கல்யாணமே இரு மனதோடுதான்- பகுதி 3 இறுதிப் பகுதி
கல்யாணமே இரு மனதோடுதான்- பகுதி 3
ராஜேஸ்வரி அம்மனின் சக்தியோ என்னவோ அப்பா அன்று சந்தோஷமாக இருந்தார். அப்பாவின் தங்கை குடும்பம் வசதியானது.. ஒரே ஒரு பையன்.. அப்பா பல முறை வலியச் சென்று சம்பந்தம் பேசியபோதெல்லாம் முடியாது என்று மறுத்தவர்கள் இப்போது வீடு தேடி வந்து சம்பந்தம் பேசுகிறார்கள்..
ஜாதகப் பொருத்தம் பார்த்தாயிற்று..
இன்று பெண் பார்க்கும் படலம்..
செங்கமலம் அந்தப் பையனை ஓரக் கண்ணால் பார்த்தவள் ஏதோ நெருட இப்போது நிமிர்ந்தே பார்த்தாள்.. பிறகு நாணித் தலை குனிந்தாள்..
வரதட்சணைப் பேரமும் மிகச் சுமுகமாக முடிந்தது..!
அப்பா வானத்தில் பறந்தார்.. ! ! !
வீட்டில் கல்யாணக் களை கட்டியது ! ! !
கல்யாணம், மண்டபத்தில் வேண்டாம் என்றும் குலதெய்வம் கோயிலில் எளிமையாக நடந்தால் போதுமென்றனர் மாப்பிள்ளை வீட்டார்.. கல்யாணம் முடிந்து வரவேற்பை வேண்டுமானால் ஆடம்பர ஹோட்டலில் வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினர்.
மூன்று மாதம் கழித்து வரும் ஒரு முகூர்த்த நாள் முடிவானது..
அப்பா உடம்பில் புது சக்தி பாய, முகமெல்லாம் பல்லாக வலம் வந்தார்.. தெரிந்தவர், தெரியாதவர், வாடிக்கைக்காரர்கள் என்று யாராயிருந்தாலும் நின்று பேசினார்.
திடுதிப்பென்று வேலையை விட்டால் நன்றாயிராது என்று செங்கமலம் வாதாடியதால் சிறிது காலம் அவள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள்..
அன்று கணிணியின் பல வகைத் தளங்களை பார்வையிட்டு எதையோ நோண்டிக் கொண்டிருந்தாள் செங்கமலம்.
நாட்கள் ஓடின.
இன்னும் பத்திரிக்கை அடிக்கத் தொடங்கவில்லை..
செங்கமலம் சில நாட்களாக யாரையோ எதிர்பார்க்கிற தோரணையில் இருந்தாள்.
வந்து விட்டார்கள்..
செங்கமலத்தின் தந்தை வயதை ஒத்த ஒரு ஆணும், ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும் வந்தனர்.
வந்தவர்கள் செங்கமலத்திடம் சிறிது நேரம் பேசினர். ஆண்கள் சென்ற பிறகு அந்த இளம்பெண் செங்கமலத்தை தனியே அழைத்து என்னவோ சொன்னாள்.. செங்கமலத்தின் முகத்தில் பல உணர்ச்சிகள்.. அந்தப் பெண்ணும் விட்டபாடில்லை. தான் விரும்பும் முகபாவம் செங்கமலத்தின் முகத்தில் தெரிந்த பிறகு அவள் அகன்றாள். அனைவரும் திருவாரூர் போயினர்- செங்கமலத்தின் அப்பாவைப் பார்ப்பதற்காக...! !
“ யாரு நீங்க? ” என்றார் செங்கமலத்தின் அப்பா..
“ நாங்க தனியார் துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க.. உங்க மகள் செங்கமலம் எங்களுக்கு ஒரு வேலை கொடுத்திருந்தாங்க.. அத முடிச்சிட்டோம்.. அதப் பத்தி உங்க கிட்ட சொல்லிட்டுப் போக வந்தோம்..! ” என்றாள் அந்த இளம்பெண்.
சற்று நேரத்தில் செங்கமலம் தன் அம்மாவை அழைத்துக் கொண்டு அந்த இடத்துக்கு வந்தாள்.
அப்பாவுக்கு ஊன்றுகோல் போல் இருவரும் இரண்டு பக்கம் நின்று கொண்டார்கள்.
வந்தவர்கள் பேச ஆரம்பித்தனர்.
“ சார், உங்க தங்கை பையன் யோக்கியமானவன் இல்ல.. கண்ட கண்ட பெண்களோட சுத்தி ஹெச்ஐவி எய்ட்ஸ் வந்துடுச்சி.. ரெண்டு மாசம் முன்னாடிதான் அதை அவன் கண்டு பிடிச்சிருக்கான்.. நோய் வந்துடுச்சி, இனி உடம்பு தளர்ந்துடும்.. கவனிச்சுக்க பெண்டாட்டின்னு ஒருத்தி வேணுங்கிறதுக்காக உங்க மகளைக் கேட்டு வந்திருக்காங்க.. ”
“ அப்ப.. அப்ப இந்த கல்யாணமும் நடக்காதா? ” செங்கமலத்தின் அப்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்...
