அரசு ஊழியர்கள்------------------படித்த கட்டுரை
அரசு ஊழியர்கள். இவர்கள் ஒரு விசித்திரப் பிறவிகள். பிறக்கும்போது முதுகெலும்போடு பிறந்து, நாட்பட நாட்பட முதுகெலும்பு தானாக மறையும் ஒரு விசித்திரமான பிறவிகள் இந்த அரசு ஊழியர்கள். அரசுப் பணியில் சேர்ந்த நாள் முதலாக தேயத் தொடங்கும் முதுகெலும்பு, ஒரு பத்து ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்தால் இருந்த இடம் இல்லாமல் போய் விடும்.
இப்படி அரசு ஊழியர்கள் மாறுவதற்கான உளவியல் காரணம், அவர்களின் பணிப்பாதுகாப்பே. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், இந்தப் பணி நிரந்தரம் அல்ல, என்று வேண்டுமானாலும் வெளியே அனுப்புவார்கள் என்ற எண்ணம் எப்போதும் அவர்கள் மனதில் இருக்கும். ஆனால், அரசு ஊழியர்களிடம் நமது பணி நிரந்தரம் என்ற எண்ணம் நுழையும்போதே ஏற்பட்டு விடுவதால், அந்தப் பணியை தங்கள் உயிர்மூச்சாக கருதுவார்கள். அந்த வேலைக்கு ஏதாவது ஒரு ஆபத்து வந்து விட்டால் தங்கள் உயிரே போனது போல உணர்வார்கள். பெரிய அளவில் நடவடிக்கைகள் வேண்டியதில்லை. ஒரு சாதாரண மெமோ கொடுத்தால் கூட அதிர்ந்து போய், உயர் அதிகாரியின் காலைப் பிடித்துக் கதறும் அரசு ஊழியர்களே 95 சதவிகிதம். தொழிற்சங்கங்களில் இருப்பவர்கள், தறுதலைகள் இதில் சேர மாட்டார்கள்.
முதுகெலும்பு தேய்ந்து அறவே இல்லாமல் போனதால், அரசு ஊழியர்களுக்கு தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும், உரிமைகளுக்காக போராட வேண்டும், அநீதியான செயல்களை எதிர்க்க வேண்டும் என்பதெல்லாம் அறவே தெரியாது. உரிமை போராட்டம், எதிர்ப்பு என்று கூறினால் மராத்திய மொழியில் கவிதை படிப்பதைப் போல பார்ப்பார்கள். அவர்களின் உலகம், அவர்கள், அவர்கள் குடும்பம், அவர்கள் வேலை மட்டுமே. அரசு சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு அரசு ஊழியரும், அடிமை போன்றவர்கள்.
இப்படிப்பட்ட முதுகெலும்பில்லாத அரசு ஊழியர்கள்தான் அரசு இயந்திரத்தின் முதுகெலும்பு. இந்த அரசு ஊழியர்கள்தான் அரசின் பல்வேறு முடிவுகளை செயல்படுத்துபவர்கள். அவர்கள்தான் திட்டங்களை உருவாக்கித் தருபவர்கள். அவர்கள்தான் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள். அந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு விசுவாசமான அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஆங்கிலேயே அரசாங்கம் உருவாக்கி வைத்த வடிவம் மாறாமல் இன்றைய ஆட்சியாளர்கள் பராமரித்து வருகிறார்கள்.
இந்த அரசு ஊழியர்கள் தாங்கள் அடிமைகளாக இருப்பதில் புளகாங்கிதம் கொள்பவர்கள். பெருமை கொள்பவர்கள். இருப்பதிலேயே யார் சிறந்த அடிமை என்று போட்டி போடுபவர்கள். இவ்வாறான அடிமை மனோபாவத்தோடு இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பணி நிமித்தமாக ஏதாவது பிரச்சினை வந்தால் இடிந்து போய் விடுவார்கள். தனக்கு வந்த பிரச்சினையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணத்தை விட, யார் காலில் விழுந்து இந்தப் பிரச்சினையை சரி செய்யலாம் என்றே எண்ணுவார்கள். அது இயலவே இயலாது என்ற பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகுவார்கள். நீதிமன்றங்களில் சில நேரங்களில் பலன் கிடைப்பதும் உண்டு. நீதிமன்றங்களால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, நீதிமன்றத்துக்கு சென்ற அரசு ஊழியர்களைக் கண்டால் நிர்வாகம் சற்று தயங்கும். “சரி இவன் கோர்டுக்கு போவான்” என்று யோசிப்பார்கள்.
