பார்வை
பார்க்க வேண்டியதைப் பாராமல்
பார்க்கக் கூடாததைப் பார்த்துவிடும்
பார்வைகளை அறிவதில்லை
அது தோற்றுவிக்கும் சலனங்களில்
நிழந்துவிடும் பிரளயம்.
ஆழ்ந்த தொலைநோக்குள்ள
பார்வையின் மௌனத்தில்
பதுங்கிக் கிடக்கும் அர்த்தங்கள்
கடவுளின் பார்வையில் பூமியின்
வனாந்தரங்களில் மேய்கின்ற விலங்குகளில்
வித்தியாசமானதாய் தெரியலாம் மனிதம்.
பாம்புகளுக்குத் தெரியாமல்
வட்டமிடும் கழுகுகளிடம்
பார்வை வாங்கி இதயம் கொத்தும்
கன்னியரின் விழிகளின் ஓரத்தில்
காயப்பட்டுக்கிடக்கும் காதல்
பாம்பைப்போல் பரிதாபமாய்.
பகிர்ந்துண்ணும் ஒன்றுமையை
பலப்படுத்தும் காக்கைகளின் பார்வையில்
விழுங்கப்படுகிறது
காவு கொள்ளப்படும்
கோழிக்குஞ்சுகளின் பரிதாபம்.
பணம் மட்டும் எதிர்பார்க்கும்
வைத்தியசாலைகளில் நீள்கின்றது
குணப்படுத்தப்படாத நோய்களிலான
வருமானத்தின் பார்வை
பார்வைகள் பற்றிக் கற்பிக்கப்படும்
பள்ளிக்கூடங்களின் மூன்றாவது
கண்களால் பார்க்கப்படுகின்றது
பெற்றோர்களின் வசதிவாய்ப்புப் பார்வை
சுரண்டுவதை மட்டுமே
குறிக்கோளாய்க் கொண்டிருக்கும்
முதலாளிகளால் விழுவதில்லை
தொழிலாளர்களுக்கான
ஊதிய உயர்வு பார்வை.
பெண்ணைப் பெற்றவனிடம்
இலட்சங்கள் கறப்பதை
இலட்சியமாய்க் கொண்டிருக்கும்
அவலட்சணங்களின் ஈனப் பார்வையால்
மாங்கல்ய மாலைகளால் இன்னும்
அலங்கரிக்கப்படாமலேயே கிடக்கின்றது
பல முதிர்கன்னிகளின் கழுத்து
கையூட்டுத் திணிப்புகளால்
கடவுள் கடாட்சமாய்
கவனிக்கப்படாதக் கோப்புக்களின்மேல்
விழுந்து விடுகின்றது
அரச அலுவலர்களின் பார்வை.
புரட்சியின் பதாகை ஏந்திய
போராட்டங்களின் பார்வையில்
திறக்கவைக்கப்படுகின்றது
உரிமைகளின் கண்கள்
எப்போதும்
சிறைக்கம்பிகளுக்குப் பின்னால்
எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும்
விடுதலையின் பார்வை
கள்ள உறவுகளின்
கடைக்கண் வழியே விளைகின்ற
நம்பிக்கைத் துரோகத்தின் பார்வை
அசைத்துப் பார்த்துவிடுகிறது
இல்லற பந்தத்தின் அஸ்திவாரம்.
நாலுபேர் சிந்தனையை
நாசூக்காய் கையாடி
அலங்கரித்துத் தனதாக்கும்
முகநூல் திருடர்களின் பார்வை
பொதுநலம் என்னும் கோட்பாட்டோடு
சுயநலமாய் வேரூன்ற எத்தனிக்கும்
ஆளுமைகள் சனநாயக மைதானத்தில்
அரசியல் விளையாட கால்பந்தாகவே
பார்க்கப்படுகின்றது பொதுசனம் .
பொய்களில்லாத தேசத்தைக் கட்டியெழுப்பும்
பொய்களோடு புறப்படுகின்ற
வாக்குறுதிக் கண்களால் பொதுசனம் பார்க்கும்
அபேட்சக மின்னல்கள்
நாற்காலிகளில் அமர்ந்துகொண்டதும்
பறிக்கப்பட்டு விடுகிறது நீதியின் கண்கள்.
அடுத்தவனுக்குக் குழிதோண்டும்
பார்வைகளோடே விடிகின்ற பொழுதுகளின்
பயங்கரத்த்திற்குப் பயந்தே
கண்களைத் தொலைத்துவிட்டுத்
தெருவில் நடக்கின்ற மாயையில்
குருடர்களுக்கு மட்டுமே மிக அழகாய்
தெளிவாய் இருக்கிறது
வண்ணமில்லாத தங்களின் வாழ்க்கைப் பார்வை.
எல்லையற்றப் பார்வைகளை
எல்லோராலும் பார்க்கப்பட்ட போதும்
உறுதியான காலனின் பார்வை
இறுதியாக முற்றுப்புள்ளி இட
ஊரார் பார்க்கும் பார்வையை
பார்க்காமலேயே போய்விடுகிறோம்
*மெய்யன் நடராஜ்
.

