காடு என்னை துப்பிவிட்டது
காடு என்னை துப்பிவிட்டது
இந்த கட்டுரை சிறு வயதில் காட்டில் வசித்து தற்போது நகரத்தில் வசித்து கொண்டிருப்பவரின் அனுபவமாக கொள்ளலாம்)
கிட்டத்தட்ட “இருபத்தி ஐந்து ஆண்டுகள்” காட்டுக்குள்ளேயே ஒட்டி உறவாடி வாழ்ந்தவன். கோயமுத்தூரில் வேலை தேடி (வேறு வழியில்லாமல்) வந்தவன் தான்.கிட்டத்தட்ட அறுபதை தொட்டு கொண்டு நிற்கிறேன்.
இன்று அந்த காட்டின் அமைதி, அல்லது அனுபவிக்கும் உரிமை கிட்டுமா? என்னும் எதிர்பார்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்றாலும் அன்றைய வயதும் இளமையும், காடு மலை, சிகரங்கள், என்று சுற்றி சுற்றி வந்த இடங்களை இப்பொழுது என்னால் நடந்தும், ஓடியும் பார்ப்பது என்பது முடியக்கூடிய காரியமா?
வாழ்க்கையை தேடி ஓடுகிறோம், அப்பொழுது நம் வாழ்க்கையில் எப்படியாவது இந்த சமுதாயத்தில் நிலைத்து நிற்க வேண்டும், என்னும் நோக்கம் மட்டுமே நம்மிடம் அப்பொழுது இருந்தது. இது போன்ற நிலைமைதான் கிராம சூழ்நிலைகளை ஒட்டி வாழ்ந்திருப்போருக்கும், இருந்திருக்கும்
நினைத்து பார்த்தால் அன்று காட்டில் வசிக்கும் போது நான் அதன் பெருமையை பற்றி பேசியதாக தெரியவில்லை. காரணம் ஐயோ நம் வாழ்க்கை இந்த காட்டிலேயே கழிந்து விடுமோ என்னும் பயம் மட்டுமே இருந்ததாய் ஞாபகம் அதனால் அங்கு வசித்து வந்தவர்களின் பிள்ளைகள், கல்லூரி படிப்பையும் முடித்து விட்டு அல்லது என்னை போல அரைகுறையாய் கல்லூரிபடிப்பை படித்து விட்டு எங்கும் செல்லாமல் தினமும் நான்கு முறை மட்டுமே வரும் பயணிகள் பேருந்தை வேடிக்கை பார்த்து பொழுதை போக்கும்போது, இந்த காட்டை நாங்கள் கடுமையான முறையில் பேசியிருக்கிறோம்.
இதற்கும் இந்த காட்டில் வசிக்கும் உரிமை கூட எங்கள் தந்தைமார்கள் பணியில் இருப்பதால், அரசு கொடுத்த வீட்டில் (டார்மெண்டரி) தங்கி சொகுசை அனுபவித்து கொண்டு பேசியிருக்கிறோம்.
காடு மெளனமாகத்தான் இருந்திருக்கிறது. இங்கு ஊழியர்களாய் பணிபுரிந்து கொண்டிருந்தாலும் விவரமான ஒரு சிலர் தங்களுடைய குடும்பத்தையும், குழந்தைகளையும் வால்பாறை (மேற்கு மலை தொடர் காடுகளாய் இருந்தால் பொள்ளாச்சி, கோயமுத்தூர், போன்ற நகரங்களிலும், நீலகிரி காடுகளாய் இருந்தால் மேட்டுப்பாளையம், கோயமுத்தூர் போன்ற நகரங்களில் வசிக்கவைத்து விட்டு இவர்கள் மட்டும், பணி செய்து கொண்டு இந்த காட்டில் தனித்து வாழ்ந்தவர்கள். இவர்களின் பிள்ளைகள் நகரத்திலிருந்து வருடம் ஒரு முறை அல்லது இருமுறை கூட்டி வரும் போது இந்த மலைக்காட்டை பார்த்து ஆச்சர்யப்படுவதும், போற்றுவதும், நாங்கள் வெறுப்புற்று இந்த காட்டில் தொடர்ந்து எங்களைப்போல இருந்து பார், என்று வெறுப்பில் சொல்லியதும் உண்டு.
