பழைய புத்தகத்தின் கோடிட்ட வரிகளாக

என் திசுக்களில் பரவியுள்ள
நம் தொன்மத்த முத்தத்திற்கு முன்னதான
உன் பரிட்சயங்கள் யாவும்
தித்திப்பில் உன் "இதழானவை"

ஆவாரம் பூக்களை கழுத்தடிச் சேர்த்து
தலை சாய்த்த உன் பார்வையை
புசித்தபடியான என் வேர்கள்
உயிர் விட்டுத் துளிர்க்கிறது பூவாக

நாவல் மரக் காற்றில் உன்
தாவணியில் விழுந்த செங்காய்களை உதறிய
உன் முகம் இன்றும் கனிகிறது

முன்பு நாம் சுற்றி விட்ட
காய்ந்த பூவரசங்காய்கள் அப்படியே
என்னை உன்ச் சுழலுக்குள் அமிழ்த்துகிறது

ஆளுக்கொருபாதி சுவைத்த ஒட்டுமாப் புளிப்பு
கண்களை சுண்டிக் கூசும்படி
தீண்டித் தூண்டுகிறது

அந் நாளில் நீ தாவிக்குதித்த
காய்ந்த வைக்கோல்ப் பரப்பில் தொலைந்த
என் மடிப் பொழுதுகள் குவிந்து
கிடக்கிறது அகச்சிவப்பாய்.

தூரங்களை பொன்னாகிய
நம் சுவடுகளின் மேல்
சில நியாபகப் பொடித் தீட்டுகிறேன்

அக்கடைசி காலடியோசை என் காலத்தைத்
காற்றிலேப் பின்னோக்கிப் பரப்புகிறது.

சட்டென்று நழுவி விட்டோடும்
உழுவை மீனாக
நீ வந்து போன நினைவுக்குப் பின்
பொழுதொன்று புலர்ந்து நிலாவாக அலைகிறது

அப்போது,

யாரும் இல்லா நம் ஊரில்
எனைக் குடியமர்த்தி
உனக்கான சிவப்புப் பழங்களால்
கை நிரப்பிக்கொள்கிறேன்....

- முருகன்.சுந்தரபாண்டியன்.
(பழைய காதலியின் கண்ணீர் வழிய)

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன். (26-Mar-16, 11:27 am)
பார்வை : 75

மேலே