மெளனத்தின் குரல்

மெளனத்தின் குரல்

மெளனம் என்பதே காத்திரமான ஒரு எதிர் குரல்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எந்த ஒரு பேச்சுக்களுக்கும் முடிவு இந்த மெளனத்தின் மூலமே முடிவு கட்டப்படுகிறது.
அப்படி காட்டப்படும் மெளனம் அந்த பேச்சு பொருளை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதா? இல்லை அதன் தீர்வு தள்ளிப்போட்ப்பட்டுள்ளதா? என்னும் கேள்வியைத்தான் இந்த ‘மெளனம்’ விதைத்து விட்டு சென்று விடுகிறது.
அதே போல் ‘மெளனம்’ என்பது நாம் நினைப்பது போல சாத்வீகமானது அல்ல, அதனுள் எப்பொழுதும் வெடித்து கிளம்பும் ஆக்ரோசம் இருக்கும். அது எப்பொழுது வெளிப்படும் என்பதில் தான் மெளனத்தின் வெற்றி இருக்கிறது.
நாம் எப்பொழுதும் பேச்சுவார்த்தையை நம்புகிறவர்கள். பெருமளவு பேச்சுவார்த்தைகள் அடுத்து நடக்க இருக்கும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. என்றாலும் முடிவு தெரியாத இந்த மெளனப்பூச்சு அடுத்து இந்த பேச்சுவார்த்தைகளை எங்கு கொண்டு போகப்போகிறது என்னும் கேள்வியை விதைக்கிறது.
இருந்தும் நாம் மெளனத்தை பாராட்டி கொண்டுதான் இருக்கிறோம். காரணம் நிறைய சொல்ல முடியும். குடும்பம் என்று எடுத்து கொண்டால் கணவன் பேச்சுக்கு மனைவி மெளனமாக இருப்பின் அது குடும்பத்தில் தன் செல்வாக்குக்கு கிடைத்த மரியாதை என நினைத்து கொள்கிறான்.
இதே எதிர்ப்பதமாக மனைவி சொல்லுக்கு கணவனின் மெளனம் மனைவியின் சாமார்த்தியமாக அவளால் ஏற்று கொள்ளப்படுகிறது.
ஆனால் உள்ளார்ந்த நிலைப்படி மெளனத்தை இப்படி வரிசைப்படுத்தலாம்.
1. சரியாத்தான் இருக்கும்
2. சரின்னு சொல்லிட்டு தப்பா போயிட்டா நீயும் சரின்னு சொன்னியே நம் மீதே திருப்பபடலாம்.
3. இவங்கிட்ட,எத்தனை தடவை எடுத்து சொன்னாலும் தான் சொன்னதையே சரீன்னு சொல்லிகிட்டிருப்பான் இப்படிப்பட்ட எரிச்சலில் மெளனத்தை கடை பிடிக்கலாம்.
4. எதுக்கு இப்ப இதைபத்தி பேசணும்? அப்புறமா பேசலாம், இதற்கு பதில் தருவதுதான் மெளனம்
இவைகள் ஒரு உதாரணமாக சொல்ல்பட்டிருக்கும் ஒரு நிகழ்வு. இதே காதால் தீவிரத்தில் இரு பாலாரும் சொல்வதற்கு மெளனமே பதிலாக கிடைக்கும், இதனால் இருபாலாரும் மனதுக்குள் சந்தோசித்து கிளுகிளுத்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அது வெறும் பத்து அல்லது அரை மணி ஒரு மணி நேர சந்திபு மட்டுமே என்பதை மறந்து விடுவார்கள். ஒன்றாக இருந்து பார்க்கும்போது தான் இருவருமே எந்தளவுக்கு உளறிகொட்டியிருக்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள். அப்படியும் ஒரு சில புத்திசாலிகள் “நல்ல வேளை நாம் ஊமையாட்டம் இருந்துட்டோம்” மனதுக்குள் மகிழ்ச்சியும் அடைபவர்கள் உண்டு.
மற்றபடி மெல்லிய மனம் படைத்த படைப்பாளிகளுக்கு “மெளனம்’ என்பது பெரும் வரப்பிராசாதம். அதை பற்றி பல கவிதைகளையும் கதைகளையும் வரைந்து தள்ளலாம்.
ஆனால் அனுபவசாலிகளை கேட்டு பாருங்கள் “மெளனம்” எவ்வளவு பெரிய ஆபத்துக்களை உருவாக்க வல்லது என்று.
அரசியலை எடுத்து கொள்வோமே, அரசியல்வாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டமென்ன, நாடே ஏதோ இவர்களாலே நடந்து கொண்டிருப்பதாகவும், சூரியனும், நிலவும் கூட இவர்களது ஆணையின் படி நடப்பதாகவும் அளப்பார்கள். இப்படி ஆள்பவர்களும், எதிர்ப்பவர்களும் தங்களுக்குள் வசைமாறி கொண்டிருக்க மக்களின் எண்ண ஒட்டங்கள் வெளிப்படையாக தெரியும் வரை ரிசல்ட் நமக்கே என்னும் நம்பிக்கையில் இருப்பார்கள்.ஆனால் மக்கள் இவர்களின் எந்த ஆர்ப்பாட்டங்களையும் கண்டும் காணாமல் மெளனமாய் இருப்பதாய் தெரிந்தால் அவ்வளவுதான் அவர்களின் நிம்மதி காணாமல் போய்விடும்.
அப்படி இருந்தும் ஒரு சில அரசியல்வாதிகள் அடித்து விடுவார்கள் “மக்களின் மெளனப்புரட்சி” எங்களை அடுத்த ஆட்சிக்கு கொண்டு போகப்போகிறது” என்று. சும்மா சொல்வதுதானே அடித்து விடுவோமே..!
இயற்கையின் மெளனத்தை பார்த்திருக்கிறீர்களா? புயலுக்கு முன்னே அமைதி என்றுதான் சொல்கிறார்கள். அமைதி என்பது என்ன? “மெளனம்” தான். அதுவரை மெளனமாய் இருந்த பூமி அல்லது கடல் நொடியில் பிளந்து பெரும் பூகம்பத்தையும் கடற் சீற்றத்தையும் கொண்டு வந்து விடுகிறது அல்லவா? அதுவரை எந்த முன்னறிப்பும் காட்டாமல் ‘மெளனமாய்’ இருக்கும் எந்த சூழ்நிலையும் நம்ப தகுந்தது அல்ல.
நாமே சில சமயங்களில் இப்படிபட்ட வார்த்தைகளை சொல்கிறோம் “அவன் வள வளன்னு பேசுவான்” ஆனா அப்படி செய்ய மாட்டான் என்போம். அதே நேரத்தில் அவன் ஊமையாவே இருக்கறப்ப நினைச்சேன் இப்படி வில்லங்கம் பண்ணூவான்னு தெரியும்.
அதாவது நாமே மெளனத்தை “ஊமை நாடகம்” என்று விளித்து, அதனால் நேர்ந்து விட்ட சிக்கலை மனதுக்குள் ஏற்று கொள்கிறோம்.
மெளனத்தின் மூலம் பல நன்மைகளும் கிடைக்கத்தான் செய்கிறது.
1. தடித்து கொண்டே போகும் பேச்சுவார்த்தை சட்டென மேற்கொள்ளப்படும் யாரோ ஒருவரின் மெளனத்தால் அமைதியாகி விடுகிறது
2. சிக்கலை தள்ளிப்போடுகிறது
3. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நோக்கி நகர்த்துகிறது
4. சில நேரங்களில் சம்மதத்திற்கு அறிகுறியாகவும் எடுத்து கொள்ளப்பட்டு சமாதானமடைகிறது.
5. ஒவ்வொருவரின் அன்பின் பரிமாணத்திற்கு அடிப்படை காரணமாகிறது
6. கோப, தாபங்கள் தணிக்கப்படுகிறது


