நட வண்டி - 4 - சமையக்காரம்மா
முட்டை போடுற அன்னைக்கி மட்டுந்தா பள்ளிக்கொடத்துல சாப்பாடு... தீவாளி பொங்கலுக்கு புதுத்துணி எடுக்குறப்ப மஞ்சப்பைதா எங்களுக்கு புத்தகமூட்டை. அப்படியே அதுக்குள்ளே ஒரு தட்டச் சொருகிட்டம்ன்னா அது இப்ப உள்ள புள்ளைக சொல்லுற மாதிரி லஞ்ச் பேக். படிக்கிறமோ இல்லையோ... இருக்குற நாலு புத்தகத்த வரிச கலையாம அடுக்கி வச்சி அதுக்குப் பின்னாடி வட்டமா முட்டிக்கிருக்க ஒரு தட்டு. வீட்டுல தாத்தா கதை சொல்லுவாகளே.. அருச்சுனரு.. பீமருன்னுட்டு... அவுக சண்டைக்கிப் போறப்ப பின்னாடி கட்டிருக்குற கவசம் மாதிரி இருக்கும் அந்தப்பையி..
மத்தியானம் மணி அடிச்ச ஒடனே.. எல்லாந் தெறிச்சி ஓடியாந்து வரிசையில நின்னுக்குருவம்.
எல்லாரும் வந்து நின்னப்பறம்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை”.. திருக்குறள...
எல்லாரும் ஒன்னு சேந்து சொல்ல... ஊருக்கே கேக்கும். அதக் கேட்டுத்தா எங்க ஊரு போஸ்ட் ஆபீசு... ஆசாரிக் கொட்டாயி.. அரிசி மில்லு இம்புட்டுக்கும் மதியச் சாப்பாட்டுநேரம்.... வேர்க்க... வேர்க்க.. சுடுசோறு பருப்பு சாம்பாரு கூடவே அன்னைக்கு முட்டையுமா வரிசையில நின்னு வாங்கி... அவிங்கவைங்களுக்குப் புடிச்சவைங்ககூட வட்ட வட்டமா மரத்தடில ஒக்காந்து சாப்புடுறது சாப்புடுற சோத்தவிட நல்லா இருக்கும்.
நம்ம அரசாங்கம் குடுக்குறது தான.. சோறு என்னதா கொஞ்சம் புளியங்கொட்ட மாதிரி இருந்தாலும் பயலுகளோட உக்காந்து சாப்புடுறதுல அவ்வளவு ருசி. நடுவுல சுத்திப் பறக்குற காக்காய் குருவிகளுக்கும் கொஞ்சம் சோத்தப் போட்டுருவம். எப்பயாவது அரசஎலயில சுருட்டிக் கட்டுன ஊறுகாப்பொட்டனமும் வாங்கி வச்சிக்கிருவம்.இன்னைக்கி இருக்குற ஸ்கூல் பேக்... லஞ்ச் பேக்.. வாட்டர் பேக்... இந்த மாதிரிப் பொதிமாடு சொமக்காம... ஒரே பையி.. அது எங்க மஞ்சப்பையி காலமுங்க அது.
இந்த நேரத்துல ஒரு ஆளப்பத்தி சொல்லியே ஆகணும். பாடம் படிச்சிக் குடுக்குறவுக மட்டும் வாத்தியாரு இல்லைங்க. நல்ல பழக்க வழக்கத்துகள சொல்லிக் குடுக்குறவுகளும் அப்படித்தாம்..அவுக படிக்காதவுகளேயா இருந்தாலும். அந்த வகையில ஒரு ஆளுதா எங்க சமையக்காரம்மா.
நாஞ் சொன்னேன்ல. முட்டை போடுற அன்னிக்கி சத்துணவு சாப்பாட்டுக்கு கூட்டம் தள்ளும்ன்னு... சின்னப்புள்ளைக இல்லையா.... சாப்பாடு இல்லன்னு வெரட்டி விடவும் முடியாது. உங்களுக்குலாம் முட்டை இல்லன்னு வெறுஞ்சோத்தயும் போட முடியாது. பிஞ்சு மனசுப் புள்ளைக ஏங்கி லொங்கிப் போயிருங்க.
சத்துணவு டீச்சரு சொல்லுவாக.. “இன்னைக்கி மட்டும் எதுக்கு வாறீக? சத்துணவுல பேரு குடுத்துருக்கவைய்ங்களுக்கு மட்டுந்தா முட்டை. மத்தவைங்களுக்கு கெடையாதுன்னு கண்டிசனாச் சொல்லுவாக. அப்பயில... “ அட விடுங்க... சின்னப்புள்ளைகளுக்கு என்ன தெரியும்... ஏதோ ஆசப்பட்டு வந்து நிக்கிதுக.. இதுக்கு எல்லாமா கணக்குப் பாப்பீய..? ன்னு சொல்லிக்கிட்டே அவிச்ச முட்டைய எல்லா கரண்டியால ஒடச்சி விடுவாக...
