Dear Rajini Kanth

என் தாய்த் தமிழ் பேசும் மக்களுக்கு, உளம் ஆழ்ந்த... தலை தாழ்ந்த வணக்கங்கள்.

தமிழின் மொழி, இனம், நிலம், கலை, பண்பாடு மற்றும் வரலாறு என்று இத்தனையையும் போற்றும் எண்ணம், சிந்தையிலே கொண்ட நான், உங்கள் சுடலைமணி.

தமிழ் திரைப்படத்துறையில் உலகப்புகழ் பெற்ற பெருவெள்ளியாக திகழ்வது எமது இரசினிகாந்த். அவர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுத நேரம் வந்துள்ளது.
அதை மக்களாகிய நீங்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும்.

அன்பான இரசினிகாந்த் அவர்களுக்கு,

நீங்கள் நடித்த படங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட பார்த்தும், மகிழ்ந்தும்,
அந்த சுவை மறையாது நண்பர்களிடம் ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக்காட்டியும், நடிப்பில் உள்ள பாணி (Style) அழகை வியந்து பேசியே
சில நாட்களை கழித்த படிப்பினையை (Experience) என் வாழ்வில் கண்டுள்ளேன்.

சிறு வயதிலே, என் நண்பர்களுடன் உங்களுக்காக சண்டை கூட போட்டுள்ளேன். கடைசியாக கபாலி படத்திற்கு குடும்பதோடு போய் பார்த்து வந்தேன். என் இரு மகன்களும், முதல்வன் நற்றமிழ் வேந்தன், இளையவன் அந்தமிழ் வேந்தன் என்று இருவரும் கபாலிடா கிடாரிடானு சண்டையை போடுவார்கள். ஏனெனில் கிடாரியும் அதற்கு முன் திரையரங்கில் சென்று பார்த்து வந்திருந்தோம். என்றும் உங்களை திரைக்கலைஞனாக மட்டும் பார்க்க விரும்பும் தாய்தமிழர்களில் நானும் ஒருவன். ஆனால் நீங்கள் அரசிலுக்கு வரவிருப்பதாகவும், புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும் நாளிதழ்களில் நாள்தோறும் செய்திகள் வருவதை கண்டு இந்த திறந்த மடல் உங்களுக்கு எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

உங்களின் ஒரு இரசிகனாக இன்றளவும் நான் எந்த நண்பன் கேட்டாலும், நடிப்பில் உள்ள பாணியின் சிறப்பை வியப்போடு பேசுவேன். ஆனால் நீங்கள் அரசிலுக்கு வருவீர்கள் என்றால் கண்டிப்பாக என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.ஏனென்றால், உங்களை உயர்வாகவே பார்த்து கொண்டிருக்கும் உங்கள் இரசிகர்களுக்கு, அரசியலுக்கு வந்தால் மற்ற அரசியவாதிகள் உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட நிறை, குறைகளையும், பொது வாழ்வில் மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்று கண்டிப்பாக தரம் இல்லாமல் பேசுவார்கள். அங்கு நிறைகள் இருந்தாலும் தெரியாதது போல் மறைத்துவிடுவார்கள். உங்கள் உயர் நிலை மாறும், புகழ் கெடும், அப்படியென்றால் உங்களின் மனது எதையும் தாங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அரசியல் பாதையில் நடக்க வேண்டுமென்று எண்ணினால், நானறிந்த வரை சில அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். அது தமிழ் மொழி பற்று, இனப்பற்று என்று முதன்மையாக சொல்லலாம். இது உங்களிடம் இருக்கிறதா இல்லையா, அப்படி இருந்திருந்தா கபாலி முன் வரை திரையில் அழுத்தமாக ஏதாவது சொல்லியதுண்டா,

தனிப்பட்ட முறையில் தமிழ் மொழிக்காக, தமிழர்களுக்காக ஏதேனும் போராட்டத்தில் கலந்து கொண்டது உண்டா? பல கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளாகவே கேளுங்கள், ஏனெனில் கண்டிப்பாக பலர் நீங்கள் கட்சி துவங்கியதும் கேட்பார்கள், எல்லா நிலையிலும் ஈடு கொடுக்க வேண்டும் மற்றும் தெளிவான பதிலும் சொல்லவேண்டும். ஒரு வேளை நீங்கள் நிருபர்களுக்கு முன், இப்போது சொல்வது போல் ஒரே சொல்லில் பதில் அளித்தாலும் தவறாகவே பரப்புரை எழும்.

இன்று எத்தையோ பேர், அரசியலில் நண்பர்கள் இருப்பார்கள், ஆனால் அவர்கள் நீங்கள் அரசியலின் உள் நுழைந்ததும் எதிரிகளாகிவிடுவார்கள்.
வேண்டவே வேண்டா... அரசியல் உங்களுக்கு.

இப்போது தனிக்கட்சி தொடங்குனீர்கள் என்றால்,
உங்களின் உயர் நிலை பெயர் மறந்து பல தரம் தாழ்ந்த பெயர்களை வைப்பர்.
தவறாக ஒரு பேச்சி பேசி விட்டீர்கள் என்றால் உங்கள் மதிப்பு குறையும்.
எடுத்துக்காட்டாக, ஆந்திராவில் சிரஞ்சீவி அவர்களை எடுத்துக் பாருங்கள். என்ன ஆயிற்று? எத்தனையோ இலக்கம் மக்கள் கூடினர், பின் என்ன ஆகிவிட்டது என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும். பிறர் சொல்லி தெரிய வேண்டா ஏனெனில் அவர் உங்களுக்கு நண்பர்.

எல்லா தமிழ் திரை நடிகர்களும் மிகவும் பிடிக்கும் என்றாலும்,
நான் உங்களைக் கண்டு, உங்கள் பாணியில் வியந்த ஒரு முதன்மைக் காரணத்தினால், தமிழ்மக்கள் உங்கள் மீது அளவற்று பாசம் வைத்திருப்பதாலும் இந்த திறந்த மடலை எழுதினேன்.

அரசியலுக்கு வராமலேயே உங்களால் தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்ய முடியும். ஆனால் அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது பெரிய இழப்பாக கூட முடியும்.
தமிழகத்தில் அரசியலில் புதியதாய் சிலர் வந்துள்ளனர். குறிப்பாக சீமான், அன்புமணி என்று தமிழ் மக்களுக்கான, முன்னேற்றத்திற்கான பல நல்ல திட்டங்கள் வகுத்து மிகவும் புதுமையான மற்றும் தேவையான அரசியலை செய்து வருகின்றனர். திரு சகாயம் இ.ஆ.ப (இந்திய ஆட்சிப் பணி) அவர்கள் கூட அரசியலுக்கு வருவதாக சொல்கின்றார்கள்.

ஆனால் நீங்கள் இப்போது அரசியலுக்கு வந்தால் பெரிய கேள்விக்குறியாகி விடுவீர்களோ என்று எண்ணம் வருகிறது. ஏதேனும் தவறாக நான் எழுதவில்லை, அப்படி நீங்கள் நினைத்தால் மன்னிக்க... உங்களை உயிராய் அதாவது தலையாய் நினைக்கும் எத்தனையோ இரசிகர்களை கலையால் மன நிறைவடைய செய்யுங்கள் அதுவே சிறப்பு.

தமிழுக்காக
தமிழினத்திற்காக
தமிழ்மக்களுக்காக
தன்னலமற்று
தலைத்தாங்கும்
சு.சுடலைமணி

எழுதியவர் : சு.சுடலைமணி (17-May-17, 3:51 pm)
சேர்த்தது : yazhmani
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே