உள்ளத்தில் பூக்காத அன்பு

தேரழகு தானுடையத் திங்கள் முகமுடையாள்
சீரழகிற் சொக்கிச் சிதைகின்ற - ஊரவரில்
ஓரளவு நீகூட உள்ளம் சிதைந்துருகி
பேரழகி என்பாய் பிணித்து

முந்தானை கொண்டு முழுஅங்கம் மூடியே
பந்தாடும் பாவை பருவத்தைச் - சந்தித்த
நாள்தொட்டு சங்கடத்தில் நீவிழுந்து கொண்டிருப்பாய்
தோள்சேர வென்றுத் துடித்து

கானலின் வீதியில் கண்காணும் காட்சியில்
மீனது வாழ்வதாய் மேவுத - லானதோர்
சாலகம் தோன்றிடும் சாகச மானது
போலவே காதலும் பார் .

சம்மதம் என்கின்றச் சாவி தொலைத்தவள்
உம்மென்று ஒன்றும் உரைக்காமல் - கம்மென்றுக்
கல்யாணம் செய்து கணவனுடன் போகையிலே
எல்லாம் விளங்கும் உனக்கு

கண்சிமிட்டிக் கைகாட்டி காதல் சமிக்ஞையை
பெண்முன்னே காண்பித்தும் பேசாமல் - மண்பார்த்துக்
கொள்கின்ற மாதிரி கொல்பவள் கொள்வது
உள்ளத்தில் பூக்காத அன்பு

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Sep-16, 2:08 am)
பார்வை : 307

மேலே