ஏமாற்றம்
பள்ளி சென்ற நாட்களது. விடுதியில் படித்த நான் விடுமுறைக்காக வீட்டை நோக்கிய பயணித்த தருணமது. ஒரு வழியாக புறத்தாக்குடியில் இருந்து சமயபுரம் டோல்கேட்டை அடைந்தேன். அங்கிருந்து வீடு செல்லாமல் அப்பா பணிபுரிந்த தாளக்குடிக்கு சென்று அவரோடு இணைந்து வீடு செல்ல தீர்மானித்தேன். தாளக்குடிக்கு பேருந்திற்கான கட்டணம் ஐம்பது பைசா. கும்பல் அதிகமிருந்ததால் நடத்துனர் பேருந்தின் பின்புறம் நின்றவாறே பயணச்சீட்டை வழங்கி வந்தார்.ஐந்து நிமிட பயண தூரமது. மனதிற்குள் ஏமாற்றும் எண்ணம் துளிர்க்கத் துவங்கி இருந்தது. மனசாட்சியோ மெளனமாக உறுத்த துவங்க , வெற்றி கொண்டதோ ஏமாற்றும் எண்ணம்தான். சரியாக ஐந்தாவது நிமிடத்தில் தாளக்குடி நிறுத்தத்தில் பேருந்து நின்றிட நடத்துனர் பின்புறம் இருந்து முன்புறம் நோக்கி வந்தார் அவ்வரசுப் பேருந்தில். பதட்டத்தின் உச்சிக்கு சென்றிட்ட நான் பயத்துடன் இறங்கி ஓடினேன் பேருந்தில் இருந்து. முதன் முறை ஐம்பது பைசாவை மிச்சப்படுத்த எடுத்த முயற்சியில் வெற்றிகொண்டாலும், மனதிற்குள் ஓர் வெறுமையும் குற்ற உணர்வும் ஆட்கொண்ட நாட்களவை. பின்னொருநாள் விடுமுறை முடிந்து விடுதிக்கு செல்ல , ஐம்பது ரூபாய் கொடுத்தனுப்பினார் அப்பா. பணத்தை பத்திரப்படுத்த எண்ணிய நான் எனக்கான தகர பெட்டிக்குள் துணிகளுக்கு இடையே புதைப்பதும் ஒவ்வொரு முறை திறக்கும் போது பார்த்து அகமகிழ்வதுமாய் கடந்திடும் பொழுது. ஒருநாள் மாலை வியர்க விறுவிறுக்க விளையாடி முடித்து ஓடோடி வந்து பெட்டியைத் திறந்த போது ஐம்பது ரூபாய் பணம் மாயமாகி இருந்தது. நானும் படிக்கும் அறை, பயணித்த இடங்கள், துணி உலரும் இடமென ஒவ்வொரு இடமாக அலசியும் பக்கத்து நண்பர்களிடம் விசாரித்தும் ஏமாற்றமே விஞ்சியது. ஆனால் அன்றொரு பாடம் மனதில் ஆழமாய் பதிந்தது அடுத்தவரை ஐம்பது பைசா ஏமாற்றும் பொழுது நமக்கான இழப்பு அதைவிட நூறு மடங்காய் ( ஐம்பது ரூபாய் ) இவ்வாழ்க்கையில் கிடைக்கும் என்று.