறுவதும் மதத் தீவிரவாதம் வலுவடைவதும் ஐரோப்பாவில் நிகழ்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் சொல்வதை அரசு கேட்க வேண்டும் என்று நினைத்தால், இந்த மாற்றங்கள் நிகழ்வதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் ஐரோப்பா எந்த அளவுக்கு மாறும் என்பதற்கு விடையில்லை. எத்தனை முறை ஐரோப்பா தாக்குதலுக்கு உள்ளாகும், எவ்வளவு சடலங்கள் விழும் என்பதைப் பொறுத்தது அது. அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இனி ‘இன்பமயமான உலகு’ என்ற கருத்தை மறந்துவிட வேண்டியதுதான் என்றனர் விமர்சகர்கள். இனி நாம் சோகமும் சிந்தனையும் மிக்க முகங்களோடுதான் பொது இடங்களில் அதிகம் காணப்படுவோம், கள்ளமற்ற சிரிப்பும் எக்காளமும் நம்மிடமிருந்து மறைந்துவிடும் என்றெல்லாம் அச்சுறுத்தினார்கள். அவற்றிலிருந்து நாம் மீண்டோம். அவர்கள் எச்சரித்தபடி அடுத்தடுத்து பயங்கரவாதச் செயல்கள் நம்மைத் தாக்கவில்லை. மீண்டும் நமக்கு அந்த நல்ல காலம் ஏற்படலாம்.

அகதிகள் பிற மக்களுடன் இரண்டறக் கலந்துவிடக்கூடும். ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து கொடுஞ்செயல்களைச் செய்யச் சென்ற பிரிட்டிஷ், பிரெஞ்சுப் பிரஜைகள் இனி நாடு திரும்பாமலேயே போகக்கூடும். இணையம் வழியாக மற்றவர்களுக்கும் உத்வேகமாக இல்லாமல் போகக்கூடும். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து நம்முடைய அடுத்த தலைமுறை, “உலகைப் பீடிக்கவந்த பயங்கரவாதச் செயல்கள் ஓய்ந்தன, நமக்கு அதன் விளைவே தெரியாமல் வளர்ந்துவிட்டோம்” என்று நிம்மதியாக அறிவிக்கும் காலமும் வரலாம். இந்தத் துயரங்கள் அனைத்தும் பழைய நினைவுகளின் சுமையாகக்கூடக் கருதப்படலாம். சுருக்கமாகச் சொன்னால், உலகம் அமைதியுடன் திகழும் அதிர்ஷ்டம் நமக்கு வாய்க்கலாம். ஆனால், பாரீஸ் மாநகரில் நடந்த கொடூரத் தாக்குதல் தொடர்பான புகைப்படங்களைப் பார்க்கும்போது நல்லதிர்ஷ்டம் நம்மைவிட்டுப் போய்விட்டதே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

சுருக்கமாகத் தமிழில்: சாரி, © தி கார்டியன்.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (18-Nov-15, 12:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 128

மேலே