இதற்கும் நீலகிரி காடுகளில் பரளி, பில்லூர், நெல்லித்துறை போன்ற மின்வாரிய கட்டுமானங்களில் தந்தையின் பணியினால் வசித்திருக்கிறேன். ஏன் பிறந்ததே ‘சோலையார்’ என்னும் வால்பாறையை சேர்ந்த மேற்கு மலை தொடர் வனத்தில் அமைந்து கொண்டிருந்த “அணை கட்டுமான” வசிப்பிடத்தில் தான். அங்கிருந்து நகர்ந்து நீலகிரி தொடர்ச்சி மலை காட்டுக்கு நெல்லித்துறை, பரளி, பில்லூர் போன்ற இடங்களுக்கு மாற்றப்பட்டு எங்களை போன்ற காடு சுற்றி பணிபுரியும் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகளிலே படித்து கொண்டிருந்தேன். மீண்டும் தந்தையின் பணி வால்பாறை வன பகுதி மலைக் காடுகளுக்கு மாற்றல் வர காடம்பாறை அணை, காடம்பாறை பவர்ஹவுஸ், மேல் ஆழியார் அணை, என்று காட்டுமான பகுதியில் வந்து நின்றபோது நான் இருபத்தி ஐந்து வயதை தொட்டிருந்தேன்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டவன் கல்லூரி படிப்புக்கு என்ன செய்தாய்? என்று கேட்டீர்களானால், கோயமுத்தூரில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் வரை படித்து கொண்டிருந்தவன், நகரத்தின் சலசலப்பு, மற்றும், கல்வி கட்டணம் கட்ட முடியாமை இவைகளால் மீண்டும் மலைக்காடுகளுக்குள் தஞ்சமடைந்தேன்.
அப்பொழுதாவது என்னுடைய சிந்தனையை மாற்றியிருந்திருக்கலாம். நகரத்தின் கொடுமைகளை அனுபவித்து விட்டு வந்திருக்கிறான், இப்பொழுதாவது என் அருமையை உணர்ந்திருப்பான் என்று காடு எண்ணியிருக்கலாம். ஆனால் அப்பொழுதும் என் நன்றி விசுவாசத்தை அதன் மீது காட்டவில்லை. காரணம் ஏதோ நான் மிக்க திறமைசாலியாக இருந்ததால் நகரம் என்னை பயன்படுத்தவில்லை என்னும் கோமாளித்தனமான எண்ணத்தில் சே..நம் வாழ்க்கை மறுபடியும் இந்த காட்டுக்குள்தானா? என்னும் சலிப்பிலே ஓட ஆரம்பித்தது.
இத்தனை சலிப்புகளுடன் நீ ஏன் என்னுள் வசிக்கிறாய் என்று காடு என்னை கேட்டதில்லை. பாவம் அதற்கு வாய் இல்லை என்று நினைக்கிறீர்கள். அதுவல்ல, அந்த காடுகளில் புலிகள் முதற்கொண்டு அனைத்து வகையான உயிரினங்கள் வாழும்போது என்னை போன்ற ஒருவன் வசித்து விட்டு போகட்டுமே, என்று எண்ணியிருக்கலாம். அதை விட அந்த காட்டுக்குள் வசிக்கும் மனிதர்கள் “காடர்கள், முதுவர்கள், இருளர்கள், போன்ற காட்டுவாசிகள் மகிழ்ச்சியாய் அதை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் திருவிழா, திருமணம், மரணம், எல்லாமே இயற்கையாய் நடந்து கொண்டிருந்தது. கொடிய மிருகங்களும், மென்மையான விலங்குகளும் கூட அவர்களை ஒட்டி அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தன.
நாங்கள் என்ன செய்தோம்? கேட்டீர்களானால் வருத்தப்படுவீர்கள், நாங்கள் அணை கட்டுமானத்திற்கு ஒரு காட்டுப்பகுதியில், பணியாட்களாக நுழையும் போது எங்களின் கீழ்மையான பழக்க வழக்கங்களை அவர்களுக்கு கற்று கொடுத்தோம். இதனால் அதுவரை அவர்கள் அறியாத தேன் எடுத்தலில் கலப்படம் (சீனி போட்டு தயாரிப்பது) காட்டில் கிடைக்கும் மருந்து பொருட்களும், விவசாயத்தில் அவர்கள் விளையும் பொருட்களையும் கொஞ்சம் காசு கொடுத்து இவர்களிடம் வாங்கி வால்பாறை, பொள்ளாச்சி, கோட்டூர் போன்ற ஊர்களுக்கு கொண்டு சென்று, வியாபாரம் செய்து கொள்ளை லாபம் அடித்தோம்.அதுவரை ‘உழைப்பை’ மட்டும் கொண்டிருந்த அந்த இனத்தவர் சிலரை சிற்றின்ப ஆசைக்குள் நுழைத்து இருந்தோம்.
