மௌன காதல்
என் காதல் தெரியாமல் நடிக்கின்றாளா அல்லது புரியவில்லையா? இதை நினைத்து அவள் மேல் கோபப்படுவதா அல்ல என் இயலாமையை நினைத்து என் மேல் நானே கோபப்படுவதா? நினைத்தால் தொண்டை அடைக்கின்றது, கண்கள் குளமாகின்றது. ஆம் அவள் பெயர் நித்யா. என் வீடு இரண்டு வீடு தள்ளி என்னவளின் வீடு. நித்யாவின் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு செல்வதால், அவளை என் வீட்டில்தான் விட்டு விட்டு செல்வார்கள். அப்பொழுது அவளுக்கு வயது பத்திருக்கும். எனக்கும் அதே வயதுதான். அப்பொழுதுதான் ஏதோ ஒரு ஊரிலிருந்து நித்யாவும் அவளின் அப்பாவும் அம்மாவும் மாற்றலாகி வந்தனர். எந்த ஊர் என்று சரியாக தெரியவில்லை. அவர் வந்த முதல் நாளே அம்மா அவர்களிடம் பேச்சு கொடுத்து நன்கு பழக்கமாகி விட்டனர் என் அம்மாவும் என்னவளின் அம்மாவும். அந்த பழக்கத்தில்தான் நித்யாவை என் அம்மா பார்த்துக்கொள்வதும், என்னுடன் அவள் பள்ளிக்கு செல்வதும்.
நாங்கள் இருவரும் பலமுறை சண்டை போட்ட கொண்டாலும் மறுகணமே அதை மறந்து விட்டு பேசிக்கொள்வோம். உறங்கும் நேரத்தை தவிர மற்ற எல்லா நேரத்திலும் நங்கள் ஒன்றாகத்தான் இருப்போம், ஒன்றாகத்தான் படிப்போம், ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். இப்படியாக எங்கள் நட்பு வளர்ந்தது. எந்த விஷயமாக இருந்தாலும் என்னவள் என்னிடம்தான் விவாதிப்பாள். என்னவள் பர வந்த காலத்தில் அவள் பட்ட வேதனையை பற்றி சிறிதும் தயக்கம் இன்றி என்னுடன் பரிமாறிக்கொள்வாள்.
ஆம் அன்று வயது பதினாறு இருக்கும், அரசாங்க தேர்வு இருப்பதால் மும்முரமாக படிக்க வேண்டிய தருணம். பள்ளியில் ஓய்வெடுக்கும் இடத்தில் நித்யாவுக்காக காத்திருந்தேன். அங்கே ஓடிவந்த நித்யா அழுதுகொண்டே என் தோளில் சாய்ந்து கொண்டு, பேச வார்த்தை இல்லாமல் தேம்பித் தேம்பி, அரவிந்த் அந்த சிவா எனக்கு லவ் லெட்டர் கொடுத்திட்டான், என்னென்னு கேளு அரவிந்த்" என்றாள்.
உடனே எனக்கு வந்ததே ஒரு கோபம் என்ன தைரியம் இருந்தால் என்னவளுக்கு லவ் லெட்டர் கொடுத்திருப்பான் என்று முனங்கி கொண்டு சிவாவை தேடி அவன் சட்டையை பிடித்து கீழே தள்ளினேன். கீழே விழுந்தவன் எகிரி கொண்டு வந்த என்னை தள்ளினான். "நீ ஏன்டா நித்யாவுக்கு லவ் லெட்டர் கொடுத்தே" என்று பளார் என்று விட்டே ஒன்னு. இனிமேல் நித்யகிட்டே வாலாட்ட நினெய்ச்சே தொலைச்சிருவேன் என்றேன். வலி தாங்காத அவன் என்னை பார்த்து "நீ என்ன அவளுக்கு வக்காலத்து வாங்கறே, அவளை லவ் பண்றயா டா நீ" அதான் உனக்கு பாத்துக்கிட்டு வருதோ" என்றான்.
அப்படி அவன் கேட்டவுடன், "அவள் என் பிரெண்டு டா" என்றேன். மேலும் அவனை கோபமாக திட்டி மேலும் ஒரு அரை விட்டேன். அவ என் பிரெண்டு டா என்று வாயால் மட்டும் வந்ததே தவிர மனசுல அவளை என் காதலியாதான் பார்க்கிறேன். "ஆம். நித்யா என்னவள் என்று அவள் நினைவாகத்தான் இருப்பேன்". ஆனால் என் காதலை வாழிட சொல்லமாட்டு என்னால் இயலவில்லை, அது ஏனோ எனக்கும் புரியவில்லை. அவள் பழகுவதை பார்த்தால் அவளுக்கும் என் மேல் காதல் இருக்கும் என்று நம்பினேன். அது மட்டும் இன்றி சிவா லவ் லெட்டேர் கொடுத்த போதிலும் பெற்றவளிடம் கூட சொல்லாமல் என்னிடம்தான் சொன்னாள். அப்படி என்றால் அவளுக்கும் என் மேல் காதல் இருக்கும் தானே என்று நினைத்து மனதை ஆறுதல் படுத்தி கொண்டேன். ஏன் இந்த போராட்டம் அவளிடமே சொல்லிவிடவே நான் உன்னை காதலிக்கிறேன் என்று. ஐயோ... ஐயோ... அப்புறம் அவள் என்ன நினைப்பாள். காதலை சொல்ல போய் நட்பு கேட்டுவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம், என்னவளின் பெற்றோருக்கு தெரிந்தால் அப்புறம் நித்யாவை என்னுடன் பழகுவதற்கு தடை சொல்லி விடுவார்கள் என்ற பயமும் சேர்ந்து ஒன்றாக கொல்லுதே. பருவ வயது வந்ததும் எனக்குள் காதல் ஆனதே, ஆனால் அவளுக்கு அப்படியாக இல்லையே. ஆண்களுக்கு மட்டுமே உள்ள தவிப்பு கொடுமையிலும் மிகவும் கொடுமை.
அரசாங்க தேர்வெல்லாம் எழுதி ஒரு வழியாக நித்யா அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ ஓரளவுக்கு தேர்ச்சியாகி விட்டேன். நித்யா என்னிடம் வந்து என் தேர்ச்சி விகிதத்தை கண்டு, "ஏன்டா அரவிந்த் நீ ஓழுங்கா படிக்கவில்லையா"? "நாம் இருவரும் ஒன்றாகத்தானே படித்தோம் பிறகு எப்படிடா என்னை விட புள்ளிகள் குறைந்தன" நீ யாரையாவது சைட் அடிக்கிறாயோ? என்றாள். நான் ஒரு கணம் மௌனம் சாதித்தேன். எப்படி நம் மனதில் உள்ளதை அப்படியே சொல்லுகிறாள்? பலே கில்லாடி தான் போல. ஆனால் நான் அவளைதான் சைட் அடிக்கிறேன் தெரியலையா? இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கிறாளா? "அரவிந்த் நாம் இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே பயிற்சி துறையில் எழுதி போடுவாமா"? என்றாள். நான் கேட்க நினைத்ததை அவளே கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி மனதில். "சரி நித்யா, நாம் இருவரும் எந்த காலத்தில் பிரிந்திருக்கிறோம் இப்போ பிரியறதுக்கு, ஒரே கல்லூரிக்கு செல்வோம்" என்றேன். அந்த நேரத்தில் அவளின் முகத்தை கவனித்தேன், எதாவது காதல் நடவடிக்கை தெரிகிறதா என்று அவளோ எந்தவொரு சலனமும் இல்லாமல் எந்த கல்லூரிக்கு எழுதி போடலாமென்று நோட்டமிட்ட
படியே அதே தான் அரவிந்த், ஒரு போதும் பிரிஞ்சதே இல்லை என்று எந்தவொரு சலனமும் இல்லாமல் சொன்னாள். அவள் மனதில் நானில்லை
என்பது போல் தோன்றியது. இதயம் வெடித்தது போல் இருந்தது. "கண்ண காட்டு போதும், நிழலாக நானும் வாரேன், என்ன வேணும் கேளு, பாடல் அம்மா திறந்த வானொலியில் ஒலித்ததில் என் வேதனையை மேலும் கூட்டியது. ஒரு வழியாக என் மேல் காதல் என்ற உணர்வு இல்லாவிட்டாலும் என்னை விட்டு பிரிந்து விட கூடாது என்பதற்காக ஒரே கல்லூரில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பம் போடுகிறாளே, அது போதும் என் மேல் ஏதாவது ஒரு உணர்வு இருக்கிறதே என்று என்னை நானே சமாதானம் படுத்தி கொண்டேன்.