எல்லா துறைகளிலும் உள்ள அரசு ஊழியர்களுக்கு நீதிமன்றங்கள் உள்ளன. நீதித்துறையிலேயே பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ? அவர்கள் நீதிமன்றம் செல்லலாமா என்றால் செல்லலாம். மற்ற துறைகளில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு முதுகெலும்பு, 10 ஆண்டுகளில் மறையும் என்றால், நீதித்துறையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளில் முதுகெலும்பு இருந்த தடம் தெரியாமல் மறைந்து விடும். ரத்தமும் சதையுமாக இருக்கும் சக மனிதனை, அவர் உயர் அதிகாரி என்பதற்காக லார்ட்ஷிப், லார்ட்ஷிப் என்று அழைத்துப் பழக்கப்பட்டால் 3 ஆண்டுகளில் முதுகெலும்பு மறையுமா, மறையாதா ? அது மட்டுமல்லாமல், மற்ற துறைகளில் குறையென்றால் நீதிமன்றத்தை அணுகலாம். உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு குறைகள் ஏற்பட்டால் அது யாரால் ஏற்படும் ? நீதிபதிகளால்தானே… அந்த அநீதியை எதிர்த்து வழக்கு போட்டால் விசாரிக்கப்போவது யார் ? மற்றொரு நீதிபதிதானே… ? ஓ லார்ட்ஷிப்பை எதிர்த்தே வழக்கு போடுகிறாயா ? என்று கோபப்படுவதோடு அல்லாமல், வழக்கு போட்டவர் என்ன ஆவார் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
பெரும்பாலான துறைகளில் இடது சாரிகள் பின்னணி கொண்ட ஊழியர் சங்கங்கள் வலுவாக இருக்கும் சில துறைகளில் பெயருக்காவது இருக்கும். ஆண்டுக்கு ஒரு முறையோ, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையோவாவது ஒரு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ, மாநாடோ நடத்துவார்கள். ஆனால் ஊழியர்கள் சங்கமே இல்லாத துறை எது தெரியுமா ? சென்னை உயர்நீதிமன்றம்.
பணியில் சேர்ந்த மூன்றே ஆண்டுகளில் முதுகெலும்பு இருந்த தடம் தெரியாமல் போய் விடுவதால், உயர்நீதிமன்ற ஊழியர்கள் உரிமை என்ற பேச்சையே எடுக்க மாட்டார்கள். சரி… அவர்களுக்கு எவ்வித தேவையும் ஏற்படாத அளவுக்கு திருப்திகரமான சூழல் இருந்தால், எதற்கு சங்கம், எதற்கு போராட்டம் என்று கேட்கலாம்…..
அனைத்து விதிகளையும் காற்றில் பறக்க விட்டு, சட்டம், விதிகள் என்ற எதையுமே பின்பற்றாமல், நீதிபதிகள் தனக்கு வேண்டியவருக்கு பதவி உயர்வு அளிப்பதற்காக விதிகளை தங்கள் விருப்பப்படி மாற்றினால் ? அப்போதும் போராட மாட்டார்கள். சரி என்னதான் செய்வார்கள் ? லார்ட்ஷிப்.. எங்களுக்கு உதவி செய்யுங்கள் லார்ட்ஷிப் என்று லார்ட்ஷிப்புகளிடம் கெஞ்சுவார்கள். லார்ட்ஷிப்புகள் முழுகாத டைட்டானிக் ஷிப் போலவே நடந்து கொள்வார்கள். சரி பார்க்கலாம் என்று பதில் சொல்லி அனுப்பி விடுவார்கள். ஆனால், அந்த அநீதிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
எந்த அரசுத் துறையிலும் இல்லாத ஒரு அநீதி உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு இழைக்கப்பட்டு வருகிறது. ஒரு அரசுத் துறையில் இளநிலை உதவியாளராக (க்ரூப் 4) சேர்பவருக்கு, அந்தந்தத் துறைக்கு ஏற்றவார்ப் போல, துறைத் தேர்வுகள் இருக்கும். கட்டாயமாக எழுத வேண்டிய தேர்வுகள் இரண்டு அல்லது மூன்று. மாவட்ட அலுவலக நடைமுறை நூல் (District Office Manual) என்று ஒரு தேர்வு. இந்த நூலை படித்து மனப்பாடம் செய்தீர்களேயென்றால், உங்கள் உடம்பின் ஒவ்வொரு செல்லும் அடிமையாக மாற வைக்கும். மனிதனின் மூளையை குமாஸ்தாவாக மாற்றுவதற்காகவே ஆங்கிலேயன் உருவாக்கிய நூல் அது.
உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும் போது எப்படி எழுத வேண்டும் ? Sir எப்போது போட வேண்டும், Dear Sir எப்போது எழுத வேண்டும். பழைய கோப்புகளை உயர் அதிகாரிகளிடம் வைக்கும்போது, அந்தக் கோப்பில் இது வரை நடந்தவற்றை ஒரு குறிப்பாக (Note) முதல் பக்கத்தில் வைக்க வேண்டும். கோப்புகளின் பக்கங்களை எப்படி அடுக்க வேண்டும், எப்படி பக்க எண் இருக்க வேண்டும். எங்கே குண்டூசி பயன்படுத்த வேண்டும், உயர் உயர் அதிகாரிகளின் கையைக் கிழித்து விடாதபடி எங்கே டேக் குத்த வேண்டும், ரகசிய கடிதங்களை எப்படி ஒரு உறைக்குள் வைத்து, மற்றோரு உறையில் போட்டு, அரக்கு போட்டு சீல் வைக்க வேண்டும், என்பது போன்ற விஷயங்கள் இருக்கும். இதற்கு ஒரு தேர்வு.
இரண்டாவது தேர்வு சார்நிலைப் பணியாளருக்கான கணக்குத் தேர்வு. இந்தத் தேர்வு முக்கியமானது. அரசுப் பணிகளில் பயன்படுத்தக் கூடிய, Tamil Nadu Account Code, Tamil Nadu Fundamental Rules, Tamil Nadu Pension Rules, Transfer Allowance Rules, Leave Rules போன்ற பல்வேறு நூல்களின் அடிப்படையில் நடக்கும் தேர்வு. இந்தத் தேர்வு அரசுப் பணிகளில் பயன்படக் கூடியது. இதுவும் பெரும்பாலான அரசுத் துறைகளில் கட்டாயமாக இருக்கும். இதைத் தவிர்த்து, துறை வாரியாக, அந்தந்தத் துறைகளுக்கேற்ப வருவாய்த் தேர்வு, பதிவுத் தேர்வு என்று பல்வேறு தேர்வுகள் இருக்கும். இந்தத் தேர்வுகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம்.. எவ்விதக் கட்டாயமும் இல்லை.
ஆனால் சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். இவர்களுக்கு பதவி உயர்வு வேண்டுமென்றால் சட்டம் படித்தாக வேண்டும். ஆம் தோழர்களே… சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் உண்மையிலேயே சபிக்கப்பட்டவர்கள்தான்.
உதவியாளராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சேர்பவர்களுக்கு அடுத்த பதவி உயர்வு உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) இதையடுத்து, பிரிவு அலுவலர் (Section Officer) இதையடுத்து உதவி துணைப் பதிவாளர் (Sub-Assistant Registrar) இது வரை, சட்டப் படிப்பு இல்லாமல் பதவி உயர்வு பெற முடியும். இதற்கு அடுத்த பதவி உதவிப் பதிவாளர் (Assistant Registrar). இதற்கு அடுத்து துணைப் பதிவாளர் (Deputy Registrar). இதற்கு அடுத்து இணைப் பதிவாளர் (Joint Registrar). உயர்நீதிமன்ற ஊழியர்களைப்போலவே, அதற்கு நிகராக அரசுப் பணியில் சேரும், தலைமைச் செயலக ஊழியர்களுக்கு சட்டம் படிக்க வேண்டும் என்று எவ்விதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. 24 வயதில், உதவியாளராக தலைமைச் செயலக பணியில் சேரும் ஒரு நபர், கூடுதல் செயலாளராக (Additional Secretary – Non IAS) ஓய்வு பெற முடியும். ஆனால், சபிக்கப்பட்டவர்களான உயர்நீதிமன்ற ஊழியர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் பதவி உயர்வு இல்லாமல் தேங்கிக் கிடக்கிறார்கள்.
