அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது
சிவன், விஷ்ணு, அம்மன், குமரக்கடவுள் வழிபாடு செய்யலாம். குமரன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் நீங்கும்.
கோடையைத் தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். ஏழைகள், அந்தணர்கள் இயலாதவர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம்.
கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு.
விஷ்ணு கோயில்களில் வசந்த உற்சவங்கள் நடைபெறும். பகல் பத்து, ராப்பத்து உற்சவங் களும் நடைபெறும். பரணிக்கு உரிய துர்கை, ரோஹிணிக்கு உரிய பிரம்மா இருவருக்கும் சந்தனக்காப்பு செய்வது சிறப்பு.
இந்த காலங்களில் உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, ‘அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!’ என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு.
சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது ஐதீகம்.
இந்த நாட்களில் செடி- கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உறிக்கக்கூடாது, விதை விதைக்கக் கூடாது, கிணறு, குளம், தோட்டம் அமைக்கக் கூடாது. நிலம் மற்றும் வீடு பராமரிப்பு பணிகளைச் செய்யக்கூடாது.
அதேபோல் நீண்ட தூர பிரயாணம், பூமி பூஜை, கிரகப் பிரவேசம், மொட்டை போடுதல் ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும்.