எண்ணித் துணிக

எண்ணிச் செய்யின் இன்பம்-எதையும்
எண்ணாது செய்யின் துன்பம்.
திண்ணமுடன் எண்ணிடவும் வேண்டும்-அதை
வண்ணமுடன் செய்திடவும் வேண்டும்.

தொடங்குமுன் நன்றாக யோசி-பின்
தொடங்கிவிடின் அதனையே நேசி.
முடங்காமல் செயல்தனையே ஆற்று-பின்
ஓடாதே அதிலென்றும் தோற்று.

தோல்விதானே வெற்றிக்கு முதல்படி-அதை
தெளிந்துவிடின் எல்லாமே வெற்றிப்படி
வாழ்வினிலே அதையே நீபற்றிப்பிடி –பின்
தாழ்வில்லை என்பதனை உணர்ந்தபடி.

உடும்பெனவே கொள்கையினைப் பிடிப்பாய்-அதை
உதறாமல் வாழ்வினையும் படிப்பாய்
தடுத்திடுவார் தடைதனையும் உடைப்பாய்-அதில்
துடிப்போடு வெற்றினைப் படைப்பாய்.

புயலடித்தால் செத்திடுமோ நாணல் –உன்
புரட்சியிலே விழுந்திடுமோ கோணல்.
அயராத அலைபோலும் முயலு –அதில்
அடங்கிடுமே அதிகாரப் புயலு.

முயன்றவர்கள் தோன்றதுண்டோ சொல்லு-உன்
முன்னேற்றம் முடங்காமல் செல்லு!
தயக்கமதை என்றும்நீ தள்ளு –வரும்
தன்மான வெற்றினை அள்ளு !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (24-Jun-16, 10:38 pm)
பார்வை : 886

மேலே