சொல்வதெல்லாம் உண்மை இல்லையோ - ஒரு இந்தியனின் கதை

"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரித்தறிவதே மெய்"

எது தேவை யாருக்குத்தேவை, எவ்வளவு முக்கியமாக தேவை என்பதெல்லாம் இன்றைய சூழ்நிலையில் உடனடி அவசியம்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்றொரு பழமொழி உண்டு.

அரசு இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதைப்பற்றி சி.ஏ.ஜி தந்த அறிக்கைகள் எந்த அளவு இன்றைய நிலையில் நீதியை நிலை நாட்டுகிறது என்பதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

சுப்ரீம் கோர்ட் செய்ய வேண்டிய கடமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. குற்றம் செய்தவர்கள் (எத்தனை குற்றவாளிகள் வேண்டுமானாலும் தப்பிக்கலாம், ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது - என்ற) ஒரு சாசுவதத்தின் அடிப்படையில் தண்டனையில் இருந்து தப்பித்து கொண்டிருப்பது காலக்கொடுமை.

இந்த நிலை இன்னும் நீடித்துக்கொண்டே இருந்தால் எப்போது தான் இந்த நாட்டிற்கு விடிவு காலம்?

இன்று இருக்கும் நிலையில் எல்லா நீதிமன்றங்களும் முழு நேரம் உழைத்தால் கூட இன்னும் 35 வருடங்கள் ஆகுமாம், இப்போது இருக்கும் வழக்குகள் எல்லாம் தீர்க்கப்பட.

அந்த 35 வருடங்களுக்குள் இப்போதிருக்கும் நிலையே நீடித்தால் இன்னும் எத்தனை கொடுமையை நாம் அனுபவிப்பது.?

குற்றஞ்சுமத்துவதிலும் எண்ணிலடங்கா பிரச்சனைகளை நாளும் காண்கிறோம்.
டைம்ஸ் நவ், இந்தியா டுடே - இன்னும் எல்லா டிவிகளிலும் தினமும் புதிய புதிய பிரச்சனைகளை பேசுகிறார்கள் - அவற்றில் எவை முக்கியம் எத்தனை முக்கியம் என்பதில் நாம் எல்லோருக்கும் முகச்சுழிப்புத்தான் மிஞ்சுமே ஒழிய,
நல்லவிதமாக எதுவும் இங்கே தென்படவில்லை.

பொறுப்பு என்பது எல்லோருக்கும் முக்கியம்.
தவறான எண்ணம் மீடியாக்களை காசு சம்பாதிக்க வைக்கிறது. மீடியா என்பது மிகவும் அதிமுக்கியமான சாதனம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அந்த தகுதியை இழந்து கொண்டிருக்கின்றன இன்றைய மீடியா நிறுவனங்கள்.

அம்பானிக்கு ராஜ்டிப் சர்தேசாயை பிடிக்கவில்லை என்பதால் அவர் வேறு சேனல் மாறுகிறார், பிரகாஷ் கரத்துக்கு வேண்டியவர் முதலீடு செய்வதால் என்.டி.டி.வி யில் சாதகமான அணுகுமுறை, பி.ஜெ.பி யில் சொந்தக்காரர்கள் இருவர் இருப்பதால் அர்னால்டு காங்கிரசை சாடுகிறார் என்பதை எத்தனை பேர் இங்கே உணர்ந்திருக்கிறார்கள்.

வெளிச்சம் எங்கே எட்டுகிறதோ அங்கிருந்து இருள் விலகிவிடும். இந்தியாவில் 95 சதவிகிதம் இருட்டு தான்.

உண்மையே உன் விலை என்ன?

இன்று பேரம் பேசுவதில் கூட்டுக்கொள்ளை அடிப்பதில் உண்மையை மறைப்பதில் பொய் சொல்வதில் ஏறக்குறைய எல்லோருமே படித்து தேர்ந்த அனுபவசாலிகள் ஆகி விட்டார்கள். அவர்கள் கையில் நாடு மட்டுமல்ல, நல்லவர்களும் நலிந்தவர்களும் கூட பலிகடா ஆகிறார்கள்.

குவிந்து கிடக்கும் குற்றங்களுக்கான சூழல்கள் ஒவ்வொரு அரசு நாற்காலியின் நிழலில் மண்டி மயங்கி கிடக்கிறது.

லஞ்சம் லாவண்யம் என்பதெல்லாம் இல்லாமல் இருக்க இங்கே இருக்கும் அரசு ஊழியர்கள் ஆசைகளைத்துறந்தால் தான் ஆச்சு! எத்தனை பேர் அந்த வேட்கையிலிருந்து விலகி நிற்கிறார்கள்?

அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் இங்கே விலை வைத்து விட்டார்கள். தேர்தலில் சீட்டு பெறுவதில் இருந்து தொகுதிக்கு சேவை செய்வது வரை எல்லாவற்றிலும் ஆதாயம் தேடுகிறார்கள்.

தேர்தல் கமிஷன் ஆடிட் செய்து எத்தனை மாற்றம் இங்கே நிகழ்ந்து விட்டது, எத்தனை பேர் தகுதி நீக்கம் பெற்றனர்? எத்தனை தேர்தல் முடிவுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது? யோசியுங்களேன்.

அரசு உண்மையில் நன்மை செய்யவேண்டும் நலிந்த மக்கள் ஏற்றம் பெற ஏதாவது செய்து தான் ஆக வேண்டும். அது இன்றைய நிலையில் கண்முன் காணக்கிடைக்காத அதிசயமாக அல்லவா இருக்கிறது!

இலவசங்களை அந்தந்த கட்சி தொண்டர்களுக்கு அவ்வப்பொழுது அளித்து அரசின் நிதி நடவடிக்கைகள் இங்கே கணக்கு காட்டப்படுகின்றன.

வருமானத்திற்கு மீறிய சொத்துக்கணக்குகள் லட்சக்கணக்கில் அத்தனையையுமா வருமான வரித்துறை கண்டு கொள்கிறது. ஆள் பற்றாக்குறையும் நிர்வாகத்திறமையின்மையும் இங்கே நம்மை பார்த்து கேலி செய்கிறது.

முகம்மது மலைக்கு வரவில்லை என்றால் மலை முகம்மதுவிடம் செல்லும் என்றொரு பழமொழி நாங்கள் படித்திருக்கிறோம்.

கம்புயூட்டர் வழியாக வருடாவருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்கள் அல்லது சில நபர்களுக்கு மட்டும் திரும்ப தீரும்ப வருமான வரி நோட்டீஷ்கள் அனுப்பப்பட்டு வரிகள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் கண்ணுக்கு தெரிந்த பெரிய நிறுவனங்களின் அல்லது அதிக வருமானம் உள்ளவர்களை பற்றியோ அவ்வப்பொழுது பேருக்கு என்று ஒன்றிரண்டு செய்திகள் அவ்வளவு தான்; அதன் பின் என்ன நடக்கிறது என்பதை ஏன் அவர்கள் தெரிவிப்பதில்லை? கடைசியில் முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைந்து போவது நம்மால் உணர முடியாமல் போவதைப்பற்றி யார் கவலைப்படுகிறோம்?

கார் வைத்திருப்பவர்கள் எல்லாருமே வருமான வரி காட்டுகிறார்களா என்று டிராபிக் போலீசிடம் கேட்க சொல்லுங்கள். அவருடன் ஒரு வருமான வரி அலுவலரை நியமியுங்கள். ஹெல்மெட் நடவடிக்கையை விட மிக சுவராசியமாய் இருக்கும்.

சொந்த வீடு இல்லாத எத்தனை பேரிடம் எவ்வளவு வாடகை தருகிறீர்கள் ஏன் வரிப்பிடித்தம் செய்யவில்லை என்று எத்தனை பேரிடம் இந்த நாட்டில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது?
அது சரி,
டெல்லியில் எத்தனை பேர் டம்மியாக தங்கி இருக்கிறார்கள் என்பதே இப்பொழுதுதான் தெரிய வருகிறது.

அரசு நிர்வாகம் இங்கே சீர் கெட்டு நாள், மாதம், வருடம், யுகம்
ஆகிக்கொண்டே இருக்க நாம் எல்லோருமே கண் கொட்டாமல் எதைப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்?
எதைப்பற்றி கவலைப்படுகிறோம்?

இங்கே எத்தனை நாடகம் இன்னும் தினம் தினம் அரங்கேற நாம் கையாலாகாத
பார்வையாளர்களாய் -
சீசரை புருட்டஸ் போன்றோர் கொன்ற பின் ரோமானியர்கள் எதைப்பற்றியும்
கவலைப்படவில்லை வேடிக்கைதான் பார்த்தார்கள் - ஒரு அந்தோணி வந்து மேடைப்பிரசங்கம் செய்யும் வரை.
அது ஒரு கதையில் நடக்கலாம்.

நிஜத்தில் நடக்குமா?
நம் நாட்டில் அந்த அந்தோணி மாதிரி யாரையாவது பேச வைக்க முடியுமா?
அப்படி பேசினாலும் அந்த ரோமானியர்கள் போல இந்த இந்தியர்கள் திருந்த வழி உண்டா?

சொல்லுங்களேன், உங்களுக்கு தெரிந்தால்.
அது... உங்களுக்கு .....தெரியுமா? அல்லது தெரியாதா?

எழுதியவர் : செல்வமணி (27-Sep-16, 9:17 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 328

மேலே