இப்படி பல நன்மைகளை இந்த “மெளனத்தின் குரல்” மூலம் கிடைத்தாலும் “சரி தவறு” என்னும் தீர்மானமான ஒரு இறுதியை இந்த மெளனம் காட்டுவதில்லிய என்பதால் இதனை பற்றிய நூற்றுக்கு நூறு மதிப்பீடுகள் தவறாகத்தான் போகும் என்பது அனுபவசாலிகளின் அனுபவம். அதை அவர்கள் பலருக்கு எடுத்து சொன்னாலும் நாம் அதை சட்டை செய்யாமல் நகர்ந்திருப்போம்.
காரணம் நாம் நினைக்கும் வெற்றி இந்த மெளனத்தின் மூலம் எதிராளியிட மிருந்து கிடைத்து விட்டதாக நம்புவது.
அடுத்து அவன் அல்லது அவள் நம்மை கண்டு பயந்து விட்டாள் அல்லது “ன்” என்று தவறாக கணித்து கொள்வது.
மெளனம் சம்மதத்திற்கு அறிகுறியும் அல்ல, பிரச்சினைகளின் தீர்வும் அல்ல, அது அடுத்து மேற்கொள்ளப்போகும் நடவடிக்கையின் முன்னேற்பாடுதான் என்று எண்ணிக்கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Apr-25, 4:03 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 12

மேலே