சாதி வால்கள் இல்லாத் தமிழகம் - Vaidyanathan Vedarethinam
தேவரும் பிள்ளையும் கவுண்டரும் இங்கே
தெருவிலும் இல்லை ! நகரிலும் இல்லை !
யாவரும் வாலினை வெட்டி எறிந்தோம் !
எங்கும் எதிலும் சாதிகள் இல்லை !
அயலவர் எல்லாம் அநுமார் உறவோ ?
அத்தனை பேரும் வால் விடவில்லை !
தாகூர், யாதவ், முகர்ஜி, ராவ்ஜி,
ஜோஷி, சிங், தேவ், சுக்லா, கவுடா,
ரெட்டி, பட்டீல், மேனன், சவான்,
சத்பதி, மோடி, கேலாட், கெய்க்வாட்
அத்துணை வால்களும் சாதிகள் அல்ல ,
குடும்பப் பெயரெனக் கூறுவர் ! நமது
காதினில் பூவைச் சுற்றிப் பார்ப்பதில்
கருத்துடன் முயல்வார் ! காதினைத் தருக !
ஏமாறுவதும் நமக்குப் புதிதா ?
ஏமாறுவோம் ! இன்னும் ஏமாறுவோமே !
வாலுடையோரை வணங்கி மகிழ்வோம் !
வக்கணையாக அவர் பின் செல்வோம் !
நற்கதி பெற்றிட நமக்குள வழியிது !
இதுவே இதுவே இஃதென அறிவோம் !
நன்றி: முகநூல். திருமிகு. வை. வேதரெத்தினம் அவர்கள் முகநூல் தமிழ்ப் பணி மன்றத்தின் ஆட்சியர்.