உழைப்பே உயர்வு

”உழைப்பே உயர்வு” என்ற தலைப்பில் போட்டிக் கட்டுரை எழுத நினைத்தபோது ஏன் நான் எழுதிய உழவு குறித்த குறள்வெண்பாக்களின் கருத்துகளையே கட்டுரையாக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. காரணம் உழவுத்தொழிலை விட உயர்வான தொழில் வேறில்லை என்பதால் அந்த குறள் விளக்கங்களையே புதுமையாக கட்டுரையாக்கி இருக்கிறேன். ஏனெனில் இது என் தொழில். செய்யும் தொழிலே தெய்வம். இனி குறளும் அந்த குறளுக்கு விளக்கம் சொல்லும் விளக்க கருத்தும் இங்கே

நாறுது காற்றதென் றெண்ணி தொலைபோவோர்
மண்வா சமறியா தார்

தண்ணீர் பற்றாக்குறை சமயங்களிலும், ஒரு சில இக்கட்டான சமயங்களிலும் வயலில் இருக்கும் பயிர்களோடு நாள் கணக்கில் தண்ணீர் தேங்கியிருந்தால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் ஒரு வாசனை வீசும்.”இது என்ன இப்படிநாறுகிறது” என்று எண்ணி வயல் பக்கம் வராமல், வேறு வழியாகப் போவோர்கள் மண்ணின் மணத்தையும், அதன் வாழ்வையும் அதாவது எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு நல்லதே செய்வதோடு, தான் துர்நாற்றம் வீசினாலும் பரவாயில்லை என்று அது தண்ணீரை தேக்கி வைத்து பயிருக்கு தரும் அதன் வாழ்வையும் அறியாதவர்கள்)

சேற்று யிராயெனை கண்பார்த்த காலன்
அவன்கயிறை கைமறந்தான் காண்

எனது உயிரைப் பறிக்க வந்த எமதர்மர்,சேற்றில் உழன்று வேலை செய்யும் என்னை, விவசாயத்தின் உயிராகவே நினைத்துப் பார்த்து, தான் வீச வந்த இறப்புக்கயிறை என் மீது வீச கைமறந்து, அதை தூர எறிந்து விட்டு, அதே கையாலேயே இங்கு (வயல்வெளியில்) எனக்கு உதவி செய்வார்

வானக் கதிரளக்கு மெங்கள் பொழுது
புலரும் மழைவரும் நாள்

வானத்திலிருந்து வரும் சூரியனின் கதிர்களைப் பார்த்து பொழுதை தெரிந்துகொள்ளும் உழவர்களின் பொழுது, சரியான சமயத்தில் மழை வந்தால்தான் அது அவர்களுக்கு வாழ்க்கை எனும் பொழுது புலர்ந்த நாளாக இருக்கும்.இல்லையென்றால் அது என்றும் துன்பமான கருமையான பொழுதாகவே இருக்கும்).

தரிசென சோம்பி நிலம்பாரார் வாழ்வென்றும்
ஆகிடும் பாலையே தான்

நிலத்தை உழுது மண்ணை இளக்கப்படுத்தி விவசாயத்துக்கு தயார் படுத்தாமல் வேலை செய்ய சோம்பல் கொண்டு நிலத்தில் எதுவும் செய்யாது தரிசாக வைத்திருப்பவனின் வாழ்க்கை செழித்து நிற்கும் வயல் நிலத்தைப் போல் ஆகாது. நிலத்தைப் போல் அவர்களது வாழ்வு விரைவில் பாலையாகும்.

வேண்டும் இனியோர் பிறவி அதிலும்
உயர்த்திட வேண்டும் வரப்பு

உலகில் நான் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவியிலும் பயிர்த்தொழில் செய்பவனாகவே பிறந்திட வேண்டும். அப்படி பிறந்து, ஏதாவது ஒருவகையில் நீர் வளத்தை பெருக்கி அதன் உயரத்துக்கேற்ப வயல் வரப்பையும், வாய்க்கால் வரப்பையும் உயர்த்தி சிறு குழந்தைகள் முதற்கொண்டு வயதான ஏழைகள் வரை பசி பட்டினியால் உணவில்லாமல் சாகும்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். வரப்புயர என்று பாடிய அவ்வைப்பாட்டியின் கனவு நனவாக வேண்டும்.

மா,தென்னை காத்திடுவோம் வண்டு வருமுன்
மறப்பின் தொடரும் துயர்

வண்டுகள் வருமுன்பே மாமரங்களையும், தென்னை மரங்களையும் காத்துக்கொள்ள வேண்டும். வண்டுகள் வந்துவிட்டால் மாம்பிஞ்சுகளை குடைந்து உள்ளே சென்று மாம்பழங்களின் தரத்தினை அடியோடழித்து விடும். அதே போல் காண்டாமிருக வண்டுகள் என சொல்லப்படும் தென்னை வண்டுகள் தென்னங்குருத்துகளை பாழ்படுத்தி விடும். தென்னம் பாளைகளை தங்கள் கொடுக்குகளால் வெட்டி அதிலிருந்து விவசாயிக்கு கிடைக்கவேண்டிய தேங்காய், இளநீர் மகசூலை அழித்து ஒழித்துவிடும்.

