கட்டுரை

மனிதநேயம்

வாழ்க்கையில் மனித நேயம் முக்கியமான ஒன்று என்பதை அனைவரும் அறிவர் ஆனால் மனித நேயம் என்றால் என்ன அதன் இலக்கு என்ன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம் வாங்க. மனிதன் நேயமானது மனிதன் தான் தேடுகின்ற நிறைவை அல்லது குறிக்கோளை அடைவதற்கான முயற்ச்சிகளை அறிவுடன் செயல்படுத்த உதவுகின்றது என்று கூறினால் மிகையாகாது. இதன் தன்மையானது ஒவ்வொருவரிடத்திலும் மாறுபடும் மேலும் அவை படிப்படியாக காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாறுபடக் கூடிய இயல்புடையவை எனலாம். எதை ஒருவன் நேயமாக கருதுகின்றானோ அது அவனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பொதுவாக பார்த்தால் இந்த மனித நேயம் இரண்டு வாரியாக பிரிக்கப்படுகின்றது.



ஒன்று இயல்புடைய நேயம் இவை சொந்த நலனுக்காக விரும்பத்தக்க ரசிக்கும் தன்மை கொண்ட இயல்பான நேயமாகும். மற்றொன்று தூண்டக்கூடிய நேயம். இது மற்ற நேயங்களை அடைய தூண்டுகோளாய் உள்ளது. உதாரணமாக ஒரு வேலையை திறன்பட செய்து முடிக்க உதவுவது. இவ்வாறான நேயங்கள் சில இந்த இரண்டு தன்மைகளையும் கொண்டுள்ளன அவை வாழ்க்கைக்கு தேவையான அன்பு பாசம் ஆரோக்கியம் குறிக்கோள் வசதி ஆர்வம் அறிவு விவேகம் விளையாட்டு கலை மற்றும் மதம் போன்றவைகள் இரண்டு தன்மைகளும் கொண்டிருக்கும்.



அதில் அன்பு மற்றும் பாசம் என்ற நேயம். மனித உறவில் பெற்றோர் அன்பு, சிநேகித அன்பு, மற்றும் சமுதாயப் பற்று ஆகியவற்றை குறிக்கும்.

ஆரோக்கியம். இது உடல் மற்றும் உள்ளம் சார்ந்த ஆரோக்கியத்தைக் குறிக்கும்.

குறிக்கோள். இது வாழ்க்கையில் குறிக்கோளை வெற்றிகரமாக அடைவதற்கு உண்டாகும் விருப்பம் அல்லது ஆர்வத்தை குறிக்கும்.

வசதி. இது வாழ்க்கை இன்பமாக வசதியாக அமைய தேவைப்படும் நேயமாகும்.

ஆர்வம். நல்ல ஆக்கப்பூர்வமான செயல்களை அல்லது பொருட்களை செய்வதற்கு பயன்பத உதவும் நேயமாகும்.

விவேகம். வாழ்க்கையை நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு அறிவும் விவேகமும் மிக முக்கிய நேயமாக கருதப்படுகின்றது.


விளையாட்டு. இது விருப்பத்துடன் ஆக்கத்திறனுடன் ஈடுபடக் கூடிய செயலாகும்.

கலை. அழகு மிகுந்த எல்லா கலைப் பொருட்களையும் ரசிக்கும் நேயமாகும்.

மதம். மனிதன் எப்படி வாழ வேண்டும் எதற்காக வாழ வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கிய நேயமாகும்


இவ்வாறான மனித நேயங்கள் ஒருவரின் விருப்பத்தைப் பொருத்தும் ஆர்வத்தைப் பொருத்தும் வளர்கின்றது இவைகள் மனிதனால் உருவாக்கப்பட்டு தரம்பிரிக்கப்பட்டு பிறகு தான் அனுபவிக்கப்படுகின்றன,ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதன் நிலைமையே வேறாக உள்ளது. மனிதனை மனிதனாகவே மதிப்பதில்லை இதில் எங்கே மனித நேயத்தைப் பற்றி அறிவது? பக்கத்து வீட்டில் வசிப்பவர் யார் என்றே தெரியாத நிலையில் நமக்கேன் வம்பு என்ற தோரணையில் தான் மனித நேயம் வளர்ந்து வருகின்றது. இதில் யாரையும் குறை சொல்லி பயனில்லை அவ்வாறு மனித நேயத்தை எதிர்ப்பர்ப்பவர் தான் அதற்கு தயாராய் இருக்க வேண்டும் குறைந்த பட்சம் குழந்தைகளிடத்திளிருந்தாவது அதை வளர்க்க வேண்டும்.

ஏனெனில் குழந்தைகளுக்கு இயற்கையிலேயே பிறரை நேசிப்பதும் பிறருக்காக வருத்தப்படுவதும் பிறருடன் பகிர்தல் போன்ற இன்றியமையாத உணர்வுகளையும் சிறந்த நற்பண்புகள் கொண்டவர்களாகவே இருப்பார்கள் அவைகளை யாரும் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை ஆனால் பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் செய்யும் தவற்றினால் தான் குழந்தைகள் அவர்களிடமிருந்து மனித குல ஏற்றத் தாழ்வுகளை ஏழை பணக்காரன் உயர்ந்தசாதி தாழ்ந்த சாதி போன்ற எதிர்மறையான விசயங்களை கற்றுக் கொள்கின்றார்கள் பிறகு எப்படி மனித நேயம் வளரும் அதை யாரிடம் எதிர்ப்பார்க்க முடியும். எனவே மனித நேயத்தை வளர்க்கும் முக்கிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோர்களையே சார்ந்தது ஒவ்வொரு குடும்பம்மே அதற்கு பொறுப்பாகின்றது.குழந்தைகளை இதைச் செய்யாதே அதை செய்யாதே இவனோடு பேசாதே அவனோடு பழகாதே என்று சொல்லி சொல்லி அவை பின்னாளில் ஒட்டு மொத்த சமுதாயத்தை கெடுப்பதற்கு மாறாக குழந்தைகளை தன்னிச்சையாக வளரவிட்டாலே போதும் நிச்சயமாக மனித நேயமிக்க நேசமிகுந்த புதிய சமுதாயத்தை அவர்கள் உருவாக்கி விடுவார்கள் என்பது உறுதி.

எழுதியவர் : பாலசுப்பிரமணியன் (27-Apr-16, 10:41 am)
சேர்த்தது : Balasubramanian Vairavan
Tanglish : katturai
பார்வை : 2696

மேலே