சின்னப்பொண்ணு

"சின்னப்பொண்ணு"

ரவியும் மகியும் காதல் வானில் பறக்கும் பறவைகள்... பார்த்து மூன்று வருடமாச்சு.. பழகி இரண்டு வருடமாச்சு... காதலில் விழுந்து ஆறு மாசமாச்சு...

ஆறு மாசத்தில் எதற்கெடுத்தாலும் ரவி சொல்லும் ஒரு வார்த்தை என் சின்னப்பொண்ணு சொல்லுச்சு... சின்னப்பொண்ணுக்கு பிடிக்கும்... சின்னப்பொண்ணுக்கு தெரிஞ்சா திட்டும்... சின்னப்பொண்ணு சம்மதிச்சா தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன்..

"யார் இந்த சின்னப்பொண்ணு..? அத்த பொண்ணா.. மாமம்பொண்ணா.....?", எது கேட்டாலும் ரவி சிரித்தே மழுப்பிவிடுவான்....

இப்போதெல்லாம் ரவி சொல்வதற்கு முன்னே... மகியே சொல்ல ஆரம்பித்துவிட்டாள்..

"எதுக்கும் சின்னப்பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்.... அது தானே.. அது தானே சொல்ல வந்த ரவி..."

"ஹே.. கேலி பண்றியா... இரு இரு நான் சின்னப்பொண்ணுகிட்ட உன்னை மாட்டி விடறேன் பார்..."

இப்படியாக காதல் ஓடிக்கொண்டிருந்த போது.. ரவியின் கிராமத்து திருவிழாவும் வந்தது... எதையாவது சாக்காக வைத்து அவன் ஊர் சென்று அந்த சின்னப்பொண்ணை பார்த்து விடுவதென்று காத்திருந்த மகிக்கு அது சரியான வாய்ப்பாக அமைந்தது... அனத்தி அனத்தியே அவனிடம் சம்மதமும் வாங்கி விட்டாள்...

இதோ இன்று காலையிலேயே கிளம்பி இப்போது அவர்கள் ஊரினை அடைந்து விட்டார்கள்... ஊருக்குள் நுழைந்தவுடன் கண்ணில் பட்ட இளம்பெண்களையெல்லாம் பார்த்து கேட்க ஆரம்பித்து விட்டாள்... இது தான் சின்னப்பொண்ணா என்று... அவன் சிரித்து சிரித்து பேசியவாறே... வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்....

கொஞ்சம் வசதியான ஓட்டு வீடு அவர்களை வரவேற்றது... வீட்டு வாசலிலேயே ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தார்.. இவனைப் பார்த்ததும் கண்களில் கண்ணீருடன் கட்டிப்பிடித்துக் கொண்டார்...

வீட்டிற்குள் இருவரையும் அழைத்து சென்று அமரவைத்தார்... வீட்டிற்குள் ஒரு போட்டோவில் ஒரு தம்பதியின் படத்திற்கு மாலை போடப்பட்டிருந்தது... பிறகு வெளியே கடைக்கு சென்றுவிட்டார்...

உள்ளே அமர்ந்தவள் அங்கும் இங்கும் பார்வையை சுழலவிட்டாள்... எந்த சின்னப்பொண்ணும் கண்ணிலே சிக்கவில்லை....

சிறிதி நேரம் கழித்து ஒரு தாத்தா உள்ளே வ‌ந்தார்...

"வாய்யா வா.. எப்படி இருக்க... தனியா தவிக்கிற பாட்டிய விட்டுட்டு பட்டணத்துக்கு வேலைக்கு போயிட்ட... உன்னை தவிக்கவிட்டுட்டு எட்டு வயசுல உன் ஆத்தாவும் அப்பனும் போனவுடனே... உன்னை தாங்கு தாங்கு தாங்குனாலேயா என் தங்கச்சி.. அதுக்கு அவ பட்ட பாட்ட நினைச்சா... ரொம்ப கஷ்டமாயிருக்கும்... சரி சரி சீக்கிரமா கல்யாணத்த பண்ணி அவள நல்லா கவனிச்சுக்க... இப்ப எங்க போயிட்ட என் தங்கச்சி...? ஏ... சின்னப்பொண்ணு... சின்னப்பொண்ணு....", எனக்கூப்பிட்டவாறே.. அவர் தேடிக்கொண்டு வெளியே கிளம்பினார்....

ஆ வென திறந்த வாயை மூடாமல் கேட்டுக்கொண்டிருந்த மகியின் கேள்விக்கான விடை கிடைத்துவிட்டது அல்லவா....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Jul-16, 9:34 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : sinnapponnu
பார்வை : 337

மேலே