என்ன வளம் என்ன வளம் இதுவல்லோ அலுவலகம்

வண்ண வண்ணக்கட்டிடம்
வாசலிலே வரவேற்பு
பார்வைக்கு செழிப்பு
பார்ப்பவர்க்கோ பிரமிப்பு


என்ன வளம் என்ன வளம்
இதுவல்லோ அலுவலகம்
பார்ப்பவர்கள் பிரமிப்பார்
பார்வையிலே அளவெடுப்பார்


முன்னால் மடிக்கணனி
பின்னால் நகல்பிரதி
பக்கத்தில் திசைமானி
பார்வைக்கு தொடுதிரை


பார்ப்பவர்கள் பிரமிப்பார்
வாய்வழியில் முணுமுணுப்பார்
அப்பப்பா என்ன வளம்
இதுவல்லோ அலுவலகம்


எப்படியும் ஒருநாளில்
இதுபோல வரவேண்டும்
அப்போது நானும்
மகிழ்ந்து வேலை செய்ய வேண்டும்


பற்பல கற்பனையில்
பார்த்தவர்கள் தாம் மிதப்பர்
அப்பப்பா என்ன சொல்ல
எப்படித்தான் புரியவைக்க


சுழற்காற்றும் சிறு சுழியும்
தூரத்தில் அழகாகும்
சுழன்று அது சுற்றும் வரை
தெரியாது அதன் வலிமை


வாரத்தில் ஜந்துநாள்
வாசமில்லாப் பூவின் நாள்
ஜயையோ திங்களாச்சே
அரக்கப்பரக்க ஓடவேண்டும்
வெள்ளிக்கிழமை வரை
விறைப்புடன் அலையவேண்டும்


அப்பாடா சனியென்று
அடக்கமாய் அமர்கையிலே
திங்களும் வந்துவிடும்
அப்பப்பா என்னபாடு
நாய்படாப் பெரும்பாடு


வேலைச்சுமையாலே
மனமெல்லாம் பயமிருக்கும்
வாரம் எல்லாம் பதகளிக்கும்
வாய்திறக்க மனம் வெறுக்கும்


மணல்மீது விழுந்த மீன்
துள்ளித்துடிப்பது போல்
அறியாமல் வைத்தகால்
ஆட்டிவைக்கும் அளவின்றி


களவேலை என்று சொல்லி
வெளியிலே போவார்கள்
சூரிய சுடுநெருப்பில்
சுருண்டு மனை வருவார்கள்


படவேலை என்று சொல்லி
மடிக்கணனி திறப்பார்கள்
விழி பிதுங்கி தலைவிறைத்து
வெறுப்போடு முறைப்பார்கள்


சூழலை பசுமையாக்க
பக்குவமாய் படையெடுப்பார்
மக்களின் மனதிலே
மாற்றத்தை எதிர்பார்ப்பார்


வெட்டாதே மரமென்றால்
வெட்டுவதே தொழிலென்ற
இறுமாப்பு பேச்சுகேட்டு
எரிச்சலுடன் திரும்பிடுவார்


கூட்டத்தை கூட்டியொரு
குழுவாக சேவை செய்வார்
கொடுத்த குளிர்பானத்திற்கு
காசெடுக்க கால்வலிக்கும்


எடுத்த பொருள் காசுகேட்டு
கடைக்காரர் கரைச்சல் கொடுப்பார்
கொடுத்த வசுச்சர் பிளையெண்டு
எக்கவுண்டன் திருப்பிக் கொடுப்பார்


எல்லாமும் சரிசெய்து
எடுத்தவேலை முடிப்பதற்குள்
பிராணவாயு குறைந்திருக்கும்
குருதியமுக்கம் கூடியிருக்கும்


என்ன வளம் என்ன வளம்
இதுவல்லோ அலுவலகம்
அப்பப்பா என்ன சொல்ல
எப்படித்தான் புரியவைக்க

எழுதியவர் : வினோ சர்மிலா (5-Sep-16, 4:08 pm)
பார்வை : 66

மேலே