இஞ்ச பாருங்க.. இன்னைக்கு மாதிரியே எப்பவும் சாப்புட வரணும். அடுத்த பொதங்கெழமக்கி மட்டும் வரக்கூடாது... சரியா கண்ணுகளா...ன்னு கேட்டுக்கிட்டே... சோறு.. சாம்பாரு அப்பறம்... ஒரு கரண்டி முட்டையின்னு எல்லாத்துக்கும் பகிந்து வச்சிருவாக... அவுக சொல்லுறப்பவே தெனமும் தட்டு எடுத்துக்கிட்டு வரத்தாத் தோணும் நமக்கு.
அவுக பேரனும் எங்களோடதா படிச்சான். படிக்கையில எல்லாம் அமைதியாத்தாம் இருப்பான். சோறு போடுற நேரத்துல மட்டும் அவுக அப்பத்தான்னு அவுகளுக்கு ஒரு பெரிய மெதப்பு வந்திரும். எங்க அப்பத்தாடா ன்னு கொஞ்சம் பெரும அவனுக்கு. வரிசையில நிக்காம முன்னாடி போயி தட்ட நீட்டுவான்.
ஒனக்கு மட்டும் என்ன..? அந்தப் புள்ளைக எல்லா வரிசயிலதான வருதுக.. போயி வரிசயிலவா கண்ணு.. ன்னு திருப்பி அனுப்பிவிட்ருவாக.
எனக்குத் தெரிஞ்சி எங்க பள்ளிக் கொடத்துல இருந்து முட்டையெல்லா யாரும் வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போறது கெடையாது. வெளில எங்கையாவது போறப்ப.. எங்க வாத்தியாருக வந்தாக் கூட ஒதுங்கிப் போயிருவம். கடகண்ணி.. சந்த... எங்கயாவது சமையக்காரம்மாவப் பாத்துப்புட்டா போதும்.... அய்.....சமையக்காரம்மா........ ன்னு கத்திக்கிட்டே பக்கத்துல ஓடிப் போயி நின்னு சிரிப்பம். அவுகளும் மோவாயப் புடிச்சி உருவி... திருஸ்டி நெட்டி பறிச்சிட்டுப் போவாக.. இதை எல்லா புள்ளைகளுக்கும் செய்வாக.
இப்பிடியா ஒரு தலமொறைக்கே சோறு போட்டு தாயாப் பாத்துக்கிட்ட அவுகள விட்டுட்டா... நடவண்டி ஒட்றதுக்கு ஒரு அர்த்தம் இல்லாமப் போயிரும். என்னதாங் கவருமெண்டுல சம்பளம் குடுக்குறாக.. பாத்திரம் பண்டம் கழுவுறோம் அரிசியக் களயிறோம்..பொங்கிப் போடுறோம்ன்னு இல்லாம மூக்குச்சளி ஊத்திக்கிட்டே தட்ட ஏந்திக்கிட்டு வாற பயலுகளுக்கு மொகஞ்சுளிக்காம சளியச்சிந்தி தொடச்சிவிட்டு.. சோறு போட்டுப் பசியாத்துறதுக்கும் ஒரு தாய்மனசு வேணுமில்ல..என்ன சொல்றீய... சரிதான..?
சமையக் கொட்டாயிக்கி கொஞ்சம் தள்ளி ஒரு பெரிய ஒதியமரம் இருக்கு.. அதோட தூருல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பாத... யாரு ரொம்ப நேரம் ஒன்னுக்கு அடிக்கிராங்கிறது பெரிய போட்டியா நடக்கும்.
அப்பிடி நடக்குறப்பதா.. எலேய்.. எலேய்... போங்கடா அங்கிட்டு.. என்னமோ பெரிய மிராசுதாருக மாதிரி ஒதியங்கட்டைக்கி வெவசாயம் பாக்குறானுவ.... ன்னு கத்திக்கிட்டே வெரட்டுவாக. அது மட்டுந்தா அவுக கடுசாப் பேசுற வார்த்த.
இப்பிடியா.மஞ்சப்பையி.. பொடிநடையா கூட்டுநாட்டுகளோட வீடு...வெளையாட்டு.. மக்கியாநாளு திரும்பவும் பள்ளிக் கொடம் படிப்பு... போனமா... வந்தமான்னு வெவரங்க எதுவும் புரியாம அஞ்சாப்பு வர ஊருக்குள்ள சுத்தித் திரிஞ்ச குட்டிமைனருகளக் கொண்டு போயி பெரிய பள்ளிக்கொடத்துல சேத்தாய்ங்க.. பெத்துவிட்ட மகராசைய்ங்க.இந்த ஆட்டு மந்தைக கூட்டமாப் போறப்ப கசகசன்னு தும்மிகிட்டு மசமசன்னு போவுமே..அம்புட்டுப் பயலுகளும் அப்பிடித்தா அந்தப் பெரிய பள்ளிக்கொடத்துல போயி உக்காந்தம். பெரிய பள்ளிக்கொடம்ன்னு கலகலன்னு புதுக்கலருல யூனிபாமுமா அப்ப சந்தோசமா இருந்ததுல நாங்க.. எங்க சின்னப் பள்ளிக்கொடத்தப் பத்தி யோசிக்கவே இல்ல.........!!