வயோதிக வரம்
வயோதிக வரம்
மிகவும் ப்ரயாசைப்பட்டு எழுந்து மெதுவே நடந்து கண்ணாடி முன் நின்றார் சபேசன். கண்ணாடியைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி! பத்து நாளைக்குள்ளே இப்பிடியா மாறிப் போய்ட்டேன் . கண்ணெல்லாம் குழி விழுந்து ரப்பையெல்லாம் வீங்கி கன்னம் ஒட்டிப் போய் முகவாய்க்கட்டை நீண்டு முகமே சிறுத்து என்ன ஆச்சு ! ஒரே ஒரு வைரல் இன்பெக்ஷன் காய்ச்சல் இப்படி ஆக்கிவிடுமா . சரியான நேரத்துக்கு மருத்துவரிடம் காட்டி வைத்தியம் செய்துகொண்டாயிற்று. எப்போதுமே காய்ச்சல் வந்தால் ரெண்டே நாளிலே குணமாகி அவர் மீண்டும் தெளிந்துவிடுவாரே .
ஓ வயோதிகம் ! அதிக வயதானாலே வயோதிகம்தானே! . இளமை அது போய் முதுமை வந்தாயிற்று! கன்னத்தின் பக்கவாட்டு முடிகள், தலை முடி புருவம் எல்லாமே வெள்ளையாய் ! நல்ல வேளை அவருக்கு வழுக்கை கிடையாது ஆனாலும்
“காதோர நரை வந்து கட்டியம் கூறும்
கண்கள் சுருங்கி வழி தடம் மாறும்”
என்று அவர் எழுதிய கவிதை நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. எதையுமே கவிதையாக கதையாக எழுதும் போது வரும் வலியை விட நேரிலே அனுபவிக்கும் வலி தாங்க முடியாத ஒன்று என்று அவருக்குப் புரிந்தது.
கரு கருவென்ற அகலமான விழிகளுடன் சுருள் முடியுடன் அவருக்கே உரித்தான பொன் நிறத்தோடு நிமிர்ந்த செருக்கான மார்பகமும் விரிந்த தோள்களும் மனதிலே பயமே இல்லாமல் வளைய வந்து கன்னியரை மயக்கிய அந்த சபேசன் எங்கே போய்விட்டான்! கன்னியரிடம் கைவரிசையைக் காட்ட மனமில்லாத நேர்மை அவரைக் காப்பாற்றியது என்றாலும் அவரைச் சுற்றி வட்டமிட்ட கன்னியர்களின் காந்த அலைகளிலிருந்து தப்பிப்பது கஷ்டமாகவே இருந்தது என்பது உண்மைதானே.
முரட்டு ஆண்களும் இவன்கிட்ட எதுக்கு வம்பு என்று தள்ளிப் போனவர்களே அதிகம் இவரைப் பார்த்தவுடன் இவர் மனதில் உள்ள தைரியத்தை படித்தாற்போல் எதற்கும் தள்ளியே இருப்போம் இவரிடம் என்று ஜாக்கிரதையாக இருந்தவர் பலர் . அப்படிப்பட்ட ஆண்மை ! எங்கே போனது எல்லாம் ? உடம்பால் அழியின் உயிரால் அழிவர் என்று திருமூலரும் தன் வயோதிகத்தை பிள்ளைக்கு கொடுக்க எண்ணிய யயாதியும் நினைவில் வந்து போயினர். கடைசியில் தன் முதுமையை வாங்கிக் கொண்ட புருவின் நினைவு வரவே, புருவை அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்தாராம் யயாதி. அப்படிப்பட்ட சக்தி அவருக்கு இருந்தாலும் தன் வயோதிகத்தை பிள்ளைக்கு கொடுப்பாரா அவர் ? தனக்கு என்ன நேரினும் பிள்ளைகள் நன்றாக தீர்க்க ஆரோக்கியமாக தீர்க்க ஆயுசோடு தீர்க்க சுமங்கலிகளாக இருக்க வேண்டும் என்று தினமும் தூங்கும் முன் எல்லோர் பெயரையும் சொல்லி இறைவனிடம் வேண்டிக்கொண்டு தூங்குபவரல்லவா அவர். அதற்கேற்றார்ப் போல் அவரை கண்ணில் வைத்து இமையில் தாங்கும் பிள்ளையும் பெண்களும் மருமகளும் மருமகன்களும் பேரப் பிள்ளைகளும் பேத்தியும் குறிப்பாக அவரை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் துணைவி பாருவும் அவருக்கு அதிர்ஷ்ட வசமாக அமைந்திருந்தது. இது கொடுப்பினைதானே எத்தனை பேருக்கு கிடைக்கிறது இந்தக் கொடுப்பினை என்று மனம் பூரித்தாலும் இந்த வயோதிகமும் வியாதிகளும் அவரை நிலைதடுமாற வைத்தன என்பதே உண்மை.
