பேனா முனையில் பெண்மையின் துளிகள்-துளி-06

பேனா முனையில் பெண்மையின் துளிகள்.....

துளி....07...

காதல் மணவாழ்வு அவளுக்கு
தந்திடவில்லை மனமகிழ்வை
காலம் முழுதும் கரம் பிடித்தே
வருவேன் என்றவன்...
கடல் தாண்டும் முன்னே கரையோடே
கைகழுவிச் சென்றான்...
காதல் எனும் பெயரில் அவன்
காம லீலைகள் முடிந்ததும் இடையிலேயே
இடை விலகிச்சென்றான்....

அவனின் காதல் வலையில் சிக்கிய பேதை
இவளும் அகிலம் மறந்து அனைத்தும் அவனென ஆகிப்போனாள்....
அவனோ தன் தேவை முடிந்ததும்
அநாதரவாய் இவளை நடு வீதியில் விட்டே
புயலென மறைந்து போனான்.....

உலகம் அறியா வயதில் முளைத்த காதல்
ஊண் உறக்கம் மறந்திட வைத்தது...
உறவுகளை துறந்து அவனை நம்பி
அவன் பின்னே சென்றிட வைத்தது...
இன்று உணர்வுகளை தொலைத்து
நடைபிணமாய் அவளை வீதிகளில்
அலைந்திட வைத்தது....

தாய்மை அடைந்தும் பெண்மை இவளும்
அழகில் மிளிர்ந்திடவில்லை...
அதை உணர்ந்தே அவளும் மகிழ்வதற்கே
அவள் நினைவுகளும் வசப்படவில்லை...
மழலையை எண்ணி தன் நாட்களை
கடப்பதற்கும் அவளின் சுயமதவும்
அவளிடத்திலில்லை.....

அன்னையிவளின் நிலையினை அறிந்ததாலோ மழலையதுவும் கருவினில்
கலைந்து போனதோ...
அகிலம் காணும் முன்னே தன் தாயின்
துயரை எண்ணி தன் உயிரினை தியாகம்
செய்தே மடிந்து போனதோ....

கரு உதித்ததும் அவள் நினைவிலில்லை
கலைந்து போனதும் இவள் அறியவில்லை..
தன்னையே அவனிடம் தொலைத்த பெண்மை இவளும்....
இன்று முழுதாய் தனை மறந்தே அவனை
தேடி அலைகிறாள்...
உண்மையில் தொலைந்தது தான் என்பதை
மறந்த நிலையில் அவளும்.....

இதை நான் கவிதையாக எழுதவில்லை....என் உணர்வுகளை....என் மனதின் கேள்விகளை....உண்மை நிகழ்வுகளை அப்பிடியே கூறியுள்ளேன்.... துளிகள் தொடரும்......

-உதயசகி-

எழுதியவர் : அன்புடன் சகி (21-Nov-16, 7:06 pm)
பார்வை : 580

மேலே