பிரிஞ்சதே இல்லை என்று சொன்னவள் இன்று காதல் கடிதத்தை நீட்டினாளே, அவள் காதலுக்கு தூது போக சொல்லி. ஆம். நானும் என்னவளும் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்து முதல் ஒரு வருடம் என்னுடன்தான் செல்வது போவதும். என்னவள் பெண்கள் கல்லூரி விடுதியிலும் நான் ஆண்கள் விடுதியிலும் இருந்தேன். எங்கள் பெற்றவர்களை பிரிந்து வெகுதூரம் வந்து பயிலும் எங்களுக்கு நாங்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தோம். அலைபேசியும் பெற்றோர்கள் எங்களுக்கு வாங்கி கொடுத்து அனுப்பினர். இரவு தத்தம் விடுதிக்கு சென்றபின்னரும் அலைபேசியில் வெகு நேரம் எதாவது பேசி கொண்டுதான் இருப்போம். இப்படியாக என்னவளுடான பழக்கம் சுமுகமாக இருந்தது. நான் என் மனதினுள் அவளை காதலியாக கோட்டை கட்டி இருந்தேன். வந்தானே ஒருத்தன் என்னவளின் வாழ்வில், என் காதலுக்கு தடையாக, காதல் செய்வது என்பது பாம்பின் தலையை பிடித்து இருப்பது போல். நழுவவிட்டால் கொத்தி விடும் பரவும் விஷம் என்பது புரிந்தது. என் காதலை நான் நழுவி மெல்ல மெல்ல வாழ் பிடித்து இருக்கிறேன் போலும், நாளுக்கு நாள் வலி அதிகமாகியது.
இதற்கு காரணம் அவன்தான் ஆம் அவனேதான், குமார், எதிரி. என் காதலின் எமன். சொர்க்கமாக இருந்த என் வாழ்வை நரகமாக்கியவன். ஒளி வீசிய என் வாழ்வை இருளாக்கியவன். அன்று நித்யா மிகவும் சந்தோசமாகவும் புத்துணர்ச்சியாகவும் என்னிடம் பேசினால். பேசியவள், என்னிடம், "அரவிந்த் நான் அழகா இருக்கேனா",என்றாள்.
"உனக்கு என்ன குறை நிதயா, செதுக்கி வச்ச சிலை போலிருக்க" என்றேன் உள்ளுக்குள் அவள் என்னிடம் காதலை சொல்லத்தான் வந்திருக்கிறாள் என்று உறுதியாக நம்பினேன்.
"ஏன் நித்யா உனக்கு உன் அழகினில் என்ன சந்தேகம்" என்றேன்.
அவள் ஒரு மடித்திருந்த வெள்ளை தாளை எடுத்து நீட்டிய படி "அதெல்லாம் ஒன்னும் இல்ல அரவிந்த், நான் குமாரை காதலிக்கிறேன், என் காதலை எப்படி அவனிடம் சொல்லறது என்று தெரியவில்லை. நீதான் என் காதலுக்கு தூது போகணும்" என்றாள்.
பலார் என்று ஒரு அரை விட்டு "ஏண்டி நித்யா உன் பின்னாலேயே இத்தனை வருஷமாக சுத்திகிட்டு இருக்கிறேனே என் காதல் உனக்கு தெரியவில்லையா? என்னை காதலிக்கனும்னு உனக்கு புரியவில்லையா? ஏன் அரையின் வலி தாங்க முடியாமல் அழுது கொண்ட இருந்தாள். அரவிந் என்று யாரோ அழுத்தமாக அழைத்தபோதுதான் சுயநினைவுக்கு வந்தேன்.