பால் மறத்துப் போன பசு , ஒன்றுக்கும் உதவாமல் ஆண்மை இழந்த காளைகளை அடிமாட்டுக்கு விடுவது நினைவுக்கு வந்தது அவருக்கு ! ஒரு வேளை நியாயம் தானோ இதெல்லாம்! அன்பான மக்களாயிருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் எத்தனை நாட்கள் வயோதிகத்தை அடைந்த மாடானாலும் மனிதரானாலும் தாங்க முடியும் ? அதுவும் இயற்கை உபாதைகளில் உதவி,ஒரே இடத்தில் படுத்த படுக்கையில் படுக்க வைத்து குளிப்பாட்டி இருக்கும் அவசரகதி வேலைகளுக்கு நடுவே எத்தனை தாயுள்ளமாக இருந்தாலும் தாக்குப் பிடிக்க முடியுமா மனிதர்களால். வெறுக்காமல் இருக்க முடியுமா அவர்களால் அவர்களை அறியாமலே ? இயலாது என்றே தோன்றியது அவருக்கு.
நல்ல வேளை இன்னும் அந்த மோசமான நிலமைக்கு அவர் செல்ல வில்லை நடமாடிக்கொண்டு அவர் வேலைகளை அவரே செய்து கொண்டிருக்கிறார் . 60 வயதிலே இருதய நோய் வந்து அருவை சிகிச்சை செய்த மருத்துவர் நிச்சயமாக இன்னும் பத்து வருடங்களுக்கு உங்களுக்கு கவலையில்லை. உங்களுக்கு இந்த அறுபது வயதிலும் ரத்த அழுத்தமோ சர்க்கரை நோயோ இல்லை ஆகவே நல்லவிதமாக அறுவை சிகிச்சை முடிந்தது என்று சொன்னது நினைவில் வந்தது .
இப்போது அவர் எழுவதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் ஆனாலும் பார்ப்பவர்கள் 60 வயதுக்கு மேல் சொன்னால் ஒப்புக்கொள்வதில்லை அப்படிப்பட்ட கட்டுக் கோப்பான உடம்பு . அதுவா இப்படி தளர்ந்து ரத்த அழுத்தம் வந்து தலை சுற்றல் வந்து இப்படி வாடுகிறது என்று நினைக்கும் போது அவருக்கு இயலாமையினால் கண்ணீர் வந்தது.
அவர் கண்ணீரை அவரே காண விருப்பபடாததால் கண்ணாடியிலிருந்து பார்வையை வலுக்கட்டாயமாக திருப்பி வந்து உட்கார்ந்தார். எப்படியும் இனி வரும் நாட்களில் வயோதிகம் அதிகரிக்குமே , வியாதிகள் நெருங்குமே அப்போது தளர்ந்து படுத்த படுக்கையாய் ஆகி எல்லோருக்கும் கஷ்டத்தை அளிப்பது சரிதானா என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார் சபேசன்.
பார்வையை கிருஷ்ணன் படத்துக்கு திருப்பி என்ன பரமாத்மா கண்ணா இப்பிடிச் செஞ்சிட்டே வாழும் வரைக்கும் உன்னோட லீலைகளையே பாடி ஆடி எல்லோரையும் மகிழ்வித்தேனே என்றார் . சபேசா என்றொரு குரல் கேட்டது வாசலில் அவர் நண்பர் கிருஷ்ணன் வந்துகொண்டே என்ன சபேசா இப்போ பரவாயில்லையா என்றார்
வாப்பா ஏதோ பரவாயில்லே ஆனாலும் முழுசா சரியாகலே என்றார் சபேசன்.
நமக்கு எல்லாத்துக்கும் அவசரம் வரும்போது சீக்கிரம் வரதெல்லாம் போகும்போது சீக்கிரம் போகாது சபேசா பொறுமையா இரு மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடு. நினைச்சதும் ஏறிப் போயிட ஏணியா இருக்கு என்றார் அவர் மனதைப் படித்தாற்போல் . இந்த பல்பு உயிரை விட்டுடுத்து . கியாரண்டி முடிஞ்சு ஒரு நாளைக்குள்ளே உயிரை விட்டுடறாமாதிரியே தயார் பண்றாங்க . அறுபது வயசானாலே அதுக்கப்புறம் வாழற வாழ்க்கை போனஸ்மாதிரிதானே அதை நாம குறைசொல்ல முடியுமா லைட்டுக்கு ஒரு பல்பு வாங்கணும் அப்போதான் எரியும் வாங்கலாமேன்னு வந்தேன் அப்பிடியே உன்னையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன் சரி நான் வரேன் என்றபடி கிளம்பிப் போனார். கிருஷ்ணன் படத்தையே பார்த்து என்ன நான் கேட்டது காதிலே விழுந்துதா அதான் அவனை அனுப்பினியா என்றார் புன்னகைத்தபடி. அதெல்லாம் சரி ஏணி இல்லேதான் ஆனா வேற வழியா இல்லே போகனும்னு முடிவு பண்ணிட்டா எப்பிடியும் போகலாமே என்றார் .
