பெண் - மகா சக்தி

பெண் - மகா சக்தி

வீட்டுக்காரர் கஷ்டப்படுவாரேன்னு ஒத்தாசைக்கு இந்த ஸ்பேனர் பிடிச்சேன்'' - பைக் மெக்கானிக் பானுமதி!
இந்த வேலையெல்லாம் செய்ய முடியுமா என்கிற ஆச்சர்யங்களை உடைப்பதில் பெண்கள் வல்லவர்கள். லாரி ஓட்டுவதில் ஆரம்பித்து விண்ணுக்குப் பறப்பது வரை அவர்கள் தொடாத உயரம் இல்லை. அப்படித்தான் தனக்கான ஒரு தொழிலையும் தேர்ந்தெடுத்திருக்கிறார், பானுமதி அம்மா.
ஸ்பேனரும், ஸ்க்ரூ டிரைவரும், ஆயிலும், கண்களில் தேக்கிய கனிவுமாக இருக்கும் பானுமதி அம்மா, திருப்பூர்வாசிகளுக்கு நன்கு அறிமுகமானவர். 20 வருடங்களாக திருப்பூர் ராயபுரம் பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்திவருகிறார். கடைக்கு வந்திருந்த வாகனங்களைப் பிரித்துப் போட்டு தனி மனுஷியாக வேலை செய்துகொண்டிருந்தவரிடம் பேசினோம்.
"அன்னூர்தான் எனக்கு சொந்த ஊர். அஞ்சாவது வரைக்கும்தான் படிச்சேன். சின்ன வயசுலேயே வீட்டுல சும்மா இருக்கப் பிடிக்காம எங்க தோட்டத்துல விவசாய வேலைகளை இழுத்துப்போட்டுகிட்டு செய்வேன். வீட்டுல வரன் தேட ஆரம்பிச்சப்ப, 'மாப்பிள்ளை மோகன் டூவீலர் வொர்க்‌ஷாப் வெச்சிருக்காரும்மா'னு சொன்ன அப்பா, அம்மா திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. சொந்த தொழில் பண்றவரு... நம்மளை எப்படியும் காப்பாத்திடுவாருங்கிற நம்பிக்கையோட கல்யாணம் கட்டிகிட்டேன். ஒரு மகளும், ஒரு மகனும் பொறந்தாங்க.
கல்யாணமாகி திருப்பூருக்கு வந்த பல வருஷம் வரைக்கும் நான் வீட்டுக்காரரோட வொர்க்‌ஷாப் பக்கம் எட்டிக்கூடப் பார்த்தது இல்ல. என் மகன் திலக் மட்டும் பள்ளிக்கூடம் விட்டு நேரா அப்பாகூட வொர்க்‌ஷாப்புக்கு போய் வேலை பார்ப்பான். வளர்ந்து பெரியவன் ஆனதும், நானும் மெக்கானிக் வேலையே பாக்கறேன்னு டூவீலர் ஷோரூம்ல போய் வேலைக்குச் சேர்ந்துட்டான். என் வீட்டுக்காரர் தனியா கஷ்டப்படுவாரேன்னு, வீட்ல சோறாக்கி வெச்சிட்டு, அவருக்குச் சாப்பாடு எடுத்துட்டு மதிய நேரத்துல இந்த வொர்க்‌ஷாப்க்கு வந்திட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல இவரு ஸ்பேனர், ஸ்க்ரூ டிரைவர்னு ஏதாவது எடுத்துக்கொடுக்கச் சொல்வாரு. வீட்டுல சும்மாதானே இருக்கோம், இங்க தினமும் வந்தா, இந்த மாதிரி ஏதாவது ஒத்தாசையா இருக்கலாமேன்னு யோசிச்சேன்.
பிறகு காலையிலேயே வீட்டு வேலைகளை முடிச்சிட்டு, கணவரோடவே கடைக்கு வர ஆரம்பிச்சேன். அவர் செய்யும் வேலையெல்லாம் ஒண்ணுவிடாம கவனிச்சிட்டே இருப்பேன். அவர் கேட்கிற டூல்ஸ் எல்லாம் சரியா எடுத்துக் கொடுத்துட்டே இருக்க, இதில் ரொம்ப ஆர்வம் வந்துருச்சு. வண்டி வேலைகளை எனக்கும் கத்துகுடுங்கன்னு ஒருநாள் இவர்கிட்ட கேட்க, டூவீலரை எப்படி ஒவ்வொரு பாகமா கழட்டணும்னு சொல்லிக் கொடுத்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிரேக் ஒயர், கிளட்ச் ஒயர் மாத்துறதுன்னு பழகினேன். அப்படியே லைட், ஹார்ன் எல்லாம் செக் பண்ணக் கத்துக்கிட்டேன்'' என்றவரை, ஆர்வம்தான் இதில் எக்ஸ்பெர்ட் ஆக்கியிருக்கிறது.