"அரவிந் இந்த கடிதத்தை குமாரிடம் கொடுத்து என் காதலை புரியவைடா... ப்ளீஸ் டா"... என்றாள்.
என்னால் அவளை அரைய வேண்டும் என்று மனதில் தோன்றியதே தவிர, என்னால் செயல் படுத்தமுடியவில்லை. என் காதலும் அப்படிதான், என் காதலை என்னால் அவளிடம் சொல்லமுடியவில்லை. "சரி நித்யா, அவனிடம் இந்த கடிதத்தை கொடுத்து நீ நேசிக்கும் விசயத்தை எடுத்து சொல்கிறேன்" என்று சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் மெல்லிய புன்னகையை வீசிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தேன். அவள் என்னை கண்காணிப்பதை உணர்ந்தேன். தெரியாதது போல் தலையை குனிந்து கொண்டு கண்ணில் வழியும் நீர் தரையை தொடும் முன் துடைத்தேன்.
அவள், ஆம் என்னவள் கொடுத்த காதல் கடிதம் தான் காரணம் கதையின் முன் நான் புலம்பியது. விடுதியில் இரவில் நான் மட்டும் தூங்காமல் அவள் கொடுத்த கடிதத்தை நோக்கியவாறே குலுங்கி குலுங்கி அழுதேன். இது என்ன கொடுமை. கொடுமையிலும் கொடுமை, தான் காதலித்த பெண்ணுக்கே காதல் தூது போகும் காதலனாய் நான். சினிமாவில் இது போன்ற காட்சிகள் வந்தால் மிகவும் ரசிக்கும் மனது நிஜ வாழ்வில் வந்தால் கொடுமையே. இப்படியே காதலை சொல்லாமல் வாயை மூடி கொண்டிருந்தால் நாளை பிள்ளையை என் கையில் கொடுத்து என் பெயரையே வைப்பால் போலிருக்கே. என்னால் புலம்பத்தான் முடியும். அவள் கொடுத்த கடிதத்தை நான் குமாரிடம் கொடுக்க முடிவெடுத்தேன். மற்றவர்களுக்கு கிடைக்க இருக்கும் அன்புக்கு நான் இடையூறாக இருக்க விரும்பவில்லை. நான் கடிதத்தை அவனிடம் கொடுத்துவிட்டு என் நித்யாவின் வாழ்விலிருந்து விலக முடிவெடுத்தேன்.
நானும் போகும் இடமெல்லாம் தனியாக சென்ற போதும் கூட அவள் என்னுடன் இல்லாதது என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லையே. காதலையும் சொல்ல முடியாமல் அவளை மறக்கவும் முடியாமல் தவிக்கிறேன். மறுநாள் குமார் என்னை தேடி வந்து பதில் கடிதத்தை என்னிடம் நீட்டினான். அரவிந்த் இதை நித்யாவிடம் கொடுத்து விடு. நானும் நித்யாவிடம் கொண்டு வந்து கொடுத்தேன், பெற்ற மறுகணமே அவள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. குமாரை சரக் சரக் என்று குத்தி விட வேண்டும் போல் இருந்தது. என்னிடம் இல்லாதது அவனிடம் என்ன இருக்கிறது. என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை, அவ்விடத்தை விட்டு கிளம்ப முட்பட்ட போது, "அரவிந்த், குமார் என்னை சந்திக்க அழைக்கிறான், நான் போகட்டா". என்று கொஞ்சலாக கேட்டாள். உன்னை காதல் செய்யும் என்னிடம் அனுமதி கேட்கிறாளே. என்ன கொடுமை, மனதுக்குள் குமுறினேன்.
"அரவிந்த் உனக்கு என்னாச்சு, ஏன் இப்பெல்லாம் முந்தி மாதிரி என்னிடம் பேசுவதில்லை. எப்பவும் சோகமாகவே இருக்க, உனக்கு நான் குமாரை காதலிப்பது பிடிக்கவில்லையா? அப்படி எதாவது இருந்தால் சொல்லிவிடு", என்றாள் நித்யா.
