நடை வண்டி 5 - பால்ராஜ் சார்

என்னதா கால்சட்டைக்கி காலு தடிமம் பொருத்தமா இருந்தாலும் பேண்டுவாங்கித் தரச் சொல்லி மொறச்சிக்கிட்டே பள்ளிக்கொடம் போன காலம் அது. நா இனிமே பெரிய மனுசன்னு நானே நெனச்சிக்கிட்டு இருந்தத புரிஞ்சிக்கிட்ட மாதிரி “ ஆமா.. இவுக பெரிய்ய்ய்ய மனுச.... பேண்டு வேணுமாம் பேண்டு.... இந்த வருசம் காலுச் சட்ட போதும் அடுத்த வருசம் பாப்பம்” ன்னு எம் மொத்த நெனப்பையும் மொத்தமா ஒத்தக்கொத்தா புடுங்கி விட்ருவாக அம்மா.. கூடவே ஒரு டப்பா புளிச்சோத்த பையிக்குள்ள திணிச்சி மிச்சம் வைக்காம திங்கணும்ன்னும் பேச்சுக்குதாஞ் சொல்லுவாக. அங்க நாங்க போடுற ஆட்டத்துல சோத்துல கெடக்குற கருவப்புள்ளகொட மிஞ்சாதுன்னு அவுகளுக்கு நல்லாவே தெரியும்.

சின்னப்புள்ளையா இருக்குறப்ப பெரிய மனுசனா காட்டிக்கிறதும் பெரிய மனுசனா ஆனதுக்கு பொறவு சின்னப்புள்ளையாவே இருக்க நெனைக்கிறதுமான மனுசப் பொறப்பெல்லாம் ஒரு பொறப்பான்னு அப்ப யோசிக்கத் தெரியல.

அந்த மாதிரி ஒரு கால கட்டத்துலதா எங்களுக்கு “குபீர் சிரிப்பு குப்புச்சாமியா” வாழ்க்கையச் சொல்லிக் குடுக்க வந்தவரு எங்க பால்ராஜ் சார். இது நாங்க வச்ச பட்டப்பேரு இல்லைங்க. அவருக்கு அவரா ஆண்டுவிழா நாடகத்துல வச்சிக்கிட்ட பேரு. நாடகத்துல அப்பிடிச் சிரிச்சாரே தவிர... நேர்ல சிரிச்சா பத்துப் பச்சப் புள்ளைகளுக்கு மொத்தமா சோறு ஊட்டிறலாம். அம்புட்டு கனிவு இருக்கும்..
எங்களுக்கு வாழ்க்கையச் சொல்லிக்குடுக்க வந்தாருன்னு சொன்னது.. அவரு எடுத்த பாடம் வரலாறு.. யாரோ ஒருத்தவுக வாழ்ந்த வாழ்க்கையத்தான வரலாறா நாம படிக்கிறம்.. அது நம்ம வாழ்க்கைக்கி எப்பிடி பயன்படுத்தணும்ன்னு சொல்லுறதுலதான அவுக வாழ்ந்த வாழ்க்கைக்கி ஒரு அர்த்தம் கெடைக்கிது. அப்பிடி எங்களுக்கு அர்த்தம் வெளக்கினவருதா பால்ராஜ் சார். யாருப்பா.. ஒங்க கிளாஸ் டீச்சர்ன்னு யாராவது கேட்டா... அவரு பேரப் பெருமிதமா சொல்லிக்கிறலாம். அப்பிடியா ஊருக்கும் நல்ல மனுசன்.அவரு சொல்லிக்குடுக்குற இங்கிலீசும் வரலாறும் அவருக்கிட்ட படிக்கிற பயலுகள அதுல புலமைத்துவம் கிடைக்கிற அளவுக்குக் கொண்டுவிடும்ன்னா.... வெறும் வாய் வார்த்தைக்கி எல்லாம் சொல்றது கெடையாதுங்க..... விடும்..!

