‘‘அன்னை’’

‘ அன்னை


இலக்கியத் தாய் ஈன்றெடுத்த ஏற்றமிகு குழந்தையே கவிதை, தோற்றத்தால் தொன்மையானதே பாட்டு. ‘‘உள்ளத்து உள்ளது கவிதை, இன்ப உருவெடுப்பது கவிதை, தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மைஆற்றல் மிக்க கவிதை நமக்களிக்கும் அரும் பயன்கள், இத்தகைய கவிதைகளைக் கள்ளங் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட இளஞ்சிறார்கள் பண்சுமந்த பாடல்களாகப் பாடிக் களிக்கும்போது கொள்ளை இன்பம் பெறுகின்றனர். எனவேதான் இளஞ்சிறார்களுக்கு ஏற்ற இத்தகைய பாடல்கள் குழந்தை இலக்கியத்தின் இன்றியமையாத கூறாகக் கருதப்படுகின்றன. இவற்றைக் குழந்தைப் பாடல்கள் என்பார்கள்.





குழந்தைகளைப் பற்றிய பாடல்கள் பல பழந்தமிழ் இலக்கியத்தில் உண்டு. ஆனால் குழந்தைகள் படிப்பதற்குரிய பாடல்களை யாத்தவர் ஔவையார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன்,மூதுரை, நல்வழி முதலிய அவர்தம் பாடல்கள் அனைத்தும் அறக் கருத்துக்களையே மிகுதியாக உணர்த்துகின்றன. இந்நூற்றாண்டில் பாரதியார் குழந்தைப் பாடல் இலக்கியத்திற்குத் தம் பாப்பாப் பாடல்கள் மூலம் வழிகாட்டினார். அவர் வழிகாட்டிய ஒளி விளக்கில் நின்று கவிமணி குழந்தை உள்ளத்துடன் பல பாடல்களை இயற்றினார். பின் குழந்தைக் கவிஞர், அழ. வள்ளியப்பா இந்த இலக்கியத் துறையில் இன்று பீடு நடை போடுகின்றார்.





இவர்கள் வரிசையில் சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் க.து.மு. இக்பால் இளங் குழந்தைகள் பாடிப் பழகுவதற்கு ஏற்ற வகையில் தாம் இயற்றிய அழகுத் தமிழ்ப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை, ‘‘அன்னை’’ ன்னும் பெயரில் இப்போது வெளியிடுகிறார். நண்பர் இக்பால் சிங்கப்பூரில் உள்ள செந்தமிழ்க் கவிஞர்களில் சிறந்தவர். கற்பனை வளமும் கவி பாடும் உள்ளமும் கன்னித் தமிழ்ப் பற்றும் ஒருங்கே பெற்றவர். எளிய தமிழில் இனிய முறையில் தெளிவாகப் பாடும் இயல்பினர். இவர் சிங்கப்பூர்ச் சூழலை ஒட்டிக் குழந்தைகளுக்காகப் பாடிய பாடல்கள் பல சிங்கப்பூர் வானொலியில் ‘‘பாடிப் பழகுவோம்’’ என்னும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாயின. அவற்றுள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இந்த ‘‘அன்னை’’ என்னும் தொகுப்பில் அளித்துள்ளார்.





இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் இளங்குழந்தைகளுக்கு அறிமுகமான பல பொருட்களைப் பற்றியவை. ஊசி முதல் இயந்திர மனிதன் வரை, எறும்பு முதல் எழில் அருவி வரை பலவற்றை உள்ளடக்கியவை. எங்கும் நிறைந்தவனை என்னும் முதற் பாடல் இறை உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. சிங்கப்பூர் , நமது கொடி என்பன நாட்டுப்பற்றை ஊட்டுகின்றன. அன்னை, பாட்டி, தங்கை,பிள்ளைச் செல்வம் என்பன குடும்பப் பிணைப்பினை வளர்க்க உதவுகின்றன. எறும்பு, சேவல், கிளி, காகம், தேன்கூடு்,நானிலம், மின்னல், கடற்கரை, அருவி, வேர்கள்., இடி, மழை என்பன இயற்கை இன்பத்தில் ஈடுபடச் செய்கின்றன. கதை இலக்கணம் சொல்கிறது. கண்ணன் எறிந்த கல் அதற்கு இலக்கியம் ஆகிறது. எதிர்காலத்தில் குழந்தைகளை மருத்துவராகவும், விஞ்ஞானியாகவும் ஆகுமாறு தூண்டுவன சில. தொழிலாளியும் கூட்டுறவும் நாட்டு வளம் காட்ட வருகின்றன. காலணி, உடல்நலம் பேணச் சொல்கிறது. தலை என்னும் கவிதை எண்சாண் உடம்புக்கு தலை இன்றியமையாத உறுப்பாவது ஏன்?என்பதற்கு விடை தருகின்றது. வாழைப்பழமும் டுரியானும் மண்ணின் வளங்காட்டிப் பழச்சுவையை ஊட்டுகின்றன. படி, உச்சரிப்பு, கடிதம், கணிதம் பயில்வோம், தெரிந்து கொள் என்பன கல்வி தொடர்பானவை. அழகு தரும் இன்மொழி நினைவில் நிறுத்து, ஆசை என்பன ஒழுக்கம், ஊட்டுதற்கு என எழுந்தவை. முயற்சி வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் நிலையில் அயற்சி நீக்கத் தூக்கமும் அளவுடன் தேவை என்னும் கனிவுக் கட்டளையம் இடம் பெறுகிறது. உருவம் பார்த்து என்னும் கவிதை ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்னும் வள்ளுவரின் கருத்தை நினைவுறுத்த வருகிறது. மணிப்பொறி காட்டிக் காகிதப் பூப்போல் வாழாமல்,காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என விடுக்கும் எச்சரிக்கையும் இங்கே உண்டு. இவர் பாடல்கள் ‘‘செவி நுகர் கனிகள்’’ எனக் கூறுகிறது. காது - சிந்தைக்கு விருந்து என்று செப்புகிறது நம் உள்ளம். இறுதியில் உள்ள கவலை வேண்டாம் என்னும் கவிதை இளம் குழந்தைகளை நோ்க்கி, ‘‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’’ என்று நம்பிக்கை ஒளி நல்குகிறது. இவ்வாறு இளங் குழந்தைகளுக்குப் பழக்கமான பொருள்களைப் பாடி இன்புறுத்திப் பிஞ்சு உள்ளங்களில் பண்பாட்டை விதைக்கும் இவர் பாடற் பாங்கு பாராட்டுதற்குரியது.





‘‘எறும்பே நீ ஓர் அதிசயமே! இறைவன் அறிந்த அதிசயமே! இரவில் உறக்கம் கொள்வாயோ, என்னிடம் அதனைச் சொல்வாயோ?’’ என எறும்பை வினவுவதும், ‘‘விழுந்த பல்லைத் தேடியோ வீதி எல்லாம் நடக்கிறாய்? , இழந்த பருவம் தன்னையோ எங்கும் தேடி அலைகிறாய் ’’ எனப் பாட்டியைக் கேட்கும் வினாவும் இக்பாலின் கற்பனைக்கு எடுத்துக் காட்டுகளாக இலங்குகின்றன. ‘‘இருண்ட வான வீதியிலே எரியும் மத்தாப்பு! அது இடியடன் கலந்தே மேகத்தாய் சொரியும் மின்னல் பூ’’ இது இவர்தம் கவிதை வளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. படி,காது என்னும் கவிதைகள் சொல் விளையாட்டைச் செப்புகின்றன. காலணி, ஊசி, இயந்திர மனிதர் என்பன புதுக் கண்ணோட்டப் போக்கிற்குச் சான்றுகள். அழகு தரும் தங்கை உவமைத் திறத்திற்குச் சான்றாக ஆடுகிறாள். இளஞ்சிறார்களுக்கு ஏற்ற எளிய தமிழ் நடை, அரிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள். சுருக்கமாகச் சொல்லப் போனால் இத் தொகுப்பில் உள்ள இக்பாலின் பாடல்கள் எளிமையில வாழைப்பழம்., சுவையில் டுரியன், தமிழ் மணத்தில் தங்கநிற மல்கோவா மாம்பழம், , கருத்தாழத்தில் கவின்மிகு பலாச்சுளை,





இத்தகைய பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டதால் நண்பர் இக்பால் உண்மையில் நம் சிறார்களுக்கு ஓர் நற்றமிழ் அன்னையாக விளங்குகிறார். தமிழ்ப் பால் நினைந்தூட்டும் தாயாகிய கவிஞர் இக்பாலுக்கு என் பாராட்டுக்கள். இவர் தம் தமிழ்த்தொண்டு இன்னும் சிறக்க வாழ்த்துகிறேன். சிங்கப்பூர் தமிழ் சிறார்களும் செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியரும் இந்நூலை வாங்கிப் படித்து இன்புறுதல் வேண்டும். இதன்வழி இதயம் பண்படுதல் வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

எழுதியவர் : (23-Mar-17, 4:24 am)
பார்வை : 512

சிறந்த கட்டுரைகள்

மேலே