என் இறைவன்
ஆம்..!
நான் இறைவனைப் பற்றித்தான்
பேசுகிறேன்...!
முதுகெலும்பினடி
மாயக்குடுவையிலே
நீந்திக்கிடந்த என்னை
முத்துமணி பெட்டகத்தில்
முழுவுருவம் பெற்றிடவே
மறைத்துவைத்து பிரம்மனவன்...!
ஆம்..!
நான் இறைவனைப் பற்றித்தான்
பேசுகிறேன்...!
பட்டினிப் படையலை
பரிசாய் ஏற்றுக்கொண்டு
பழரச படையலை
எனக்கு படைத்துவிட்டு
என்னையும் இறைவனாக்கி
மகிழும் அதிசயம் அவன்..!
ஆம்..!
நான் இறைவனைப் பற்றித்தான்
பேசுகிறேன்...!
என் அருகில் அவன்
இல்லையென யார் சொன்னது...?
எண்ண அலைகளினூடே
நித்தமெனை ஸ்பரிசிக்கிறது
அவன் அரவணைப்பின்
இளஞ்சூடு...!
ஆம்..!
நான் இறைவனைப் பற்றித்தான்
பேசுகிறேன்...!
ஆக்கியவனவன்
காப்பவனுமவனே..!
அழித்தல் வேலை
மட்டுமறியா
அபூர்வ இறைவனுமவன்...!
ஆம்..!
நான் இறைவனைப் பற்றித்தான்
பேசுகிறேன்...!
இறைவனென்று அவன்
காட்டிய உருவங்களிலெல்லாம்
எனக்கு அவன்முகம்
மட்டுந்தான் தெரிகிறது...!
இறைவர்கள் மறுத்தாலும்
நான் ஆன்மிகவாதிதான்
என் இறைவனுக்கு மட்டும்...!
கவலை துளியுமில்லை
பிறகடவுளர்கள் கோபித்தாலும்
கடுகளவும் அச்சமில்லை
என் கடவுள் அவனென்று
புளங்காகிதம் கொள்வதிலும்..!
ஆம்..!
உயிரும் கொடுத்து
உருவம் வளர்த்து
உணவும் அளித்து
உடுப்பும் தந்து
உயர்நிலை உய்ய
உற்ற அறிவும் தந்து
உயர் பண்பும் நல்கி
என் உயிரிலும்
உயிரணுவிலும்
நீக்கமற நிறைந்த
என் தகப்பனென்ற
இறைவனைப் பற்றித்தான் நான் பேசுகிறேன்...!