கிப்பித் தலை, அரைக்கையும் இல்லாம...முழுக்கையும் இல்லாம முழங்கைச்சட்டை... பெல்பாட்டம் பேண்டுன்னு... நல்லா செங்குத்தா குத்திவச்ச வாள் மாதிரி நேராப் புடிச்சி சைக்கிள்ள வந்தா... ரெண்டு கிலோமீட்டர் முன்னாடி இருந்தே சொல்லிரலாம்.அது. பால்ராஜ் சார்...! எதுக்கால வாற அம்புட்டு பயலுக சொல்லுற வணக்கத்துக்கும் சிரிப்பு மாறாம “வணக்கம்” சொல்லிட்டுப் போவாரு. வராந்தாவுல நடந்து வாரப்ப திடீர்ர்ன்னு ஒரு பயமேல கையப் போட்டு... “ என்னடா தம்பி...?சாப்ட்டியா... நல்லா படிக்கிறியா..? எத்தனாவது ரேங்கு... அரையாண்டுல..? ரொம்ப நல்லா தெரிஞ்ச மாதிரியே பேசிட்டு “நல்லா படிக்கணும்”..ம்ம்..!! ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாரு. அவரு சொல்லுறதுலையே நமக்கு நல்லா படிக்கனும்ன்னு மட்டுந்தா தோணும்.

எங்களுக்கு பொதுவா மத்தியான சாப்பாட்டுக்கு மொதப் பீரியடுதா வரலாறு.. பொதுவா மத்த பாடம் எதுவும் இருந்தா... சோறும்... சோறு சார்ந்த நெனப்புமாவே இருக்கும். சாரு வந்து பாடம் எடுக்குறப்ப மட்டும் இருக்கவே இருக்காது. அவரு பாடம் சொல்லிக் குடுக்குறப்ப... கண்ணு முன்னாடி “கலிங்கத்துல ரத்தம் ஓடும். அதுக்கு அப்பறமா அசோகரு மரம் நட்டுக்கிட்டே நம்மள தண்ணி ஊத்தக் கேப்பாரு. சாணக்கியர் நம்மகிட்ட வந்து புதிரு போடுவாரு. செல எப்படிச் செதுக்குனாகன்னு ராசராசன் வந்து நம்மகிட்ட பேசிக்கிட்டு இருப்பாரு... இப்பிடியா அந்தந்த காலக் கட்டத்துக்கே நம்மள கூட்டிக்கிட்டுப் போயிருவாரு. எப்பவும் அடிக்க மாட்டாரு. யாரு என்ன கேள்வி கேட்டாலும் ஒரு சிரிப்போடதா பதிலும் வரும்..

இவருக்கு அவரப் புடிக்காது.. அவருக்கு இவரப் புடிக்காதுன்னு பொதுவா பொறணி பேசிக்கிட்டுத் திரியிறப்ப எல்லாருக்குமே புடிச்ச ஒரு மனுசன் யாருன்னா.. அது எங்க பால்ராஜ் சாருதான். பயலுகள்கிட்ட நவாப் பழம் மாதிரியும் பெரியவுககிட்ட வெத்தல பாக்கு மாதிரியும் சுளுவா ஒட்டிக்கிற அவரோட கொணந்தா அதுக்கு காரணமின்னு நெனக்கிறேன்.

ஒரு நாளு சனிக்கெழம பள்ளிக்கொடம். சனிக்கெழமன்னா எங்களுக்கு அரைப் பள்ளிக்கொடந்தான். மத்தியானம் லீவுங்கிறதுனால கடேசி பீரியடுக்கு முன்னாடியே பையிமூட்ட எல்லாங் கட்டி ரெடியா வச்சிருந்தோம். அன்னைக்கின்னு பாத்து சாரு வரக் கொஞ்சம் லேட்டு. எங்க ஹெட்மாஸ்டரு ரூமு பக்கத்துலங்கிறதையும் மறந்து கொஞ்சம் உற்சாக மிகுதிலகத்திக் கூப்பாடு போட்டுட்டோம். யாரு வெளில என்ன சொன்னாகன்னு தெரியல.. சாரு .. சரட்டுன்னு உள்ள வந்தாரு. என்னைக்கும் பாக்காத கோபம்..படிக்கிறவம்.. படிக்காதவம் வளத்தி.. குட்டை.. அறிவாளி மக்கு... அடங்குனவன் அடங்காதவன்..போர்டுல பேரு எழுதுற எங்க லீடரு உள்பட எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு.. ஒரு சாமுராய் கணக்கா வெளு வெளுன்னு வெளுத்து எடுத்தாரு.

