குதிரை விசுவாசிகள்

ஒரு மருத்துவமனை. அங்கே ஒருவர் படுத்திருந்தார். பக்கத்தில் அவர் மகன் நின்று கொண்டிருந்தான். படுத்திருந்தவர், நோயின் கடுமையால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தார்.

மருத்துவரும் தன்னால் ஆன முடிந்த அளவுக்கு ஏதேதோ செய்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் அடுத்த ஊர்க்காரர் ஒருவர், அவரைப் பார்க்க வந்தார். மகனைத் தனியே அழைத்து, ‘‘தம்பி! உன் அப்பா எனக்கு ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும். அதை இப்போ கொடுத்தா எனக்கு மிகவும் உதவியா இருக்கும்!’’ என்றார்.

‘‘அப்படியா?’’ என்ற மகன் அவரை அழைத்துக் கொண்டு அப்பாவை நெருங்கினான்.

‘‘அப்பா...!’’ என்றான்.

அவர் மெள்ள கண் விழித்தார்.

‘‘அப்பா! இவருக்கு நீங்க ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருக்காமே... சரிதானா?’’

அப்பா மிகவும் சிரமப்பட்டு வாயைத் திறந்து, ‘‘ப்பே... ப்பே... பா... பா...’’ என்றார். பேச்சு வரவில்லை. வந்தவர் பார்த்தார்.

‘‘தம்பி... பரவாயில்லை. பாவம்... அவரால் பேசக்கூட முடியவில்லை. நான் வருகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் வந்தார்.

‘‘தம்பி... அப்பாவுக்கு நான் ஐயாயிரம் ரூபாய் தர வேண்டி இருக்கிறது...’’ என்று ஆரம்பித்தார்.

அப்போது படுக்கையில் இருந்தவர் பட்டென்று எழுந்து உட்கார்ந்தார். தெளிவாகப் பேசத் தொடங்கினார்:

‘‘ஆமாம்... ஆறு மாசத்துக்கு முன்னாடி அவசரத் தேவைனு வாங்கிக்கிட்டுப் போனீங்களே!’’ என்றார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பேச முடியாத அந்த மனிதரால், இப்போது எப்படி இவ்வளவு நன்றாக பேச முடிந்தது?

இன்றைக்கு இப்படியும் சில பக்தர்கள் இருக்கிறார்கள். ஆண்டவனே சிபாரிசு பண்ணினாலும், அடுத்தவர்களுக்கு உதவத் தயங்குவார்கள்.

ஆனால், ஆண்டவனே ‘வேண்டாம்’ என்று சொன்னாலும் கூட, அடுத்தவர்கள் செய்கிற உதவிகளைப் பெற்றுக் கொள்ளத் தயங்க மாட்டார்கள்.

இப்படிப்பட்டவர்களைப் பற்றி என்ன நினைப்பது?

இவர்களை எல்லாம் ‘குதிரை விசுவாசிகள்’ என்று சொல்கிறார்கள் பெரியவர்கள்.

ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

புல் என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதும் குதிரைகள்தானே!

எழுதியவர் : செல்வமணி (2-Mar-17, 8:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 231

மேலே