''இப்படியே ஏர்-பில்டர் செக் பண்றது, சைலன்ஸர் கிளீனிங்னு ஒவ்வொரு வேலையையும் முழுசா கத்துக்கிட்டேன். ஆனாலும், ஒரு பெண்ணை நம்பி யாரும் தங்களோட வண்டியக் கொடுக்க முன்வரல. ரொம்பத் தயங்கினாங்க. ஒருநாள் டிவிஎஸ் எக்‌ஸ்எல் வண்டிய ஒருத்தர் சர்வீஸ் செய்ய நிறுத்திட்டுப் போனார். என் வீட்டுக்காரர் அதுக்கான உதிரி பாகங்களை வாங்கிட்டு வரக் கிளம்பிட, அந்த எக்ஸ்எல் வண்டியை முழுவதுமா கழட்டி, பிரிச்சு வெச்சேன். திரும்பி வந்த என் வீட்டுக்காரர் அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப்போய் பாராட்டினார். அந்த நிமிஷத்துல எனக்கே நம்பிக்கை வந்திருச்சு. அதுக்குப் பிறகு இவர் இல்லாத சமயத்துல சர்வீஸுக்கு வரும் வாகனங்களை நானே வேலைபார்த்துக் கொடுக்க ஆரம்பிச்சேன். இப்போ அவருக்குச் சமமா, போட்டியா இழுத்துப்போட்டு வேலைகளைச் செய்யறேன்'' என்றபோது, பெரிய சிரிப்பு பானுமதிக்கு.
''இதைப் பார்த்துட்டு, அக்கம் பக்கம், தெரிஞ்சவங்க எல்லாம், 'உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்?'னு ஏளனமா கேட்டாங்க. ஊருப் பக்கம் போனாலும், 'என்ன பானு கடையிலேயேதான் கெடக்குறியாமே?'னு கேலி பேசுவாங்க. 'இப்படி மத்தவங்களைப் பத்தி பேசிட்டு இருக்காம, ஒரு தொழிலைக் கத்துகிட்டேனேன்னு சந்தோஷப்படுங்க'ன்னு சொல்லிட்டுக் கெளம்பிருவேன். ஒருநாள் கடைக்கு வராம வீட்டுல இருந்துட்டாகூட, எனக்குக் கை, கால் ஓடாது. தினமும் வந்து இந்த வண்டிகளைத் தொட்டாதான் எனக்குத் தூக்கமே வருது தம்பி" என்ற பானுமதியின் வார்த்தைகளைப் பூரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்த அவர் கணவர் மோகனுக்குப் பெருமையும் மகிழ்வும்.
"அடிக்கடி வொர்க்‌ஷாப்புக்கு வந்து, சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பிச்ச இவங்க, இன்னைக்கு என்னைவிட வேகமாவாகனங்களைப் பழுதுபார்க்கிறாங்க. எல்லாவிதமான டூவீலர்களையும் இப்போ சர்வீஸ் பண்றாங்க. தினமும் வொர்க்‌ஷாப்ல வேலைய முடிச்சிட்டு இரவு வீட்டுக்குப் போய் தூங்கும்போதுகூட, வொர்க்‌ஷாப்ல சர்வீஸுக்கு வந்திருக்கும் வண்டிகள் பத்திதான் ஏதாவது சந்தேகம் கேட்டுட்டு இருப்பாங்க. இந்த வொர்க்‌ஷாப்புக்குப் பானுமதி வந்து 20 வருஷத்துக்கும் மேல ஆகிருச்சு. வண்டி சரியா வேலை செய்து கொடுக்கலைன்னு இதுவரைக்கும் ஒரு வாடிக்கையாளர்கூட வந்து கேட்டதில்ல" என்றார் பெருமையோடு.
இன்ஜினின் சத்தத்தை வைத்தே, வண்டியில் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்துவிடும் பானுமதிக்கு, அவர் தன் தொழில் மீது வைத்திருக்கும் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி, திருப்பூரில் நடைபெற்ற போக்குவரத்து வார விழாவில் 'சிறந்த வாகன பராமரிப்பாளர்' விருதை மாவட்ட ஆட்சியர் வழங்கியதைச் சொல்லும்போது, அந்தத் தம்பதி முகத்தில் பூரண நிறைவு.
''வயசு 50க்கும் மேல ஆச்சுதான். ஆனா, ஓய்வைப் பத்தின நெனப்பு இன்னும் மனசுக்கு வரல. நான் இந்தத் தொழிலை விரும்பிச் செய்றதுதான் அதுக்குக் காரணம்" என்கிறார் பானுமதி கையில் இருக்கும் கிரீஸைத் துடைத்தபடி.
#பெண்_மகா_சக்தி.
#தலைவணங்குவோம்.

எழுதியவர் : கவிழகி செல்வி (17-May-17, 4:24 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 146

சிறந்த கட்டுரைகள்

மேலே