“எல்லா பயலுகளும் வெளில போய் முட்டி போடுங்க... இன்னைக்கி நாஞ் சொல்லாம ஒரு பய வீட்டுக்குப் போகப்படாது” ன்னுட்டுப் போயிட்டாரு.

பெல்லு அடிச்சிப் பயலுக எல்லாம் தெறிச்சி ஓட.. கூடவே எல்லாரும் எங்களைப் பாத்து சிரிச்சிக்கிட்டும் ஒடுனாய்ங்க. தலையத் தொங்கப்போட்டுக்கிட்டே அழுது முடிச்சோம். ஒருவழியா கோவம் கொறஞ்சி எதுவும் பேசாம வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாரு.

திங்கக்கெழம காலையில வந்து “ பயலுகளா.... அன்னிக்கிக் கொஞ்சம் கடுமையாத்தா நடந்துக்கிட்டேன். எம்பேர்லையும் தப்பு இருக்கு. நானும் சீக்கிரமா வந்திருக்கணும்.. இனிமே அப்பிடி நடக்காம நாம எல்லாரும் பாத்திக்கிருவோம்ன்னு பழைய மாதிரியே பச்சப் புள்ள மாதிரி சிரிச்சாரு... அவரு செஞ்சது தப்பு இல்லைன்னாலும் அதைத் தப்பா நெனச்சி வருத்தப்படுற மனசு இப்ப இருக்குற எத்தன வாத்தியார்களுக்கு இருக்குன்னு தெரியல.

ஒரு நாளு..” சார்.. இவன் என்னைய நாங் கருப்பா இருக்கேன்னு கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கான் சார்ன்னு பிராது வச்சேன்.. “டேய்..பயலே.. அப்படில்லாம் யாரையும் சொல்லக்கூடாதுடா” போ போ... ன்னு அவனை அனுப்பிட்டு என்னைப் பாத்து “ டேய்.. நா ரொம்பல்லாம் சொல்ல மாட்டம்
“கருத்துள்ளவன் எல்லாம் கருத்துள்ளவன். போய்ப் படி..."ன்னு எனக்குள்ள ஒரு வெதையப் போட்டாரு. என்னைப் போல பலபேருக்கும்..! இன்னைக்கி வரைக்கும் பல விசயங்கள கடந்துவரவும்... செஞ்சி காமிக்கவும் அது மொளைச்சிக்கிட்டே இருக்கு.

இன்னைக்கும் அதே சைக்கிள்.. அதே சிரிப்பு.. எம்புட்டு வேகமாப் போனாலும் அவரப் பாத்த எறங்கி நின்னு பேசிட்டுப் போக வைக்கிற சாந்தம்... வாய்ப்பே இல்லைங்க.. சார். சார்தான்.... அந்தப் பள்ளிக் கொடத்த விட்டு வாரப்ப சாரு எனக்கு எழுதிக் கொடுத்தது...

“நியாயங்கள் காயப்படுத்தப் படும்போது பொங்கி எழு..
காயங்களை நியாயப்படுத்த சிந்தனை செய்”
அப்ப அவரு எழுதினது என்னமோ காகிதத்துலன்னாலும்... இன்னைக்கி வரைக்கும் அது....அவர மாதிரியே.. மனசுல இருக்கு.....

எழுதியவர் : கட்டாரி (சரவணா ) (11-Dec-15, 9:16 am)
பார்வை : 402

மேலே