ஏவாளின் தங்கை
யுகங்கள் கடந்து வந்த
சுவடுகள் மீது
பைய நடந்து போகிறாள்
பின்னோக்கி ..
இந்த "பிகினி" தேவதை
இலைகளால் அல்ல
இரு இழைகளால்
தன்னை அணிந்திருக்கும்
ஏவாளின் தங்கை!
இவள் கொடி மேனி
காற்றில் அசைய அசைய
தளிர்ப் பாதங்களில்
மணலும் பூக்கும்
நீச்சல் பொய்கையிலிருந்து
இந்த வானவில் நனைந்து வெளியேறி
வெயில் காயும்போது
பார்வை மழைகள் தூறும்
தேச வரைப்படத்தின்
நர்மதை தபதியென
வயிற்றின் பாகத்தில்...
மெல்லிய நதி ரேகைகள்..
இவள் சிறந்த
'யோகா' கலைஞி எனக் கூறும் .
கடினப் பயிற்சிகளால்
தன்னைத் தானே
செதுக்கிக்கொண்ட
சிற்பம் ..
எதிர் கொள்வோருக்கு
ஒரு புன்சிரிப்பைத்
தந்துவிட்டு
தனிமையில் ஆழ்ந்துவிடுகிறது ..
இவள் தனிமை ,
துயரத்தின் நிழலாகவும்
இருக்கலாம்
இவள் தனக்கென்று
கனவு காண தேவை இருக்காது
ஏனெனில்
இவளே ஒரு கனவு
*
பின்னொருநாள் செய்தியில்
பெரு நிறுவனங்களின் வணிக வலையில்
சிக்கித் தவிக்கும் "மாடல் அழகிகளின் ''
புகைப்படத்தில் இவளும் இருந்தாள்.
புதுமையின் மைதொட்டு
பூத்த ஓவியங்கள் ..
நிழல் யுத்தக் கதைகளின்
நாயகிகள் ...
நட்சத்திர வீதியின்
மின்மினிப் பூச்சிகள் ..
குடும்பச் சுமைத்தாங்கும்
தூரத்துச் சிறகுகள் ...
உல்லாசப் பறவைகள் அல்ல
வேட்டைப்புறாக்கள் !
உண்மைதான்...!
இந்த அழகிகள்
கனவுகள் காண்பதில்லை
கனவுகளாகவே இருந்துவிடுகிறார்கள் !
*
கவித்தாசபாபதி
*
A verse for calendar girls