ஆணவத்தால் ஆவதென்ன

ஆடும் ஆட்டமென்ன..?
ஆண்டவனை மறந்ததென்ன
நீதி நியாயமெல்லாம்
கூடி நின்று கொல்வதென்ன ?

பிறப்பின் நோக்கமென்ன
அது புரியாமல் போனதென்ன..
இறக்கும் மனிதன் கண்டும்
திருந்தாமல் வாழ்வதென்ன ?

வாழ்க்கையின் நிலையென்ன ?
நீ போகும் பாதையென்ன ?
மமதையோடு மார்தட்டி..
நீ மதியிழந்து கிடப்பதென்ன ?

பெற்றோரை மறப்பதென்ன
உறவுகளை வெறுப்பதென்ன
சமூகத்தை சீரழித்து நீ
சாதித்த லாபமென்ன ?

பாசத்தை இழந்ததென்ன
பாவத்தில் விழுந்ததென்ன
மயக்கம் தெளிந்த பின்னே..
நீ மண்டியிட்டு அழுவதென்ன ?

ஆணென்ன பெண்னென்ன
ஆணவத்தால் ஆவதென்ன ?
அகங்காரம் கொண்டவனை
வரலாறு சொல்வதென்ன ?

நீ யென்ன நானென்ன
தற்பெருமை தானென்ன
நாமாக சேர்ந்திருந்து..
நாளெல்லாம் சிரித்தாலென்ன ?

மதமென்ன இனமென்ன
ஓடும் குருதியில் மாற்றமென்ன
இதயங்களில் கசப்பென்ன
மனிதரில் உயர்வு தாழ்வென்ன..?

அபு நசீர்...

எழுதியவர் : அபு நசீர் தோப்பூர் (9-Mar-16, 1:51 am)
சேர்த்தது : அபு நசீர்
பார்வை : 61

மேலே