தோள்களில் சுமப்போம்

பெண்சிசு வெனவே பிறந்திடும் பொழுததன்
==பிறப்புறு தனில்வன் புணர்வு நடத்திடக்
கண்வைத் திருக்கும் காமுகப் பேய்கள்
==கவலைக லற்றுத் திரிகிற தாலே
பண்பினை ஒழுகும் பெண்களின் வாழ்வில்
==படர்ந்திடும் சோக நிழல்கள் நீண்டு
புண்படச் செய்யும் புதுப்புது இன்னல்
==புயலெனத் தாக்கிப் போகுது நாளும்.

கூலித் தொழிலில் குடும்பம் நடத்தக்
==கொடுந்துய ரடையுங் குங்குமப் பெண்ணிடம்
பாலிய லிம்சை படுத்திடு மாணினம்
==பத்தினி யாளாய் பதிவிர தையாக
தாலி கட்டிய தன்னவள் மட்டும்
==தனக்கென கண்ணகி யாகணு மென்றப்
போலி நாடகம் போடுத லாலே
==புவிமேல் பெண்ணினம் புழுங்குது நாளும்

கண்ணின் இமைபோல் காப்போ மென்றுக்
==காலையில் மேடையில் கரமாய் பேசிய
பெண்ணினம் போற்றிய பொதுக்கூட் டத்தில்
==பேரெழில் படைத்த பேதையின் மேலே
கண்ணை வைத்துக் காரிய மாக
==கண்ணும் கண்ணும் கலந்திடக் கோரும்
புண்ணிய வான்கள் பூமியில் இருக்க
==புதுமைப் பெண்கள் வாழ்வது எங்கே?

இல்லறம் சிறையாய் இணைந்தவன் வேம்பாய்
==எதிரியை போன்று இருந்திடும் மாமியார்
நல்லவர் என்று நம்பிடும் எவரும்
==நம்பிக் கைத்து ரோகம் செய்வதில்
வல்லவர் என்று காட்டிடும் மேலோர்
==வழங்கிடும் துயரம் வாழ்வினில் நீள
மெல்லவும் முடியா விழுங்கவும் முடியா
==மென்விசத் துளிகள் அருந்துதெம் மாதர்.

குழந்தைப் பெற்றுக் கொடுத்திடும் இயந்திரம்
==கொண்டவள் என்பதாய் கொண்டிடும் சமூகம்
அழுது வடிக்கும் பெண்கள் நிலையை
==அறிந்து பார்க்க மறந்து நின்று
எழுதும் ஏட்டில் எல்லாம் அவளே
==என்றோர் பாட்டை மகளிர் நாளில்
பழுதாய்க் கிடக்கும் பெண்கள் வாழ்வின்
==பரிதா பத்தை அறியா மல்தான்...

விட்டில் பூச்சாய் வாழ்க்கை விளக்கில்
==விழுந்து நாளும் மரணம் கண்டு
தொட்டில் தொடங்கி சுடலை வரையில்
==தொடர்கதை யாக துன்பம் சுமந்து
பட்டுப் போகும் பட்டாம் பூச்சி
==பாரில் என்ற நிலையை மாற்றி
தொட்டுப் பார்க்கச் செய்வோம் நிலவை
==தோள்களில் சுமப்போம் பெண்களின் கனவை!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-Mar-16, 2:05 am)
Tanglish : tholgalil sumappom
பார்வை : 84

மேலே