"ஆமாம் நித்யா, எனக்கு ன் அவனை காதலிப்பது பிடிக்கவில்லை", என்று சொன்னேன், அவளுக்கு விளங்கவில்லை, ஏனென்றால் வார்த்தை வரவில்லை, மனதினுள் சொன்னேன்.
"என்ன அரவிந்த், நான் கேட்டதற்கு பதிலை காணோம்".
"அதெல்லாம் ஒன்றும் இல்லை நித்யா, நீ எப்பவும் சந்தோசமாக இருக்கணும், உன் சந்தோசம் தான் என் சந்தோசம், உன்னுடைய விருப்பத்துக்கு மாறாக நான் என்றுமே நட்புறுத்த மாட்டேன்" என்றேன்.
"உனக்கு என் மேல் அவ்வளவு பாசமா" என்றாள். என் நெஞ்சில் சிறிதாய் மின்னல் வெட்டியதை போல் ஒரு வலி வந்து நீங்கியது. உன் அன்பையும்தான் எதிர்பார்க்கிறது மனது. அது கிடைக்காத பட்சத்தில் அவள் கேட்ட வார்த்தை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போலிருந்தது. என்னை அறியாமல் என் கண்களிருந்து வந்த கண்ணீரை அவள் கவனித்திருந்தாள்.
"அரவிந்த், நீ என்னை காதலிக்கிறாயா"? என்றாள் நித்யா. அவள் கேட்டவுடன் ஒரு புறம் சந்தோசம் எனக்கு. "என்ன அரவிந்த், என்னிடம் சொல்றதுக்கு என்ன?
"நானே உன்கிட்டே கேக்கறே வரைக்கும் நீயா சொல்லமாட்டாதானே? நான் உனக்காக எழுதிய கடிதத்தை உன்னை சோதிப்பதற்காகவே குமாரிடம் கொடுக்க சொன்னேன். நீ அந்த கடிதத்தை பிரித்து படிக்காமலே உண்மையில் நான் குமாருக்கு தான் எழுதினேன் என நினைத்து குமரிடம் கொடுத்து விட்டாய். நீ என் மேல் வைத்து இருக்கு காதலை வெளியே வரவழைக்கவே உன் பொறாமையை தூண்டுவதற்காகவே நானும் குமாரும் நடித்தோம். உனக்கு என் மீது எப்பொழுது காதல் வந்தது என்று எனக்கு தெரியாது, ஆனால் எனக்கு பள்ளிக்கூட காலத்தில் சிவா எனக்கு காதல் கடிதம் கொடுத்தப்போ எனக்காக அவனை அடித்தாயே அப்பவே நான் உன்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். என் காதலை நான் மறைமுகமாக பல தடவை தெரியபடித்திருக்கிறேன், ஆனால் நீதான் அதை பொருட்படுத்தவே இல்லை. உன் விருப்பம் தான் என் சந்தோசம்னு உன்னை ஏன்டா நீயே கஷ்டப்படுத்திக்கிறே? உனக்கு எப்படி என் மேல் கே உள்ளதோ, அது மாதிரிதாண்டா எனக்கும் உன் மேல் இருக்கும்". "நீ வேறு, நான் வேறல்ல, ஐ லவ் யூ டா"அரவிந்த்". இப்பவாது சொல்லுடா" என்றாள்.
வருட கணக்கா பொத்தி வைத்திருந்த காதல் பொங்கி எழுந்து அவளை வாரி கட்டி அணைத்து, "ஐ லவ் யூ, நித்யா" என்றேன். எத்தனை நிமிடம் அவளை கட்டி அணைத்தவாறே இருந்திருப்பேன் என்று தெரியவில்லை. கை வலி எடுத்த பின்னரே சுயநினைவுக்கு வந்தோம். மெளனமாக இருந்த என் காதல் மௌனம் கலைந்தது. அன்று முதல் நித்யா என் வாழ்வின் பொன் வசந்தம்.