நாம நெனைச்சா எல்லாம் நடக்கறதா என்ன இன்னிக்கு பாத்து கடை லீவுங்கறான் நாளைக்குதான் பல்பு கிடைக்குமாம் இங்கே வேற கடையுமில்லே இன்னிக்கு இருட்டுலேதான் இருக்கணும் போல இருக்கு என்றார் கிருஷ்ணன் மீண்டும் வந்து . என்ன கிருஷ்ணா இதுக்கு போயி ஒரு நாளைக்குதானே அட்ஜஸ் பண்ணிக்கோ நாளைக்கு வாங்கிப் போட்டுக்கலாம் என்றார் சபேசன் சரி நான் வரேன் நமக்கு எல்லாமே அவசரம்தானே என்று சொல்லிவிட்டு சிரித்தபடி போனார் கிருஷ்ணன்.
ஆமாம் நாம வாழற வாழ்க்கையே போனஸ்தானே என்று கிருஷ்ணன் சொன்னது நியாயமாவே பட்டுது அவருக்கு. போனசைக் குறை சொல்ல முடியாது அனுபவிச்ச வரைக்கும் போதும்னு திருப்தியா இருக்க வேண்டியதுதான் . ஆனா இந்த பல்பை கிருஷ்ணன் தூக்கிப் போட்டா மாதிரி நிலமை வரக் கூடாது என்று தீர்மானித்தவர் .
கிருஷ்ணன் படத்து கிட்டே போயி நின்று கைகூப்பினார் . ஏதோ நினைத்தவராய் அவருடைய சகதர்மிணி பார்வதி கிட்ட சொல்லிட்டு போகலாம்னு நெனைச்சவர் வேண்டாம் அவளாலே தாங்க முடியாது கூறாமல் சன்யாசம் கொள் அப்பிடீங்கறது உடம்புக்கும் மனசுக்கும் மட்டுமில்லே உயிருக்கும்தான் என்று தெளிந்து ஒன்றும் சொல்லாமலே வெளியே சென்றார்
ஒவ்வொரு அடியாக எடுத்து ஆனால் உறுதியுடன் கடற்கரை நோக்கிப் போனவர்க்கு சிரிப்பு வந்தது. நல்ல வேளை அவர் நீச்சல் கத்துக்கலை. கடலில் இறங்கி நடந்து போய்க்கொண்டே இருந்தவர் ரொம்பத் தூரம் நடுக்கடலுக்கே மிதந்து அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டு மூச்சுத் திணறி மூழ்கினார் . ஒரு பகுதியில் மூழ்கினார் , சிறு சிறு மீன்கள் வந்து கடிக்கத் தொடங்கின . அவருக்குள் ஒரு பயம் வந்தது. தப்பு செஞ்சிட்டமோ பதறித் துடித்து எப்படியாவது கரை சேர்ந்துவிடவேண்டும் என்று கையைக் காலை அடித்துக்கொண்டு முயன்றார்
மச்சாவதார கிருஷ்ணன் ஒரு பெரிய மீன் வடிவில் அவரை நோக்கி வந்துகொண்டிருப்பதை அறியாமலே. மச்சாவதாரம் வாலைச் சுழற்றி ஒரு அடி அடித்தது. திடுக்கிட்டு விழித்தார் சபேசன் . கிருஷ்ணன் படத்தின் எதிரேதான் நின்று கொண்டிருக்கிறார் , பக்கத்தில் அம்மா படம் அவரையே பார்த்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது, . சபேசா புற்றுநோய் வந்து பத்து வருஷம் அவஸ்தைப் பட்டபோதுகூட நான் இப்பிடி நெனைக்கலையே இப்போ என்ன ஆய்ப்போச்சு ?
உடம்புன்னு ஒண்ணு இருந்தா ஏதாவது வரும் போகும் உயிருன்னு ஒண்ணு இருந்தா தானாதான் போகணும் நாமா போக்கிக்க கூடாது போயி தூங்கு . வாலிபம்னு ஒண்ணு இருந்தா வயோதிகமும் இருக்கத்தானே செய்யும் வயோதிகமும் வரம்தாண்டா என்று மாயன் கிருஷ்ணனின் மயிலிறகு போல் அம்மாவின் குரல் வருடியது . மீண்டும் வெகு ப்ரயாசைப்பட்டு வந்து படுத்தார் . இந்தாங்க இந்த மாத்திரையைப் போட்டுண்டு தண்ணி குடிச்சுட்டு மனசக் கொழப்பிக்காம நிம்மதியா தூங்கி எழுந்திருங்க எல்லாம் சரியாயிடும் என்றாள் பாரு என்கிற பார்வதி எல்லாம் தெரிந்தவள் போல்
சுபம்
தமிழ்த்தேனீ