நாங்கள் அங்கு கட்டுமான வேலைகளை முடித்து எப்பொழுது போவோம்? என்று அந்த இனத்தவர்களின் பெரியவர்கள் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். ஒரு வழியாக அங்கு பணி முடிந்து நகர்ந்த பின்னால்தான் அவர்கள் பெருமூச்சு விடுவார்கள்.
காடு எங்களை கவனித்து கொண்டுதான் இருந்தது.உண்மையில் காடு எங்களை நகரத்தை போல “சோம்பேறியாக” வைத்திருந்ததில்லை என்னும் உண்மையை கூட இத்தனை வயது கழிந்த பின்புதான் உணர்ந்து பார்க்கிறேன்.
பருவம் “காலம்” என்று சொல்வார்களே அப்படி ஒவ்வொரு பருவத்திலும் காய்கள், கனிகள், ஏன் விலை உயர்ந்த ஒரு சில பொருட்களை எங்களுக்கு மாறி மாறி கொடுத்து கொண்டுதான் இருந்தது. ஏன் நீங்கள் ஒரு தூண்டிலை எடுத்து போய் ஆற்று நீரில் உட்கார்ந்து பாருங்கள். எத்தனை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் கிட்டாத பேரின்பம் உங்களுக்கு கிடைக்கும்.
அப்பொழுது கிடைக்கும் ஈர்ப்பு, மனதுக்குள் தக்கையின் இழுப்பில் மீன் மாட்டியிருக்குமா என்னும் எதிர்பார்ப்பு, இழுக்கும்போது மீன் தப்பி விட்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்தல் இப்படி எத்தனை மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
அன்றைய காலத்தில் எங்களுக்கு இருந்த ஒரே தகவல் சாதனம் “வானொலி” மட்டுமே. அதன் பின்னரே “தொலைகாட்சி” பெட்டிகள் வந்தன. என்றாலும் அவைகள் நாங்கள் மலை பிரதேசங்களில் வசித்ததால், சரியாக “அலைதொடர்பு” கிட்டாமல் சிரமப்பட்டிருக்கிறோம்.
காட்டு வாழ்க்கையின் இறுதியில் மேல் ஆழியார் அணை என்று சொன்னேனல்லவா? அதுதான் என்னுடைய காட்டின் வாசம். அதன் பின் மீண்டும் கோயமுத்தூர் வந்து சிரமங்கள் பல பட்டு நகரங்களின் அவலங்களை மகிழ்ச்சியாய் ஏற்று கொண்டு மாபெரும் இந்த நகர்த்தில் ஏதோ ஒரு துளியூண்டு இடத்தில் அமர்ந்து விட்டோம். அப்பாடி என்று சந்தோசப்பட்டு கொண்டிருக்கிறோம்.
இடைபட்டு போயிருந்த கல்லூரி படிப்பை முடித்து அதன் பின் ஒரு தொழில் கல்வியை கற்று எப்படியோ ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்று வாழ்க்கையின் இறுதியில் நிற்கும்போது நான் உணர்ந்ததென்ன?
காட்டைவிட்டு நகரத்துக்கு வந்து பத்திருபது வருடங்கள் கழித்து, ஒரு முறை மீண்டும் நான் வசித்த காட்டுபகுதியை பார்க்கலாம் என்று நண்பர்களுடன் சென்ற போது….
அது காட்டிய அமைதி, குளுமை, எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்னும் சுற்றுப்புறம், அக்கம் பக்கம் “இங்க யானைங்க அடிக்கடி வரும்” அருகில் இருக்கும் காட்டுவாசியான ஒருவர் சொன்ன தகவல்..
ஓ..எத்தனை அருமையான சூழ்நிலையை விட்டு சென்று விட்டிருக்கிறோம். மனம் தவித்தது. இருந்தாலும் மீண்டும் நகர வாழ்க்கையின் பாசம், மனதுக்குள், (அது சினிமா, தொலைகாட்சி, அலைபேசி, அல்லது குடும்ப பாசம்,, எது வேண்டுமானாலும் இருக்கலாம், சட்டென மனதுக்குள் பற்றி கொள்ள மீண்டும் நகரத்தை நோக்கித்தான் வந்தோம்.
காடு மெளனமாய் அப்பொழுதும் பார்த்து கொண்டிருந்தது. அதனுள் நான் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி அதற்கு அக்கறை இல்லை, நான் வேண்டுமானால் இதனுள் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்னும் மனகரம் கொள்ளமுடியும். காடு அப்படியல்ல, காரணம் அது இயற்கை. என்னை போன்ற மனிதர்களை எப்படி வெளியே துப்பிவிட்டிருக்கிறது என்பதில்தான் அதன் திறமை. இது போல எத்தனை பேர் அதுவும் என்னைப்போல…