இந்த மா, தென்னை மரங்களை வண்டுகளிடமிருந்து தனிக்கவனம் எடுத்து காக்கவேண்டும். இல்லாவிட்டால் வருடம் முழுதும் கஷ்டப்பட்டும் ஒரு பிரயோசனமும் இருக்காது.

உழவுக் கணிகலன் ஊடுபயிர் கொல்தல்
அதின்றேல் அனைத்துமே வீண்

பயிர்களுக்குள் ஊடாக விளையும் களைப்பயிர்களையும், களைச் செடிகளையும் அகற்றுவதே உழவுக்கும் விவசாயத்தொழில் செய்யும் உழவனுக்கும் அணிகலன். அப்படி களைகளை அகற்றாமல் விட்டுவிட்டால் நாற்றுகளுக்கு செல்லவேண்டிய சத்துகளை இவை உறிஞ்சி வேகமாக வளர்ந்து பயிர்களை அடியோடழித்து விளைச்சலை கெடுத்துவிடும்.அதனால் களைகளையும், வேண்டா ஊடுபயிர்களையும் அழித்து அகற்றி உணவுப்பயிர்கள் விளைச்சல் தர வழிவகை செய்யவேண்டும். அப்படி செய்யாவிட்டால் எல்லாமே வீணாகிப் போய், களைகளே பயிர்களை மேய்ந்து விட்டது என்று கையைப் பிசைந்து மீண்டும் ஒரு முறை கடன் வாங்கி பயிரிட வேண்டியதுதான். அது நேராமல் இருக்க களைகள் மண்ணிலிருந்து வெளிவரும்போதே அழித்துவிடவேண்டும்.

இயற்கை உரமிலாது ஒன்றிலை பூமகள்
இன்மனம் காணும் வழி

இயற்கை உரங்களுக்கு இணையானது உலகில் எதுவுமில்லை. இயற்கை உரங்களின்றி மண்மகளின் மகிழ்ச்சியான மனத்தை காண முடியாது. மண்ணின் மகிழ்ச்சியைக் காண ஒரே வழி இயற்கை உரங்களை உபயோகப்படுத்துவதே. இயற்கை உரங்கள் எந்த கெடுதலும் ஏற்படுத்தாமல் பயிர்களுக்கு இயற்கையான முறையில் செழிப்பை தந்து விளைச்சலை தந்து அதை உண்ணும் நமக்கும் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத உன்னதம். மண்ணை மட்டுமல்ல இந்த இயற்கை உரங்கள் மனிதனையும் ஆரோக்கியமாக இருக்கவைக்கும் வல்லமை கொண்ட்து.

வற்றிடும் கேணிநீர் காண அழும்நெஞ்சம்
வற்றியபின் வாழுமோ வாழ்வு

கிணற்று நீர் நாளுக்குநாள் வற்றி வருவதைப் பார்த்து கண்ணீரும் வற்றிப்போக அழும் உழவன் நெஞ்சம், அந்த கிணற்றுநீர் முழுதும் வற்றிப் போனால் அத்தோடு அவன் வாழ்வும் முடிந்துபோகும். பிறதொழில் ஏதாவது தேடவேண்டிய நிலை வரும். படித்திருந்தால் ஓரளவாவது பிழைக்கலாம். அதுவும் கல்வியறிவு இல்லாத உழவன் நிலை என்றால் தற்கொலை செய்து குடும்பமாக உயிர்மாய்க்கும் அதோ கதிதான்.

மண்வெட்டி பார்த்து மடையை திறப்பின்
பயிர்க்கும் உயிருக்கும் நன்று

மண்வெட்டியின் பிடியையும் அதன் உலோகத்தாலான மண்ணெடுக்கும் அடிப்பாகத்தையும் ஒரு முறை உற்றுப் பார்த்தபின் மடையைத் திறக்கவேண்டும். அப்படி எதையும் பார்க்காது சட் சட் என்று மடையைத் திறந்திட முயன்றால் ஒருவேளை உடைந்த நிலையில் இருக்கும் அதன் உலோக அடிப்பாகம் மடையைத் திறக்க முனையும் போது நம் மண்டையை தாக்கலாம். மரத்தாலான கைப்பிடி கழன்று காயப்படுத்தி, இரத்த இழப்பையும் ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் சரியாக வெட்டப்படாத மடை நீர் , பாய்ந்த வயலுக்கே பாய்ந்து பயிர்களை அழுகச்செய்துவிடும். ஆகவே மண்வெட்டியின் பிடி, அடி பார்த்து மடை திறந்தால் பயிர்களுக்கும். உழவனின் உயிருக்கும் நல்லது

எந்த உழைப்பானாலும் சரி அதை 100 மடங்கு மரியாதையோடு நேசித்து செய்வோம். அது நிச்சயம் நம்மை உயர்த்தும்.

உழைப்போம் உயர்வோம். நாட்டை வளப்படுத்துவோம்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (25-Apr-16, 7:40 am)
Tanglish : uZhaippay uyarvu
பார்வை : 48398

மேலே