பதவி உயர்வு இல்லாமல் தேங்கிக் கிடப்பது ஏற்படுத்தும் மனச்சோர்வைப் போன்றதொரு மோசமான விஷயம் கிடையவே கிடையாது. சரி… உயர்நீதிமன்றப் பணியில் சட்டம் படித்தவர்களே கிடையாதா என்றால் உண்டு. பணியில் சேர்ந்தபோதே சட்டப் படிப்பு படித்து சேர்ந்தவர்களும் உண்டு. பணியில் சேர்ந்த பிறகு, மாலை நேரக் கல்லூரியில் சட்டம் படித்தவர்களும் உண்டு. அனைத்து ஊழியர்களும், மாலை நேரத்தில் சட்டப் படிப்பு படிக்கலாமேயென்றால், மாலை சேர சட்டப்படிப்பு 2004ம் ஆண்டோடு ரத்து செய்யப்பட்டு விட்டது. உயர்நீதிமன்ற ஊழியர்கள் விரும்பினாலும் இனி சட்டம் படிக்க முடியாது. முழு நேர சட்டப்படிப்பு படிக்கலாமென்றால், அரசுப் பணியில் இருப்பவர்கள் எப்படி சட்டம் படிக்க முடியும் ?
இந்த உயர்நீதிமன்ற ஊழியர்கள் ஒரு வகை. மற்றொரு வகை உயர்நீதிமன்ற ஊழியர்கள் யாரென்றால் சுருக்கெழுத்தர்கள். இவர்கள் பட்டப்படிப்போடு சேர்த்து, தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் நீதிபதிகளின் பி.ஏக்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்ளுக்கு பதவி உயர்வு வேண்டுமென்றாலும் சட்டம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
சட்டப்படிப்பு இனி படிக்கவே முடியாது…. இனி பதவி உயர்வே இல்லை என்ற நிலை இருந்தபோதுதான், ஆபத்பாந்தவனாக வருகிறது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எப்படிப்பட்ட வியாபாரத் தளம் என்பதை விளக்க வேண்டியதில்லை. Bachelor of Academic Law (BAL) என்று ஒரு புதிய படிப்பை தொடங்குகிறது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். இது தபால் மூலம் படிக்கும் படிப்பு. இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவப் படிப்புகளை அங்கீகரிப்பது Medical Council of India. பல் மருத்துவப் படிப்புகளை அங்கீகரிப்பது Dental Council of India. இதே போல சட்டப்படிப்புகளை அங்கீகரிப்பது Bar Council of India. பார் கவுன்சில் அங்கிகரிக்காத எந்தப் பட்டமும், சட்டப் படிப்பாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. சட்டப் படிப்புகளைப் பொறுத்தவரை பார் கவுன்சில் மட்டுமே இறுதி அதிகாரம் பெற்ற அமைப்பு என்று, பல்வேறு உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கிய BAL படிப்புக்கு பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மாலை நேர சட்டப்படிப்பு இல்லாததால், சில உயர்நீதிமன்ற ஊழியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் இந்தப் படிப்பை படிக்கிறார்கள். ஆனாலும், இந்தப் பட்டப்படிப்பை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்படியே நாட்கள் கடந்த சென்றபோதுதான்…….. ஒரு நாள்…….. திடீரென்று ……. உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான விதிகளில் ஒரு மாற்றம் செய்கிறார்கள்……
அந்த மாற்றம் உயர்நீதிமன்றப் பணியாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்த மாற்றம் என்னவென்றால்,
Provided that members of the service holding a law degree granted by a recognized Indian University but not recognized by the Bar Council of India for admission as advocate or Attorney of an Indian Court, may also be considered for appointment by promotion
அதாவது, பதவி உயர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட மற்றும் அகில இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்படாத சட்டப்படிப்பு படித்தவர்கள் இந்தப் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள்.