எதற்கும் கலங்காதே

எதற்கும் கலங்காதே
====================

இந்த சமுதாயம் தூற்றும்
எதற்கும் கலங்காதே
இதோ தகிக்கும் கனலில்
என் நெஞ்சு வேகாமல் இருக்கிறது

நான் அஸ்த்தியாகிவிட்டேன்
எனக்கு மோட்சம் கொடுக்க
எலும்பு பொறுக்குகிறார்கள்
எதற்கும் கலங்காதே
இடைகெட்ட வயதில்
முக்காடு போட்டு
உன் மூலி முகத்தை மறைக்காதே
இதோ தகிக்கும் கனலில்
என் நெஞ்சு
இன்னும் வேகாமல் இருக்கிறது

பூவும் பொட்டும் நான் தந்ததாய்
சொல்லுவார்கள்
உன்னை துணைசேரும் போது
நீ அணிந்த அத்தனை முழம் பூக்களைவிட
நானொன்றும் பெற்று தரவில்லை
அதை துறக்காதே

ரெண்டுங் கெட்டான் வயதில்
பாழுங் குழியில் விழுந்துவிட்டேன்
ஒரு மெழுவர்த்தி
கரைதலின் வெளிச்சத்தில்
என் நினைவுகளால்
உன் இரவு சுடுகின்றேன்
உன்னை ஒப்படைத்த
அந்தபோதில்
சாட்சி இருந்தவர்களுக்கு
நான் சத்தியம் தவறிவிட்டேன்
விதி என்று சொல்லுவோருக்கு
விகல்பம் ஆகும் உன் இருப்பு மூலை

நீ காட்டமாய் அணைத்து
கண்ணீர்த் துடைத்த
என் ஷிபான் சட்டையின்
பிண வாசனையை
குளிப்பாட்டி குலவையிடுவார்கள்
ஒரு மூலிக்கூட்டம்
எதற்கும் கலங்காதே
இதோ தகிக்கும் கனலில்
இன்னும் என் நெஞ்சு வேகாமல் இருக்கிறது

எனக்கு பாலூற்றி முடித்த
மூன்றாம் நாளில்
உனக்கு சீதனம் தந்த
நைலான் புடவைகளை
பங்குபோடும் சில உறவுகள்
எதற்கும் கலங்காதே
ஆயுள் தோய்வு அதற்குவேண்டாம்
இதோ தகிக்கும் கனலில்
என் நெஞ்சு இன்னும்
வேகாமல் இருக்கிறது

கூட்டத்தில் யாரேனும் கரிசனம் செய்வார்கள்
என்னோடு இருந்த
உன் மூன்று மாத வாழ்க்கையை
பழிக்கூடம் சொல்லுவார்கள்
நாம் இருவரும்
அறைக்குள் ஓடி உரசிக் கொண்டதை
அறியாமலும் பகிர்ந்திடாதே
பழிசொற்களுக்கு
சைவம் அசைவம் தெரியாது
பசிக்குத் தகுந்தது போல
பற்களை கோரமாக்கும் வெற்றுச்சுவரும்
எதற்கும் கலங்காதே

படுக்கப்போகும் முன்னாலும்
பத்துவிரல்களின் ஊடினாலும்
உனக்கு நாகரீகத்தை நுழைத்திருக்கிறேன்

நான் உரிமை சொன்ன
காப்பீட்டுத் தொகையின் பேராலும்
வங்கி கணக்கின் பேராலும்
உன் கருப்பையில் ஒட்டிக்கொண்ட
என் கவலையை
உள்ள காலம் முழுவதும்
வட்டிப்போட்டு வாங்கிக் கொள்ளவேண்டாம்
அவிழ்த்துவிடு ,,
சாக்கடையில் ஒழுகிப் போகட்டும்
எதற்கும் கலங்காதே
இதோ தகிக்கும் கனலில்
என் நெஞ்சு இன்னும் வேகாமல் இருக்கிறது

உன் வயதும், உடையும்
என் ஆளுமை இழந்த உன் வாகும்
நெருஞ்சி முள்ளாய்
குத்திக் கொண்டிருக்கும்
பார்வைகளுக்கு முன்னால்
இனி நீ வாழ்ந்துதான் தீரவேண்டும் ஆதலால்
என் வாரிசுக் கோட்டாவின்
சோற்றுப்படியையும் சோலியையும்
உன் உடமை என செய்துக்கொள்
சிரிப்பினாலோ நடையினாலோ
ஆறுதலினாலோ தூய அன்பினாலோ
காதலினாலோ
ஜாடையினாலோ பெயரினாலோ
பேச்சுக்களினாலோ
நீ நெருங்கும் அந்த யாரோ
என் அசைவு தருவார்களானால்
தாமதம் செய்யாமல் வாழ்ந்துவிடு
அவன் என்போலிருப்பதை
அவனிடம் சொல்லிக் கொள்ள வேண்டாம்

என் புகைப்படங்களையும்
விருப்பப்பட்டு சூடிக்கொண்ட
என் இனிஷியலையும்
காதலிக்கும்போது
நான் உனக்கு கொடுத்த
நினைவு பொருட்களையும்
நீ பாசமாய்க் கடித்த
என் மீசை முடிகளையும்
என் சிதையோடிட்டு வதைத்துவிடு
உன்னை மறக்காத
சுமைகளோடு
மறுமைக்குத் துணையாக
அவைகளையும் கூட்டிக்கொள்கிறேன்

கரைகின்ற நாட்களைப்போல
நானில்லாமல்
போகின்ற இரவுகளில்
பல்லி சத்தம்
குலை அறுக்கும்
உருகிவிட வேண்டாம் உன் இளமை
எதற்கும் கலங்காதே
இதோ தகிக்கும் கனலில்
இன்னும் என் நெஞ்சு வேகாமல் இருக்கிறது ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (26-May-16, 3:09 am)
பார்வை : 493

மேலே