கேலி நீர்குமிழ்-சுஜய் ரகு
இண்டர்வியு கேள்விகள்
இரவு முழுதும் பெய்த பனித் துளிகளென
உறைந்து கிடக்கிறது என்னுள்
அந்த அலுவலகத்தின் முகப்பிலும் நின்று
நானொரு செல்பி எடுத்துக் கொண்டு
நுழைகிறேன்
அங்கே மார்பில் கல்லில்
பிரதிபலிக்கும் பிம்பங்கள்
வர்ணப் பூச்சிட்ட கோட்டோவியங்களாய்
விரவி மறைகின்றன
கண்ணாடிப் பேழை மீன்களின்
வழக்கமான கேலி நீர்குமிழ் படர்த்தலை
கண்டும் காணாமல் கடக்கிறேன்
வந்திருந்த யுவன் யுவதிகள் பரஸ்பரம்
புன்னகையைச் சிதறவிடுகிறார்கள்
அலைபேசியின் அதகளமங்கில்லை
நதி பிரிந்த மணற் குவியலும்
சாக்கடை நீர் பருகும் அணிலும்
இலையுதிர் மரத்தின் வெறுமையும்
இரவு தனித்த நட்சத்திரமும்
நெடுநேரக் காத்திருப்பின் தூண்டிலில்
சிக்கி நழுவியக் கவிதையாகிறது
மாயையாய் முடிந்த இண்டர்வியூவில்
தேரி வெளியேறுகிறேன்
பூரிப்பை மீறிய என் கவலையெல்லாம்
இதை எப்படிப் புரிவிப்பது
எதிர்படும் அந்த வண்ண மீன்களுக்கு
என்பதில்தான்.............!