“ சார்.. படுகுழியில விழ இருந்தீங்களே? உங்க பொண்ணு உங்களைக் காப்பாத்திட்டாங்க.. ஹெச்ஐவி வந்தவனோட சம்பந்தம் வச்சிகிட்டா உங்க சொந்த பந்தம் உங்க மூஞ்சியிலேயே முழிக்காது.. பெத்த பொண்ணு வாழ்க்கைய பாழ்படுத்தினவன்னு பழி வேற வந்துடும்.. ”
ஒரு இரண்டு மணி நேரம் மாற்றி மாற்றிப் பேசி, செங்கமலத்தின் அப்பாவை நிதானத்துக்குக் கொண்டு வந்தார்கள்.
துப்பறியும் நிபுணர் தொடர்ந்தார்..
“ இது வரைக்கும் எட்டிக் கூட பார்க்காதவங்க இப்ப தானா வந்திருக்கிறது உங்க மகளுக்கு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கு.. கல்யாணப் பையன் கிட்ட கலகலப்பு மிஸ்ஸிங்.. அதையும் அவங்க கவனிச்சிருக்காங்க.. எங்களைக் கேட்டுகிட்டாங்க.. அவங்க ஏதோ சாதாரணமாத்தான் இந்த விஷயத்தை செஞ்சிருக்காங்கன்னு முதல்ல நாங்க நினைச்சோம்.. அப்புறம் உங்க வீட்டுக்கு வந்தோம் -- உங்களுக்குத் தெரியாமத்தான்..! அக்கம்பக்கம் விசாரிச்சப்புறம்தான் அவங்க எந்த சூழ்நிலைல இருந்துகிட்டு இப்படி செய்யச் சொன்னாங்கன்னு தெரிஞ்சது.. இன்னொரு பெண்ணா இருந்தா இந்தளவு யோசிச்சு செஞ்சிருக்க மாட்டாங்க..
உங்க மகளோட அறிவு, தெளிவு எல்லாம் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.. அவங்கள எங்க துப்பறியும் நிறுவனத்துல வேலை செய்ய அனுமதிக்கிறீங்களா? ”
செங்கமலத்தின் அப்பா கசப்பாக சிரித்தார். “ கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் துப்பில்லாதவன் கிட்ட மகளை துப்பறிய அனுப்பச் சொல்லி கேக்கறீங்களா? ”
“ சரி, எங்க நிறுவனத்துல ஒரு பையன் வேலை பார்க்கிறான்.. இதோ என் பையன்தான்.. நல்ல பையன்.. பேரு கண்ணன். உங்க மகள் கேஸை அவன்தான் டீல் பண்ணினான்.. கட்டிகிட்டா உங்க மகளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு கூடவே வந்துட்டான்.. இந்தக் கல்யாணம் நின்னு போனா அது உங்களை ரொம்ப பாதிக்கும்.. அதனால நாங்களும் எங்க பங்குக்கு ஒரு அரை டஜன் மாப்பிள்ளைங்க லிஸ்டை ரெடி பண்ணி எடுத்துட்டு வந்திருக்கோம்.. எல்லோரும் நல்ல பசங்க.. வரதட்சணை வாங்கறத கேவலமா நினைக்கிறவங்க.. என் பையனைப் பிடிக்கலைன்னா அவங்களக் கூட நீங்க தேர்ந்தெடுத்துக்கலாம்.... மேற்கொண்டு பேசலாமா? ”
“ இவ்வளவு அக்கறை காட்டறீங்களே... ” செங்கமலத்தின் அப்பா கையெடுத்துக் கும்பிட்டார்.. “ உங்க பையனை உட்காரச் சொல்லுங்க.. என் மன திருப்திக்கு நா பேச வேண்டியதைப் பேசிடறேன்.. ”
பேசினார்கள்.
செங்கமலம் “ உம்” என்று மட்டும் சொன்னாள். அதுதான் ஏற்கெனவே இந்த விவகாரமாக கண்ணன் தூதாக அனுப்பிய அந்த இளம் பெண்ணோடு அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி மேய்ந்தாகி விட்டதே ! !
அன்றைய நாள் நன்கு கழிந்தது. வீட்டில் செங்கமலத்தின் அப்பா அவள் நெற்றியில் முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் செங்க்ஸ் என்று பழிப்புக் காட்டினாள் தேவிகா..
கல்யாணப் பத்திரிக்கை அச்சடித்து வந்தது.. மணமகன்- மணமகள் பெயர்களுக்குக் கீழ் கண்ணன்- செங்கமலம் என்று பெயர்கள் ஜொலித்தன.
செங்கமலத்தின் கண்களின் மெல்லிய படலம் போன்ற கவலையைக் கண்டவர்கள், “ கல்யாணத்துக்கு அப்புறம் இவ்வளவு பெரிய துப்பறியும் நிறுவனத்தை எப்படி நிர்வகிக்கப் போறோம்னு செங்கமலம் இப்பவே கவலைப்படுறாப்பல.. ” என்று சொல்லிக் கொண்டனர்.. வானத்து மேகங்கள் குச்சி ஐஸாகவும், குதிரை ராட்டினமாகவும் உருக்காட்டி ஓடின..
முற்றும்