அகன்று போகிறேன் அதிகமாய் நேசித்ததால்

அத்தனையும் ஏற்றுக்கொள்ள
பழகிவிட்ட எனக்கு நீ
போய்விட்டாய் என்பதை மட்டும்
ஏற்றுக்கொள்ளத் தெரியவில்லை


எல்லாவற்றையுமே உன்னிடம்
சொல்லி பழகிவிட்ட நான்
நீ போய்விட்டாய் என்பதை
யாரிடம் சொல்ல?


இருப்பதாய் காட்டி இயல்பாய் நடித்து
இடிக்க இடிக்க இன்று வரை
தொடரும் நாடகத்தை
எங்கு போய் முடிக்க?


தலையணைகளிற்கு மட்டுமே
தெரிந்த என் கண்ணீரில்
காலமே கரைவதை யாருக்கு
உரைக்க?


உன்னை நினைக்கின்ற போது
சிந்துகின்ற கண்ணீரே
காலம் தாண்டி வாழும் உன்மீதான
அன்பின் சாட்சி


பிரிந்து வாழ்வதற்கா
சந்தித்துக்கொண்டோம்?
பிரிந்தே போவதற்கா
சேர்ந்து கொண்டோம்?


போராடுவது வாழ்வதற்காய்
இங்கே போராடுவதே
வாழ்க்கையாகிப் போகிறதே


வலிகளைத் தருவதே உன்
வாடிக்கையாகிப் போனதால்
வடுக்களை சுமப்பதே என்
வாழ்க்கையாகிப் போனாலும்


அழகான சிரிப்போடு நீ
அமைதியாய் வாழ
அகன்று போகிறேன் உன்னை
அதிகமாய் நேசித்ததால்

எழுதியவர் : சர்மிலா (5-Apr-16, 4:20 pm)
பார்வை : 561

மேலே